தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெற்றிப் படங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில், குறைந்த முதலீட்டில், அறிமுக இயக்குநர் மற்றும் நட்சத்திரங்கள் கூட்டணியில் வெளியான படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பு பெற்று வருகின்றனர். அந்த வகையில், கிரைம் நாவல் மன்னன் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதை, திரைக்கதையில், இயக்குநர் பி.நித்தியானந்தம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வயலெட் கனவு’ படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.ஹாலிவுட் எழுத்தாளர்களைப் போல் ஒரு திரைப்படத்திற்கு தேவையான சுவாரஸ்யம் மற்றும் விறுவிறுப்புடன் தனது நாவல்களை எழுதக்கூடிய திறன் படைத்த எழுத்தாளர் ராஜேஷ்குமாரின், மிகவும் புகழ்பெற்ற நாவலை அப்படியே திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டட இயக்குநர் பி.நித்தியானந்தம் D.F.T, திரை மொழியில் பார்வையாளர்கள் மிரளும் வகையில் ஒரு உளவியல் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக இப்படத்தை இயக்கியுள்ளார்.
அப்பு மூவிஸ் சார்பில் பாபு தூயவன் D.F.T மற்றும் ஏ.முஸ்தரி M.Sc., இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் நாளை (நவம்பர் 20) திரையரங்குகளில் வெளியாகிறது.
படம் குறித்து இயக்குநர் பி.நித்தியானந்தம் D.F.T கூறுகையில், “ஆபாவாணன் சார், நான் எல்லாம் திரைப்பட கல்லூரியில் ஒன்றாக படித்தோம். பிறகு அவருடன் பணியாற்றினேன், பிறகு நான் படம் இயக்க தொடங்கினேன். தொலைக்காட்சி தொடர்களில் பிஸியானதால் திரைப்படம் இயக்குவதை நிறுத்த வேண்டியதாயிற்று. ராஜேஷ்குமார் சாரின் சில நாவல்களை, ஓடிடி மற்றும் யூடியுப் சேனல்களுக்காக சிறிய அளவிலான படமாக இயக்கி வைத்திருந்தேன். அதை பார்த்த தயாரிப்பாளர் பாபு தூயவன், இதுபோல் எனக்கும் ஒரு திரைப்படம் இயக்கி கொடுங்கள் என்றார். இப்படி வேண்டாம், இதை விட பெரிய அளவில் பண்ணலாம் என்று சொல்லி, தான் இந்த படத்தை தொடங்கினேன்.

இது ஒரு உளவியல் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர். ராஜேஷ்குமார் சாரின் நாவல்களை படிக்கும் போதே ஒரு திரைப்படம் பார்ப்பது போல் தான் இருக்கும். அந்த வகையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யாமல் அவரது கதை, திரைக்கதையில் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன்.
கடும் போட்டிக்கு நடுவே நவம்பர் 20 ஆம் தேதி படம் வெளியாகிறது. பலர் ஏன் இந்த தேதியில் வெளியிடுகிறீர்கள், என்று கேட்கிறார்கள். மற்றப் படங்கள் வருகிறது, என்று ஒவ்வொரு வாரமும் பார்த்தால் நம்ம படத்தை வெளியிட முடியாது. எங்க படத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் ரசிகர்களை எங்கள் படம் ஏமாற்றாது. பாடல், ஆக்ஷன் என அனைத்துவிதமான கமர்ஷியல் அம்சங்கள் அடங்கிய, அதே சமயம் ரசிகர்களை மிரள வைக்கும் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக ’வயலெட் கனவு’ இருக்கும்.” என்றார்.












