சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் எம்ஜிஆர் சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். விழாவில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகர்கள் நாசர், பிரபு, விஜயகுமார், நடிகைகள் சரோஜா தேவி, சச்சு, லதா, அம்பிகா, இயக்குனர் பி.வாசு, தயாரிப்பாளர் தாணு, வி.ஜி.சந்தோசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது,,”இது பல்கலைக்கழக விழா என்று நினைத்துக் கொண்டிருந்தால் இது கட்சி மாநாடு மாதிரி உள்ளது. இதை அரசியல் மேடை ஆக்கக்கூடாது என்று பார்த்தேன். ஆனால், நண்பர் ஏ.சி.எஸ் திரியைக் கிள்ளிபோட்டு விட்டார்.முதலில் நான் என் ரசிகர்களுக்கு நான்வை க்கும் வேண்டுகோள். பேனர்கள், கட்- அவுட்களை பொதுமக்களுக்கு இடையூறா இருக்கும்படி வைக்க வேண்டாம் என்று சட்டம் உள்ளது. அதை நாம் கொஞ்சம் மீறி இருக்கிறோம். இனி அப்படிச் செய்ய வேண்டாம். அப்படி இடையூறு ஏற்பட்டிருந்தால் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்க வேண்டாம்.” ”ஜெயலலிதா இருக்கும்போது ஏன் நீங்கள் அரசியலுக்கு வரவில்லை? பயமா என்று கேட்கிறார்கள். எனக்கு எதற்கு பயம்? ஜெயலலிதா இருக்கும்போதே 1996-ல் வாய்ஸ் கொடுத்தவன் நான்.தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது என்று நினைத்து வருகிறீர்களா என்று கேட்கிறார்கள். தமிழகத்தில் நல்ல தலைவனுக்கு வெற்றிடம் உள்ளது என்பது உண்மை. நல்ல திறமையான, சக்திவாய்ந்த இரு தலைவர்கள் இருந்தார்கள். ஜெயலலிதாவின் ஆளுமை குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. ஜெயலலிதா போல கட்சியை இந்தியாவில் யாரும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கவில்லை.
எனது நண்பர் கருணாநிதி 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாதபோதும் கட்சியை கட்டிக்காத்தவர். பல தலைவர்களை உருவாக்கியவர். அவர் தற்போது உடல் நலமில்லாமல் இருக்கிறார். இந்த சூழலில் தமிழகத்துக்கு ஒரு தலைவன் தேவை. அந்த இருவரின் இடத்தை நிரப்புவதற்கு நான் வருகிறேன். நம் பக்கம் ஆண்டவனே இருக்கிறார்” எம்ஜிஆர் சிலையை திறக்க அழைத்தபோது எனக்கு அந்தத் தகுதி இருக்கிறதா? என்று கேட்டேன். எம்ஜிஆர் திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்தவர். அவர் திரையுலகிருந்து வந்தவர், ஜெயலலிதா திரையுலகிலிருந்து வந்தவர். அந்தத் தாய் வீட்டிலிருந்து வந்தவன் என்ற முறையில் எம்ஜிஆர் சாருக்கு பெரிய மரியாதை செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.எனக்கும் எம்ஜிஆருக்கும் பெரிய பந்தம். அது யாருக்கும் தெரியாது. ஏன் இன்னொருத்தர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரக்கூடாது. நாங்க மேக்கப் போட்டு உங்க ஹீரோயின் கூட நடிக்க வந்தோமா? நீங்கள் மட்டும் ஏன் கரைவேட்டி கட்டி அரசியலுக்கு வருகிறீர்கள் என்று கேட்கிறார்கள்.நான் சொல்கிறேன், அய்யா நான் என் வேலையை ஒழுங்கா பார்க்கிறேன். ஆனால் நீங்கள் உங்கள் வேலையை ஒழுங்காக செய்யவில்லையே, 96-லேயே என் மீதும் அரசியல் தண்ணீர் பட்டுவிட்டது. கருணாநிதி, மூப்பனார், சோ மூலம் நானும் கொஞ்சம் அரசியல் கற்றுக்கொண்டேன்.இந்த மக்களுக்கு எதாவது செய்யவேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் வரவேற்க வேண்டாம், ஏன் எதிர்க்கிறீர்கள். அரசியல் முள், பாம்பு, கல் நிறைந்த பாதை என்று எனக்கும் தெரியும். உங்களுக்கும் தெரியும். இதை எல்லாம் இருந்தும் இந்த வயதில் அரசியலுக்கு வர வேண்டும் என்று வந்துள்ளேன். என்னை வாழ்த்த வேண்டாம், ஏன் திட்டுகிறீர்கள்.எனக்கு இந்த திட்டும் அரசியல் வேண்டாம்.
எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது. சத்யமாக யாரும் எம்ஜிஆர் ஆக முடியாது. ஆமாம் எம்ஜிஆர் யுக புருஷர், அவரைப்போல் ஆகவேண்டும் என்று நினைத்தால் அந்த நபரைவிட பைத்தியக்காரன் யாரும் இருக்க முடியாது.ஆனால் அவரது ஆட்சியை மக்களுக்கு கொடுக்க முடியும். என்னால் கொடுக்க முடியும். மக்களின் ஆசியுடன், இளைஞர்கள் ஆதரவுடன், நல்ல டெக்னாலஜி வைத்து திறமைசாலிகளை உடன் வைத்து என்னால் அரசியல் தர முடியும். ”இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.