
தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவையின் தலைவர் பாரதிராஜாவுக்கும், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் சீனிவாசனுக்கும் இடையில் நடந்த ‘தேவையற்ற’ பலப்பரீட்சையில் பாவம் சீனிவாசன் என்றாகி விட்டது. சாவு வீட்டில் பிணம் ஒரு பக்கம் கிடக்க மறுபக்கத்தில் கல்யாணத்துக்கு பரிசம் போட்டால் அது நியாயமா? காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், ஸ்டெர்லைட் ஆலை மூடல் ஆகிய தமிழர் நலம் தொடர்பாக நாடே குமுறிக் கொண்டு இருக்கும்போது ‘நான் குத்தாட்டம் நடத்துவேன்’ என்பதைப்போல கிரிக்கெட் போட்டி நடத்தினால் உணர்வுள்ள தமிழர்கள் பொறுப்பார்களா?
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மேல் வெயிலும் ஏறியது. உணர்வாளர்களின் உஷ்ணமும் அண்ணாசாலையில் எகிறியது. முதலில் வேல்முருகனின் தமிழர் வாழ்வுரிமைக்கட்சியினர் மைதானத்தின் ஒரு வாசலுக்கு பூட்டுப் போட்டு விறு விறுப்பைக் கூட்டினர். இதன்பிறகு குமுறல் அண்ணா சாலையில் நிலை கொண்டது .அலை அலையாக வந்த இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆவேசத்துடன் பேரணியாக மாறினார்கள். கொண்டு வந்திருந்த மோடி,எடப்பாடி படங்களை நெருப்பிட்டனர். அடிமைகள் ஆட்சி ஒழிக என முழக்கமிட்டனர்.
ஆயிரக்கணக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு விட்டார்கள். போலீசாருக்கு என்ன செய்வதென தெரியவில்ல.திகைத்துப்போனார்கள் என்றுதான் சொல்லமுடியும்.அடித்துக் கலைக்க முடியாது. அது தேன் கூட்டில் கல் எறிந்த கதையாகி விடும். இரவு என்றால் கண்டமேனிக்கு அடித்து விடலாம். மாலை நேரம் என்பதால் கலவரம் நகரம் முழுவதும் பரவி விடக்கூடும்.
அதனால் அமைதி காக்க பாரதிராஜா,வைரமுத்து, அமீர், வெற்றிமாறன், வ.கவுதமன்,( இவர் போலீசிடம் எப்போது தனியாக மாட்டப் போகிறாரோ.அந்த அளவுக்கு காட்டத்தில் இருக்கிறார்கள்.)வி.சேகர், சீமான்,களஞ்சியம்,இன்னும் பலரை கைது செய்தார்கள்.
போலீசாரிடம் பாரதிராஜா கேட்ட அனுமதிதான் இன்னமும் புரியாத புதிராக இருக்கிறது.” மைதானத்துக்கு செல்லக்கூடிய யாராவது ஒருவரிடம் கேள்வி கேட்கவேண்டும்” என்றார். ஓஒ ..அறவழிப் போராட்டம் என்பதன் பொருள் இதுதானா?
இதன் பின்னர் அதிரடிப்போலீஸ்காரர்களை வைத்து அடி பின்னி விட்டார்கள். ஆபீசிலிருந்து வீட்டுக்கு திரும்பியவர்களையும் விட்டு வைக்கவில்லை.பின்புறத்தில் அடி! கடைக்கரர்களையும் கடையை அடைக்க சொல்லி மிரட்டினார்கள். நான்கு மணி ஆர்ப்பாட்டம் நடந்தபோதும் கடையை அடைக்காதவர்களை போலீஸ் மிரட்டி அடைக்க சொன்னது கொடுமைதான்!
முக்கியமான கிளைமாக்ஸ் மைதானம்தான்! இன்னுமொரு சிறப்பு வைரமுத்து முதன்முதலாக களம் இறங்கியதுதான்.
நாற்பதாயிரம் பேர் அமரக்கூடிய ஸ்டேடியத்தில் நாலாயிரம் பேர் இருந்தாலே ஆச்சரியம்தான்! அந்தளவுக்கு பலவீனமான பட்டியல்.!












