நன்றாக பழகும் இந்தி நடிகர்கள் சில சினிமா பிரபலங்களிடம் சிக்கி விட்டால் அவர்களை வைத்து விளையாடி விடுவார்கள். அவர்களும் அதை காமடியாகவே எடுத்துக் கொள்வார்கள். இப்படி விளையாடியவர்களில் ராதாரவியை அடுத்து தற்போது பிரபலமாகிவிட்டார் ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன். தமிழில் திருமந்திரம் உள்பட சைவ நூல்களை படித்து தேர்ந்தவர். அவர்தான் சில ‘நல்ல’வார்த்தைகளை ஜாக்கிக்கு சொல்லிக் கொடுத்து அவரும் அதை புரிந்து கொண்டு…. செம கலாட்டா.!
எல்லாம் கஸ்தூரிராஜாவின் ‘பாண்டிமுனி’ பட தொடக்கவிழா சந்திப்பில் தான் தெரிந்தது. இதில் ஜாக்கிக்கு அகோரி வேடம். அசத்தலாக இருக்கிறது. பாண்டியம்மாவாக கொல்கத்தா நடிகை மெகாலி கருப்பியாக அசத்தி இருக்கிறார்.
“வீட்டிலேயே டைரக்டர்கள்,நடிகர்கள் என்று இருக்கிறபோது நீங்கள் ஏன் குரங்கு,பாம்பு,சாமியார் என்று ராம நாராயணன் மாதிரி படம் எடுக்க ஆரம்பித்திருக்கிறீர்கள்?” என்று இயக்குநர் கஸ்தூரி ராஜாவிடம் கேட்க, அவர் நெடிய விளக்கம் தந்தார்.
“நான் யார் பாணிக்கும் மாறவில்லை.இந்த சப்ஜெக்ட் பிரமாதமாக வரும் என்று தலை நிமிர்ந்து திமிரோடு சொல்வேன். முதலில் ராஜ் கிரண், சரத் இருவரிடமும் கதையை சொன்னேன்.வேவ் லேந்த சரியாக வரல. அதன் பின்னர்தான் ஜாக்கியிடம் சொன்னேன்.எனது கற்பனைக்கு அவ்வளவு பொருத்தமாக அமைந்திருக்கிறார். கொல்கத்தா நடிகை மெகாலி திறமைசாலி. நிகிதா படேலுக்கு முக்கியமான கேரக்டர் .அவருக்கு என்ன மாதிரியான காஸ்ட்யூம் என்பதில் மூன்று நாளாக யோசித்தோம். ஆனால் கடைசியாக அவரே அமைத்த டிசைன்தான் செட் ஆச்சு!” என்றார் கஸ்தூரிராஜா.
ஜாக்கி எவ்வளவு ஜாலியான ஆள் என்பதற்கு பி.ஆர்.ஓ.மவுனம் ரவி ஒரு நிகழ்வை சொன்னார். அதாவது ஏவி.எம். படப்பிடிப்பு அரங்கத்திலிருந்த விஜயகாந்தை ஜாக்கிக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
அப்போது தன்னுடன் நடித்துக் கொண்டிருந்த ரம்யா கிருஷ்ணனை விஜயகாந்த் அறிமுகம் செய்திருக்கிறார். அவரது அருகிலிருந்த ரம்யாவின் அம்மாவையும் அறிமுகப்படுத்த ஜாக்கி போட்டிருக்கிறார் பாருங்கள் ஒரு அம்பு!
“ஓ மாமியார்!” என்றதும் அத்தனை பேரும் குறும்பை ரசித்திருக்கிறார்கள்.