ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் ஜே எஸ் அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா. இந்தப்படத்தை மதுராஜ் இயக்கியுள்ளார்.
நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற கேரளமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மிக முக்கியமான கேரெக்டரில் எம்.எஸ்.குமார் அறிமுகமாகிறார்.
இவர்களுடன் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கஜராஜ் (இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அப்பா), தீப்பெட்டி கணேசன், அபூர்வா சஹானா, மைனா சூஸன், கூல் சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் மதுராஜிடம் படம் பற்றி கேட்டபோது, “ ஒவ்வொரு அறிமுக இயக்குநருக்கும் முதல் படம் என்பது மறுபிறப்பு மாதிரி… அதற்கு தாயாக இருப்பவர் தயாரிப்பாளர்தான். எனக்கு கிடைத்த தயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணக்குமார் உண்மையாக ஒரு தாய் போல இந்த சினிமாவை நேசித்ததால்தான் என்னால் இவ்வளவு வேகமாக ஒரு தரமான படத்தை எடுக்க முடிந்தது. 

வீணா அழகான யதார்த்தமான நடிப்பில் கெட்டி… முதல் சில நாட்கள் மொழி தடுமாற்றம் இருந்தாலும்.. பணக்கார வீட்டு கிராமத்துப் பெண்..காதல் திருமணம் செய்துகொண்டு எளிமையாக வாழும் கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். படம் முடிந்து வரும்போது இயக்குநர் ஏ. வெங்கடேஷ் மற்றும் எம் எஸ் குமார் மனதில் ஒட்டிக்கொண்டு நிற்பார்கள்.
மிக முக்கியமாக.. இந்த படத்தில் காதல் கட்டப் பஞ்சாயத்துகள் அதன் தீவிரத்தால் பாதிக்கப்படும் காதலர்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளோம். எங்க ஊரில் இந்த வேலையை செய்பவர்களுடன் கூடவே பல நாட்கள் தங்கியிருந்து நேரில் பார்த்த சம்பவங்களை இதில் பதிவு செய்துள்ளேன். ஒரு பையனை நெடுஞ்சாலையில் பாரிகார்டில் கட்டிப்போட்டிருந்தனர். சில பல பேச்சுவார்த்தைகள்.. பணப்பேரம் நடந்த பின், அந்த பையனை பெண்ணிடமிருந்து பிரித்து பெங்களூருக்கு மிரட்டி அனுப்பி வைத்தனர்..
அந்த ஒரிஜினல் தாதாக்களை என் படத்தில் அவர்களாகவே நடிக்க வைத்துள்ளேன். அவர்களுக்கு தாங்கள் நடிக்கிறோம் என்பது மட்டும்தான் தெரியும்.. தாங்கள் நிஜத்தில் செய்யும் வேலையைத்தான் படத்திலும் செய்கிறோம் என்பது படம் வெளியானால்தான் அவர்களுக்கே தெரியும். படம் வெளியான பின் அவர்களுக்கு ஓடி ஒளிய வேண்டுமா? இல்லை மன்னிப்பார்களா? தெரியாது.
என்கிறார் இயக்குநர் மதுராஜ்.