வருகிற வெள்ளிக்கிழமை வரவிருக்கிற படங்களில் ஆடியன்ஸ் இண்டஸ்ட்ரி இரண்டின் எதிர்பார்ப்பு, கலைப்புலியாரின் ’60 வயது மாநிறம் ‘ படம்தான்.
மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அளித்த ஆதரவு கண்டு இண்டஸ்ட்ரி மிகுந்த நம்பிக்கையுடன் அறுபது வயது மாநிறத்தை எதிர்நோக்கி இருக்கிறது.
முக்கியமான மூவர் ஒன்றாக நடித்துள்ள படமாக இருப்பதால் வணிகரீதியான வெற்றியைத் தரும் என நம்புகிறார்கள்.
நடிகர் திலகம் வாழ்ந்த காலத்திலேயே எஸ்.வி.ரெங்காராவ்,, எஸ்.வி. சுப்பையா ஆகிய குணசித்திர நடிகர்களின் படங்கள் குடும்ப ஆதரவு பெற்றவையாக அமைந்திருந்தன. அந்த மூவரும் இணைந்து நடித்த படங்கள் வசூலை வாரிக் குவித்தன.
பிரகாஷ்ராஜ் குணசித்திரமாக நடிக்கக்கூடியவர். கொடிய வில்லனாக நடிப்பவர் ஆயிற்றே என யாரும் வெறுப்புக் காட்டாமல் ரசித்து வருவது அவரது தனித் தன்மை. தொலைந்து போன தந்தையாக நடித்திருக்கிறார். நிச்சயம் நெஞ்சினைப் பிசைவதாக இருக்கும்.
தேடுகிற மகனாக விக்ரம் பிரபு. இதுவரை இது போன்ற கேரக்டர்களில் அவர் நடித்ததில்லை. நடிகர் திலகத்தின் பெருமையை காப்பாற்றும் பொறுப்பு இவருக்கு இருக்கிறது .அப்பா பிரபுவும் சிறந்த நடிகர் என்பதால் இருமடங்கு வெயிட் விக்ரம் பிரபு மீது இருக்கிறது. சமுத்திரக்கனியும் சாதாரணமானவர் அல்லர். பிரகாஷ்ராஜ். சமுத்திரக்கனி என்கிற இரண்டு பெரிய தலைகளுக்கு ஈடு கொடுத்து நடித்தாக வேண்டும். கண்டிப்பாக வேலை வாங்கி இருப்பார் இயக்குநர் ராதா மோகன் என்கிற நம்பிக்கை ஆடியன்சுக்கு இருக்கிறது..
ஏனெனில் ராதா மோகனின் எல்லாப் படங்களும் குடும்பமுடன் சென்று பார்க்கிற படங்களாகவே இருந்திருக்கின்றன. வசனங்கள் இவரது படத்தில் ஆழ் மனதை பிசையும் வகையில் அமைவது தனித்தன்மை. ஆக வருகிற வெள்ளிக்கிழமையானது ரசிகர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் அமிர்த யோகமாகவே இருக்கப்போகிறது. கல்யாணச்சாப்பாடு என்றால் பாயாசம் இல்லாமல் நிறைவு பெறுவது இல்லை. அந்த நிறைவைத் தரப் போகிறவர் இசைஞானி இளையராஜா.