
இயக்குநர் கணேசா கொஞ்சம் வித்தியாசமாகத்தான் யோசனை பண்ணிருக்கார்.
தம்பியின் முகத்தில் அம்மாவைப் பார்க்கும் அண்ணன். படிப்பில் கவனம் செலுத்தாத தம்பியை திருத்துவதற்காக அவர் படித்துப் பாஸ் பண்ணி சப்-இன்ஸ்பெக்டர் ஆகிறார்.!திருந்தாத தம்பியை அவரே போட்டுத் தள்ள இங்கே ஆரம்பிக்கிறது அவருக்கு ‘இன்சோம்னியா’ தூக்கமின்மை வியாதி. இன்ஸ்பெக்டராக பதவி உயர்வும் கிடைக்கிறது. சிறுவர்களை கிரிமினலாக மாற்றி ஏரியாவையே கலக்கிவருகிறார் மீசை பத்மா. சிறுவர்கள் மத்தியில் மீசை பத்மாவின் இமேஜை டேமேஜ் பண்ணினால் மீசைக்கு இருக்கும் மவுஸ் குறைந்து விடும் என கணக்குப் போட்டு காய்களை நகர்த்துகிறார் .போட்ட கணக்கு சரியா, தப்பா என்பது தான் கதை.
கஞ்சி போடாத காக்கிச்சட்டை விஜய் ஆண்டனி .காங்கிரஸ்காரர்களே மறந்துவிட்ட காந்திய வழியில் நடந்து பார்த்திருக்கிறார் . சொந்த தம்பியின் இழப்பு, கூட்டுக்குள் இருந்து அவ்வப்போது தலையை நீட்டும் காதல், மீசை பத்மாவை சவாலுக்கு இழுத்து முடக்கிப் போடும் சாதுர்யம், ஏழைகள் மீது காட்டும் இரக்கம் என வாழ்ந்திருக்கிறார் .வலிய வந்தும் காதலிக்கும் நிவேதா பெத்துராஜை இமாஜினேஷன் காட்சியிலாவது விஜய் ஆண்டனியுடன் சில்மிஷம் செய்ய வைத்திருக்கலாம். லிப் கிஸ்சின் எபெக்ட்ஸ் போதாது இயக்குநரே! “போலீஸ் எல்லாம் புடுங்கிதான் ” என்று சினம் கொண்ட பாம்பாக மாறுகிற விஜய் ஆண்டனியை இயக்குநர் மேலும் சில காட்சிகளில் குமுற வைத்திருக்கலாமே! .அவரை அமைதிப்பூங்காவாக காட்டியதை குறைத்திருக்கலாம்.
வெளுத்து வாங்கி இருக்கிறார் நிவேதா பெத்துராஜ் . ‘கை’ நீட்டாத காவல்துறை உண்டா? கையேந்திகளாக இருப்பதற்கான காரணங்களை எஸ்.ஐ.,ஏட்டு,கான்ஸ்டபிள் அடுக்குகிறபோது வாழ்ந்திருக்கிறார் வசனகர்த்தா.
மீசை பத்மாவாக சாய் தீனா. உண்மையில் இவர் ஒரு மார்க்சியவாதி. கைத்தடியாகவே வந்து கொண்டிருந்த இவருக்கு முக்கிய வேடம் கொடுத்திருக்கிறார்கள். இவரையெல்லாம் வைத்துக் கொண்டுதான் அண்டை மாநிலங்களில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்கிறோம்.திறமைக்கு மதிப்புக் கொடுங்கப்பா !
மகனை ரவுடி கும்பலிடம் இருந்து மீட்கப் போராடும் கேரக்டரில் பத்திரிகையாளர் சு.செந்தில் குமரன் . நடிகனுக்கு வேண்டிய பன்முக தோற்றம் .கவுன்சிலரிடம் மோதி புரளவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.வாழ்த்துகள்.
செவியை இரைச்சல் இட்டு நிரப்பாமல் இசையை வைத்து நிரப்பி இருக்கிறார் விஜய் ஆண்டனி.
கமர்ஷியல் கலெக்சன் படம்.












