“பத்தாம் தேதியே விஸ்வாசம் வந்தாகணும்” என உறுதியாக அஜித்குமார் நின்றதாக வெளியான செய்திக்கு காரணம் இல்லாமல் போகவில்லை.
மிகப்பெரிய மீடியா பீரங்கியுடன் மோதவேண்டுமே என்கிற அச்சம் அடுத்தவர்களுக்கு இருந்தது. சர்வ வல்லமை பொருந்திய தொலைக்காட்சி ,வானொலி,பத்திரிகைகள் என ஆயுதங்கள் பேட்ட தயாரிப்பாளர் வசம்.
ஆனால் விஸ்வாசத்துக்கு ரசிகர்கள் மட்டுமே பலம்.
அத்தனை ஆயுதங்களின் முயற்சியையும் ரசிகர்கள் முறியடித்து பேட்ட ய பின்னுக்குத் தள்ளி விட்டு,விஸ்வாசத்தை முதல் இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிற திரைப்பட ஆய்வாளர்களின் கருத்து இன்று திரை வட்டாரங்களில் கொண்டாடப்படுகிறது..
குடும்பங்கள் கொண்டாடும் படமாகி இருக்கிறது விஸ்வாசம்.
1 9 9 2 -ல் சூப்பர் ஸ்டாரின் பாண்டியன், உலகநாயகனின் தேவர்மகன் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளி வந்தன. அன்றும் உச்சத்தில்தான் ரஜினி இருந்தார். ஆனால் கமல்ஹாசனின் தேவர் மகன்தான் பாக்ஸ் ஆபிசில் பெரிய ஹிட் அடித்தது.
கிட்டத்தட்ட 2 7 ஆண்டுகள் வரை வசூல் சக்கரவர்த்தியாகவே ரஜினி இருந்தார் .ஷங்கரின் படமான 2. 0 படம் உலக அளவில் சாதனை செய்தது.
ஆனால் பேட்ட ?
விஸ்வாசத்துக்கு முன் சிறிய வித்தியாசத்தில் முதல் இடத்தை இழந்து விட்டதாக சொல்கிறார்கள்.
அஜீத்குமாருக்கு அரசியல் பின்னணியோ,மன்றங்களின் அணிவகுப்போ எதுவும் கிடையாது. மன்றங்களே வேண்டாம் என கலைத்து விட்டு இருக்கிற ஆள்.
பொது நிகழ்ச்சிகளையும் புறக்கணிக்கிற ஆள். பத்திரிகையாளர்கள் கூட அணுக முடியாத அளவுக்கு அரண் அமைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர். அவரைப்பற்றிய செய்திகளே ஊகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டு வருபவைதான்!
அத்தகையவரின் ரசிகர்கள்தான் இந்த வெற்றிக்கு முழுக்காரணமாக இருக்கிறார்கள்.
ஆக,’தல’அஜித்துக்கு உண்மையான போட்டியாளர் தளபதி விஜய்யாகத்தான் இருக்கமுடியும் என்கிற எண்ணம் தற்போது வந்திருக்கிறது.
இருவரது படங்களும் ஒரே நாளில் மோதுகிற நாளினை தமிழ்நாடு எதிர்பார்க்கிறது.