
கருப்பு சிந்தனை. முரட்டுத்தனமாகவே இருக்கும்.
ஏறி மிதிக்க முயற்சி செய்பவனின் காலை இழுத்து கீழே வீழ்த்தி ஒடிக்க முயற்சிப்பது தற்காப்புதான்!
இந்த சிந்தனை திராவிடனுக்கு மட்டுமே உண்டு.
புராண காலம்தொட்டு அடிமையாக்கப்பட்டு நிற்கிற இனம்தான் தமிழினம்.
இவனுக்கு எத்தனை பெரியார் வந்தாலும் சொரணை என்பது வரப்போவதில்லை.
என்றைக்கு வாக்குச்சீட்டுக்கு காசு வாங்கத் தொடங்கினானோ அன்றே அவன் அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டு விடுகிறான்.
பொதுவாக பெரியார் இயக்க மேடைகளில் சத்யராஜை மட்டுமே பார்க்க முடியும்.
இப்போது சிம்புவையும் பார்க்க முடிகிறது. ஈழத்தமிழனுக்கு உண்மையான நண்பன்!
பெரியார் குத்து பாடிய சிம்புவுக்கு பெரியார் பட்டறையில் வாழ்த்து சொன்னார்கள்.
அப்போது பேசியவைதான் இனி வாசிக்கப்போவது.
“சின்ன வயதிலிருந்து நிறைய மேடை பார்த்துள்ளேன். சினிமா, ஸ்கூல் ஆகிய மேடைகளைத் தாண்டி இந்த மேடை எனக்கு ரொம்பவே ஸ்பெஷலானதாக இருக்கிறது.. இதைப் பாராட்டு என்று நினைப்பதை விட, இதில் எனக்கும் ஒரு இடம் கிடைத்துள்ளது என்று நினைக்கும் போது சந்தோஷமாக உள்ளது.
ஒரு மதத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால், அதற்கான புத்தகத்தை படித்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். ஆனால், பெரியாரைப் பற்றி படிக்க வேண்டுமானால் “கடவுளை மற… மனிதனை நினை” அவ்வளவு தான்.
முதலில் ஒரு மனிதனாக இன்னொரு மனிதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், பிறகு எப்படி கடவுளைப் பற்றி புரியும்.
இவ்வளவு பேர் சினிமாவில் இருக்கும் போது, மனதில் பட்டதை பேசிவிடுகிறீர்கள், உங்களைச் சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள், எதைப் பற்றி கவலைப்பட மாட்டேன் என்கிறீர்கள் என்று பலரும் கேட்பார்கள்.
அந்த தன்னம்பிக்கைக்குக் காரணம் எங்கப்பா டி.ஆர் தான். அதற்குப் பிறகு மனதில் பட்டதை என்ன வேண்டுமானாலும் பேசலாம், அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை என்ற தைரியத்தைக் கொடுத்தது பெரியார் தான். அதனால் மட்டுமே என்னால் அப்படிப் பேச முடிகிறது.
முதலில் நாம் நாமாக இருக்க வேண்டும். பெண் விடுதலையைப் பற்றி பலரும் பேசியிருக்கிறார்கள். ஆனால், ஒரு ஆண் மகனாக பெண் விடுதலையைப் பற்றி பேசியது சாதாரண விஷயமில்லை. நாம் அனைவரும் எதை வேண்டுமானாலும் சார்ந்து இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் பிரிந்திருக்கலாம். ஆனால் உணர்வால் எப்போதுமே ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் பெரியரைக் கொண்டு போய் சேர்க்கவில்லை என்றால், அவரைப் பற்றி தெரிந்து கொண்டதற்கு பிரயோஜனமே இல்லாமல் போய்விடும். அதற்காகத் தான் இப்பாடலைப் பாடி, ஆடினேன். இதனை ‘பெரியார் பாடல்’ என்று போடாமல் ‘பெரியார் குத்து’ எனப் போட்டோம். ஏனென்றால், அவர் பேசியது எல்லாம் குத்து மாதிரி தான் இருந்தது.
அப்பாடல் வெற்றியடையக் காரணம் நானல்ல, பெரியார் மட்டுமே காரணம். “












