வைகைப் புயல் ஓய்ந்து விட்டது.!
சந்தானம் சந்தனமாக கரைந்து போனார்.
சூரி சூறைக்காற்றில் எங்கே போய் ஒட்டிக் கொண்டார் என்பது தெரியவில்லை.
இடையில் வந்தவர்கள் கிச்சு கிச்சுக் காட்டிவிட்டு கிடைத்தவரை பஞ்சாமிர்தம் என உள்ளங்கையை நக்கிவிட்டு ஓய்ந்து விட்டார்கள்.
அதிர்ஷ்ட தேவதைக்கு இந்த வாட்டி மொக்கையான (மதுரைப் பக்கம் குண்டான ஆட்களை ஆளைத்தான் இப்படி மொக்கை என்பார்கள்.) பிடித்திருக்கிறது.
பம்பைத் தலையாக இருந்தாலும் வார்த்தை வசீகரம் யோகிபாபுவுக்கு.!
இறுக்கமாக பிடித்துக் கொண்டிருக்கிறாள் மனிதரை.!
நகைச்சுவை நடிகர்களில் இப்போது முன்னணியில் இருப்பவர் யோகிபாபு. நாயகனாக தர்மபிரபு ஜாம்பி என இரு படங்கள்.
விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் நடித்துக்கொண்டிருக்கிறார்.
. காலையில் ஒரு படப்பிடிப்பு, மாலையில் ஒரு படப்பிடிப்பு இரவில் மற்றொன்று என எல்லாப் படங்களுக்கும் போய்வந்துகொண்டிருக்கிறார்
.இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது என்கிறார்கள்..
அந்தப்படத்தில் யோகிபாபு கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று ரஜினி சொல்லிவிட்டதால் அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் ரஜினி படத்தில் நடிக்க யோகிபாபு போகவிருப்பதால் அந்தத் தேதிகளில் யோகிபாபுவை வைத்து படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தவர்கள் சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
காமடியன்களுக்கு வந்த பஞ்சத்தைப் பாருங்களேன்!