
அளவுகோல்களுக்குள் அடக்கிவிட முடியாத ஆற்றல் மிகுந்தவர்கள் தமிழ்ச்சினிமாவில் இருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவர் மகேந்திரன்.
முள்ளும் மலரும் மகேந்திரன் என அழைப்பார்கள்.
இயக்குநர் பாலு மகேந்திராவைப் போல இவரும் ஒரு ‘லெஜன்ட்’
கடந்த சில மாதங்களாக உடல் நலமற்று இருந்தார். திரைப்பட கலைஞர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நோயோ என்னவோ,சிறுநீரக ஒத்துழைப்பு இவருக்கும் கிடைக்காது போயிற்று.
அப்போலோ மருத்துவமனையில் டயாலிசஸ்.
அதுவும் உடலுடன் இயைந்து செயல்பட மறுக்கிறது.
தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.
இயக்குநர் கதாசிரியர் ஜான் மகேந்திரன் கேட்கிறார்.
“எல்லோரும் அப்பாவுக்காக பிரார்த்தியுங்கள்!”
ஒவ்வொரு ரசிகனுடைய கடமை.
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கதாநாயகனுக்கு உரிய பட்டயம் வழங்கப்பட்டதற்கு காரணமாக இருப்பவர் மகேந்திரன்.இவரது படம் முள்ளும் மலரும் படத்தில் ரஜினியின் வில்லன் முகமூடி நீக்கம் பெற்றது.ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் வெளியில் வந்தார்.நாயகன் கிடைத்தார்.
நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தமிழ்த் திரை உலகமே திரண்டு வந்திருக்கிறது.ஆட்டம் பாட்டு என கொண்டாட்டமாக குதூகலிக்கிறது.
அதில் ஒரு அங்கமாக ரஜினியை பேட்டி காண்கிறார் குரு பாலசந்தர்.
அதில் ஒரு கேள்வி.
“நீ யாருடைய இயக்கத்தில் நடிக்க விரும்புகிறாய்?”
“மகேந்திரன் சார்!”
“பார்த்தியா, இப்பக்கூட எம் பேரை சொல்லலியே” என சிரிக்கிறார் கே.பி.
குருவும் சீடனும் சேர்ந்து சிரிக்கிறார்கள். நெஞ்சம் மறப்பதில்லை.
காலத்தினால் மீண்டும் தர முடியாத ஒப்பற்ற கலைஞனை வாழ விடு இறைவா!












