
கதை,நடிப்பு இயக்கம்: விஜயகுமார், இசை :கோவிந்த் வசந்தா,
ஒளிப்பதிவு: பிரவீன் குமார், நடிகர்கள்: விஜயகுமார், சுதாகர். விஸ்மயா,
தயாரிப்பு.:சூர்யா.
**************************************************
இந்தக் கதை உங்களை சிந்திக்க வைக்கவில்லை என்றால் அது உங்களின் குற்றம் என சொல்வதற்கு தயங்கப் போவதில்லை. நமது இன்றைய வாழ்வியலோடு ஒத்துப் போகிற கதை.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நினைத்துக்கொள்க . விழித்துக்கொள்ளுங்கள் என்பதை அறிமுக இயக்குநர் விஜயகுமார் சிவப்பு சிந்தனையுடன் சொல்லியிருக்கிறார். கதை நிகழுமிடம் செங்கதிர் மலை. நாயகனின் பெயர் லெனின் விஜய்.
போபால் நச்சு வாயு கசிவினால் இன்றைய தலை முறை வரை பாதிக்கப்பட்டிருப்பதை கவனத்தில் வைத்துக் கொண்டு படத்தைப் பாருங்கள்.
கொழுத்த முதலாளி வெளிநாடுகளில் உரத் தொழிற்சாலை தொடங்க திட்டமிடுகிறார். அதன் நச்சுத்தன்மையை அறிந்து அங்கே தடை செய்யப்படுகிறது. அதனால் இந்தியாவுக்கு ஷிப்ட் பண்ணுகிறார். அரசியல்,லஞ்சம் தலைவிரித்தாடுகிற இங்கு அமைச்சரின் துணையுடன் அந்த தொழிற்சாலை செங்கதிர்மலை கிராமத்தில் தொடங்கப்படுகிறது.
இங்கு தயாராகிற மருந்தினால் விலை நிலங்கள் பாழாவதால் வெளிநாடுகள் தடை செய்ய அதையே இங்கு பூச்சிக்கொல்லி மருந்தாக விற்கிறார்கள். எதிர்பார்த்த லாபம் இல்லை .உற்பத்தி டபிள் ஆகிறது. கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த லெனின்விஜய் மற்றும் அவரது நண்பர்களுக்கு அங்கு ஏதோ ஏடாகூடம் நடக்கிறது என்பது புரிகிறது.
இந்த சமயத்தில்தான் மித்தில் ஐஸோ சயனைடு நச்சு வாயு கசிய அந்த கிராமமே உயிர் மூச்சு விடத் திணறுகிறது. அம்மோனியா கசிவு என்று சொல்லி நிர்வாகம் யாரையெல்லாம் சரிக்கட்டுமோ சரிக்கட்ட இளைஞர்கள் கிளர்ந்து எழுகிறார்கள். என்ன நடக்கவேண்டுமோ அதை பாரதியின் “அக்னிக்குஞ்சு ஒன்று கண்டேன்.அதை அங்கொரு பொந்திடை வைத்தேன்,வெந்து தணிந்தது காடு !தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?தத்தரிகிட தித்தோம்” என்பதின் வழியாக சொல்கிறார்கள்.
பாரதியின் வீரமிகு வரிகளை நெல்லை கண்ணன் ,அல்லது ஜெயகாந்தன் குரல் சொல்லியிருக்குமானால் அதன் ரேஞ்சே வேறு.!
முதல்பாதியில் சற்று வேகம் குறைவு. குட்டித் தூக்கமே வந்து விட்டது.ஆனால் சாதித் திமிர் பிடித்தவர்களை திருக்கை வால் கொண்டு நாலு இழுப்பு இழுத்திருப்பது வரவேற்க வேண்டியது.சாதி சங்கம் அப்படியே அரசியல் கட்சியாக மாறியதை சொல்ல தமிழகத்தில் ஆண்மை தேவைப்படுகிறது. அது லெனின் விஜய்யிடம் இருக்கிறது.
நச்சு வாயு கசிவினால் மக்கள் படும் உயிர் வலியை இயல்பாக படம் பிடித்திருக்கிறார்கள். தான் செத்தாலும் பரவாயில்லை தன் பிள்ளை உயிர் பிழைக்கவேண்டும் என்று துடிக்கிற தாய் பிள்ளையை அலமாரிக்குள் வைத்தது.. கண்கள் கசிந்ததய்யா.!
போலி வாக்குறுதி கொடுப்பதற்காகவே மோடி மாதிரி ஒரு மத்திய மந்திரி.இணைத்தயாரிப்பாளர் ராஜசேகரே நடித்திருக்கிறார்.
விஜயகுமார்-விஸ்மயா காதலில் மென்மை!
ஆனால் முற்பாதியில் மது,புகை ஆதிக்கம் அதிகம்.கதைக்கு அவசியம் என்றாலும் அளவை குறைத்திருக்கலாம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தை மையமாக வைத்து உறியடித்திருக்கிறார்கள்.
ஜனநாயகம் தோல்வியுறுமானால் அதன் மாற்று வழி இதுவாகத்தான் இருக்கும் என்பதை கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.
தேர்தல் நேரமிது. தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி இந்த படத்தை பயன்படுத்திக்கலாம்.
சினிமா முரசத்தின் மார்க் 3/ 5![]()












