பல சினிமா நிகழ்ச்சிகள் வெட்டியாய் கலைந்து செல்லும்.
சொந்தக்கதைகள், சோகக்கதைகள், வெட்டி வம்புகள்,நாளைய செய்திக்காக வலிந்து சொல்லப்படும் தகவல்கள் என பிரமுகர்கள் ‘பொன்னாடைகளை‘ வாங்கிக் கொண்டு போய் விடுவார்கள். அது மேஜை விரிப்புக்கு மட்டுமே!. துவைத்தால் பிய்ந்து போய்விடுகிற கவுரவம்.
சில நிகழ்ச்சிகள் சிந்தனைக்கு விருந்து.
மனதின் அடித்தளத்தில் உறைந்துபோய்க் கிடந்து விடும்.
அன்றைய இரவில் அது உருகி இளகி மனதின் வெளிப்பக்கம் வந்து கேள்விகளை கேட்கும்.
அப்படி ஒரு நிகழ்வுதான் முந்திரிக்காடு திரைப்பட முன்னோட்ட விழா.
பொதுவுடமைத் தலைவர் திருமிகு நல்லகண்ணு, பெருமைக்குரிய பொதுவுடமைத் தலைவர் சி.மகேந்திரன், போராளி சீமான் ,எழுத்தாளர் இமயம் ,தோழர் ராஜு முருகன்,ஆகியோர் கலந்து கொண்ட விழா.
தொகுப்பாளர்களின் நெடிய புகழுரைகளை இந்த விழாவிலும் கேட்க நேர்ந்தது. அவர்களின் சொல்லாற்றலை வெளிப்படுத்துவதற்கு இத்தகைய மேடைகளை எல்லாத் தொகுப்பாளர்களுமே நீண்ட நேரத்துக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
ஐயா நல்லகண்ணு பேசுகையில் அவரது உள்ளத்தின் வேதனை வார்த்தைகளில் வழிந்தது. “இதற்காகவா நாங்கள் போராடி சுதந்திரத்தைப் பெற்றுத்தந்தோம் .காதலில் கூட உண்மை இல்லாது போயிற்றே! சமூக மாற்றம் எப்போதுதான் நிகழும் ?” என்று கேட்டார்.
இன்றைய போலி அரசியல் தலைவர்கள் என்று போவார்களோ அன்றுதான் உண்மையான சமுதாய மாற்றம் நிகழும் என்பது அவருக்கு தெரியாமல் இருக்காது.
தோழர் சி.மகேந்திரனின் பேச்சு மூளைச்சலவை செய்வது போலிருந்தது. சரியான உதாரணங்கள்,பொருத்தமான வார்த்தைகள், சிறந்த சான்றுகள் என முன் வைத்துப் பேசினார்.
தஞ்சை மாவட்டத்தில் ஆணவக்கொலைகள் எப்படியெல்லாம் நடந்திருக்கிறது என்பதை ஆதாரமுடன்தான் சொன்னார்.காவிக் கட்சிக்காரர்கள்,திராவிடக் கட்சிக்காரர்களைப் போல செங்கொடி பிடிப்பவர்கள் பொய் சொல்வதில்லை.
“ஆணவக் கொலை நடக்கிற போது கூடவே ஒரு எருமை மாடும் கொல்லப்படும். அந்த எருமை என்ன தப்பு செய்தது? எருமையின் வயிறை கிழித்து அதற்குள் ஆணவக் கொலை செய்யப்பட்டவனை திணித்து தைத்து விடுவார்கள். பிறகு புதைத்து விடுவார்கள்.
அவனின் சவத்தைத் தேடினாலும் கிடைக்காமல் போய் விடும்!
தோழர் சொன்னபோது சற்று நேரம் உறைந்து போனேன். நிச்சயம் சினிமாக்காரர்களுக்கு இந்த தகவல் உதவும். ஆனால் தீர்வு என்ன?
தோழர் ராஜு முருகனின் பேச்சு காரமாகவே இருந்தது.
“அதிமுக,திமுக ஆகிய இயக்கங்களை கம்பெனிகள் என்று மறைமுகமாக அடையாளம் காட்டினார். நேரடியாக சொல்வதற்கு ஏன் தயங்கினார் என்பது தெரியவில்லை. பேச்சின் முடிவில் “லால் சலாம் “ என சிவப்புக்கு வணக்கம் சொல்ல முடிந்தவருக்கு அந்த கம்பெனிகளின் பெயரைச்சொல்ல முடியாமல் போனதே?
அன்புடன்,
தேவிமணி