
ரியால்டி ஷோ என்கிற பெயரில் விஜய் டி.வி.யில் நடத்தப்படுகிற பிக்பாஸ் என்கிற சீரியலில் நடிக்கிற ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு இவ்வளவு என லட்சக்கணக்கில் சம்பளம் அல்லது அன்பளிப்பு என கணக்கு செய்யப்படுகிறது.
இதில் அவர்கள் சொல்கிறபடி அதாவது கொடுக்கிற ஸ்கிரிப்ட் படி நடக்கவேண்டும் இதில் கட்டாயம் என்பது எதுவும் கிடையாது. நடப்பதைத்தான் ஒளிப் பரப்பவேண்டும் என்கிற கட்டுப்பாடு கிடையாது.யாரும் கேள்வி கேட்கக்கூடாது.
அண்மையில் மதுமிதா கையில் கட்டுப்போட்ட நிலையில் வெளியேற்றப்பட்டார். காவிரி நதி நீர்ப்பிரச்னை பற்றி தமிழ்நாட்டுக்கு ஆதரவாகப் பேசியதாகவும் ,இதை ஷெரின் “நானும் கன்னடப் பெண்தான் நதி நீர் பற்றியெல்லாம் பேசக்கூடாது” என கண்டித்ததாகவும் இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் உணர்ச்சி வசப்பட்ட மதுமிதா கையை அறுத்துக் கொண்டதாக கூறப்பட்டது.
ஆனால் இதைப் பற்றி விஜய் டிவி நிர்வாகம் வாயைத் திறக்கவில்லை.
இந்நிலையில் மதுமிதா மீது விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் கிண்டி காவல் நிலையத்தில் இன்று புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “விஜய் டிவி-யில் நடந்துக் கொண்டிருக்கும் பிக்பாஸ் -3 என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகை மதுமிதா, தன்னை காயப்படுத்தி கொண்ட காரணத்தினால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது அவரின் காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.
அவர் செல்லும் போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா, ஏற்கனவே 11,50,000 பெற்றுள்ளார். மீதமுள்ள 42 நாட்களுக்கு, ஒரு நாளுக்கு 80,000 ரூபாய் வீதம் பாக்கி பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்தோம்.
அதை அவரும் ஒப்புக் கொண்டு சென்றார். பிறகு கடந்த 19-ம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலமாக, மதுமிதா மிரட்டல் விடுத்துள்ளார். பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் “தற்கொலை செய்து கொள்வேன்” என அதில் அவர் கூறியிருக்கிறார்” என்று அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.












