இவனைப் பெற்றவர்கள் என்ன புண்ணியம் செய்தார்களோ என புகழும் வகையில் சான்றோர் அவையில் மகன் இருக்கவேண்டும் என்கிறது தெய்வப் புகழ் வள்ளுவன் யாத்த தமிழ் வேதம்.!
இதோ தளபதி விஜய்யின் தாய் ஷோபா சந்திர சேகர் எழுதிய பெருமை மிகு கடிதம்.
இது எந்த சூழ்நிலையில் எழுதப்பட்டது என்பது தெரியவில்லை.
பிகில் படம் கூட காரணமாக இருக்கலாம்.
ஆனாலும் தாய்ப்பால் சுரப்பதில் பொய் இருப்பதில்லையே.!
அது சத்தியம் அல்லவா!
அன்பு மகனே,
அதை மீறி வேறென்ன நான் எழுத்தில் வடிக்க விஜய் உன்னைப் பற்றி.
நீ என் கரம் பற்றி நடந்ததை, பின் நடந்ததை எல்லாம் (ஏற்றம், இறக்கம், தோற்றல், போற்றல்) அசைப்போட்டு பார்க்கையில் என் எண்ணங்களின் உச்சிக் குளிர்ந்து என் அகம் எங்கும் வடிகிறதே அந்த நுண்ணிய உணர்வுகளை எந்த காகிதத்தில் வடிப்பது.
அமைதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் ஆர்ப்பரிக்கும் இளவயதில் கூட நீ அமைதியின் அவதாரமாய் இருக்கையில் இயங்குகையில் என் ஆழ் மன ஊற்று பெருகி ஆனந்தம் வடிகையில் அதை எந்த பேனாவுக்குள் மையாய் ஊற்றி எழுத முடியும்.
நீ உன் அழுகை நிறுத்தி, முதல்முதல் உன் பூவிதழ் விரித்து, புன்னகைத்தது முதல் இன்று உன் இதயத்தளவு ரசிகர்களின் பெருவெள்ளத்திற்கு இடையே இன்பத் தவிப்பில் நீ புரியும் புன்னகையை விவரிக்க…
சுருங்கக்கூறின் திரு.எம்.கே.தியாகராஜ பாகவதர், திரு.எம்.ஜி.ராமச்சந்திரன், திரு.ரஜினிகாந்த் வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை கொண்டாட உலகமே காத்திருக்கையில், தாய் என்பதெல்லாம் மறந்து ரசிகர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாய் நானும் அடிக்கிறேன் ஒரு நீண்ட பிகில்…”
இப்படிக்கு,
ஷோபா சந்திரசேகர்.
தாய் / ரசிகை