“ஒரே நாடு,ஒரே மொழி .அது இந்தி மொழியாகத்தான் இருக்க முடியும். அப்போதுதான் காந்தி,படேல் கனவு நிறைவேறும்” இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருக்கிறார்.
அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பார்வைப்படி இவர் அர்ஜுனனோ அல்லது கண்ணனோ யாரோ ஒருவர். ஆனால் சர்வ வல்லமை படைத்த அமைச்சர்.
மோடி,அமித்ஷா இந்த இருவர்தான் இந்திய நாட்டின் வளர்ச்சிஅல்லது வீழ்ச்சிக்கு பொறுப்பேற்க முடியும்.
அமித்ஷாவின் மொழி பற்றிய கருத்தினால் இந்தி பேசாத மாநிலங்கள் கொதித்துப் போய் இருக்கின்றன. எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன.
இந்தி மொழித் திணிப்பு என்பது தமிழக மக்களினால் மறுக்கப்பட்ட ஒன்று.
இந்தி மொழி பேசுவோர் பெரும்பான்மை என்பதால் சிறுபான்மையாக உள்ள மற்ற மாநிலங்கள் மீது திணிக்கப் பார்க்கிறார்கள்.
சுருக்கமாக தமிழக இந்தி ஆதிக்க எதிர்ப்பு நிகழ்வுகளை பார்ப்போம்.
1937- ஆம் ஆண்டு ‘சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ராஜாஜி தலைமையில் அமைந்திருந்த காங்.ஆட்சியில் “தமிழக அரசுப் பள்ளிகளில் கட்டாய இந்தி “கொண்டுவரப்பட்டது.
தந்தை பெரியாரும் அன்று இருந்த ஜஸ்டிஸ் கட்சியினரும் அதை கடுமையாக எதிர்த்தனர்
மூன்று ஆண்டுகள் கடுமையான போராட்டங்கள். அறவழிப் போராட்டங்கள் நடந்தன.ஆனாலும் போலீசார் நடவடிக்கையினால் இருவர் உயிர் இழந்தனர் மாணவர்கள் பெண்கள் 1198 பேர் கைதாகினர்.
1939–ஆம் ஆண்டு காங்.அரசு பதவி விலகியது.
ஆங்கிலேயர் எர்ஸ்கின் என்பவர் ஆளுநர் ஆனார். கட்டாய இந்தி ஒழிக்கப்பட்டது.
இந்திய விடுதலைக்குப் பின்னர் “இந்தி மட்டுமே அரசுப் பணி மொழியாக இருக்கும்” என்கிற சட்டம் 1950- ஆம் ஆண்டு ஜனவரி 26-ல் நடைமுறைக்கு வந்தது.
பேரறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.கழகம் கடுமையுடன் போராடியது.
1965-ஜனவரி 26 குடியரசு நாளை கருப்பு நாளாக அனுசரித்தது. திமுக எடுத்த போராட்டம் மாணவர் கைக்குப் போனது.
மதுரையில் கல்லூரி,பள்ளி மாணவர்கள் பேரணியாகத் திரண்டு நான்கு மாசி வீதிகள் வழியாக எழுச்சி முழக்கத்துடன் சென்றனர். வடக்கு மாசி வீதி வழியாக மாணவர்கள் பேரணி சென்ற போது காங்.கட்சி அலுவலகத்தில் இருந்த வீரையா (பேச்சாளர்.)உள்ளிட்ட சிலர் மாணவர்களை தாக்கவே பேரணி வன்முறையில் முடிந்தது,
தமிழகத்தில் இருந்த அத்தனை கல்லூரிகளும் போர்க்களமாகின .போலீசாருக்கும் மாணவர்களுக்கும் பெரும் போர் என்றே சொல்லுமளவுக்கு கல்லூரிக்குள் புகுந்து தடியடி நடத்தினர். ஆஸ்டலையும் விட்டு வைக்கவில்லை. மாணவர்களின் அறைச் சுவர்கள் ரத்தம் தெறிக்கும் அளவுக்கு மண்டைகள் பிளக்கப்பட்டன. துப்பாக்கிச் சூடுகள்,தீ வைப்புகள் என நடந்தன. ராணுவமும் அழைக்கப்பட்டு அவர்களும் மாணவர்கள் மக்கள் மீது சுட்டார்கள். இறந்தவர்கள் 70 பேர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டன. (ஆனால் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் )இதன் பின்னர்தான் காங் மேலிடம் வாயைத் திறந்தது.
அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் அரசுப்பணிகளில் தொடரும் என அறிவித்தார் .அதன் பின்னர் மாணவர்கள் போராட்டம் நின்றது. 1967-ல் ஆட்சி மாற்றம் தமிழகத்தில் நிகழ்ந்தது.
மொழிப்போர் தியாகிகளை நினைவு கூர்ந்து வந்த திமுகவினர் காலப்போக்கில் மறந்து விட்டதுதான் கொடுமை.
இன்று வரை இந்தி எதிர்ப்பு உணர்வு மங்கவில்லை. இந்த நிலையில்தான் அமித்ஷா “இந்தியே ஒற்றை மொழி” என பிரகடனப்படுத்தி இருக்கிறார்.
இதற்கு தமிழக பாஜக.வைத் தவிர மற்ற அனைத்துக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கடுமையாகவே கண்டித்திருக்கிறார்.
ஆனால் புதிய கட்சி தொடங்க விருக்கிற சூப்பர் ஸ்டார் ரஜினி வாயைத் திறக்கவில்லை.
அவர் பாஜகவின் ஆதரவாளர் என்பதால் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் விசுவாசமாக இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
எல்லோரும் கேட்கத் தொடங்கி இருப்பதால் மழுப்பலான பதிலையாவது சொல்வார் என எதிர்பார்க்கலாம்