காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தால் எங்கே சுழல் இருக்கும் என்பது தெரியாது. நீச்சலில் வல்லவர்களாக இருந்தாலும் சுழல் அவர்களை உள்ளே இழுத்துக் கொண்டுவிடும். மீண்டு வருவது மறு வாழ்வு என்பார்கள். அங்கே புதை மணலும் இருக்கிறது.
அரசியலும் அப்படித்தான்!
சுழலும் .புதை மணலும் இல்லாமல் அரசியல் இல்லை.
தமிழ்ச் சினிமாவிலும் அரசியல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி இருக்கிறது.
ஏற்கனவே அரசியல் அங்கே இருந்தாலும் தற்போது அதிகாரம் செலுத்தும் அளவுக்கு புகுந்து இருக்கிறது.
இதனால் வெறுப்பு உணர்வு ஒரு சிலரிடமும் ,ஒதுங்கிப்போகும் எண்ணம் பலரிடமும் காணப்படுகிறது. ஆளும் அரசிடமும் ,அந்தக் கட்சியிடமும் அரசியல் சார்பற்ற அமைப்புகள் அனுசரித்துப் போக வேண்டும் என்கிற எண்ணம் விதைக்கப்பட்டு வருகிறது.
தமிழ்ச்சினிமாவின் மிகப்பெரிய அமைப்புகளான தயாரிப்பாளர்கள் சங்கம்,தென்னிந்திய நடிகர் சங்கம் இரண்டும் முடக்கப்பட்டு அரசின் அலுவலர்களால் இயக்கப்படுகிறது. நடிகர் சங்கத்தின் தேர்தல் முடிவும் இந்த வருடமே அறிவிக்கப்படுமா என்பதும் சந்தேகமே.!
அதிமுகவின் ஆதரவாளர்களாக பகிரங்கமாக அறியப்பட்டவர்களை அரசே அங்கீகரித்து சங்க நிர்வாகத்துக்குள் புகுத்தி இருக்கிறது. அவர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவான நிலைகளை உருவாக்கி வருகிறார்கள்.
ஆர்.வி.உதயகுமார்,லியாகத் அலிகான் இருவரும் அதிமுகவின் அனுதாபிகள் .இன்னும் சிலர் இருக்கிறார்கள். லியாகத் பகிரங்கமாக விழா மேடைகளுக்கு வருவதில்லை.ஆனால் இயக்குநர்கள் சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கிற உதயகுமார் பங்கேற்கும் கூட்டங்களில் அரசு தரப்புக்கு ஆதரவான கருத்துகளை வெளியிடத் தயங்குவதில்லை.
அண்மையில் நடிகர் விஜய் பேசிய பேச்சுக்கு மறைமுகமாக கண்டித்து ஒரு விழாவில் பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.