“விரைவில் அரசியலுக்கு வருவேன் ” என்று தனது ரசிகர்களுக்கு உறுதியும் ஊக்கமும் கொடுத்துக் கொண்டு இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அண்மைக்கால அவரது படங்களில் அரசியல் முழுமையாக இல்லாவிட்டாலும் தொட்டுக்கொள்ளும் அளவுக்கு துவையல் மாதிரி இருந்தது. அவரது பிம்ப உயர்வுக்கு உதவியாகவும் இருந்தது.
அவரது அரசியல், ஆளுகிற வர்க்கத்துக்கு உதவியாக இருக்குமா,அல்லது அடிவாங்குகிற வர்க்கத்துக்கு ஆதரவாக இருக்குமா என்பது எதிர்பார்ப்பு. அதாவது ‘ஆதரவு’ என்பது அதிக பட்சம் . அடிமைப்பட்டுக் கிடக்கும் வர்க்கத்துக்கு உதவியாக இருக்குமா என்றெல்லாம் நம்மால் எதிர்பார்க்க முடியாது.
ஏனெனில் அவரது ஆன்மீக அரசியல் அதற்கு இடம் கொடுக்காது. அடிமைப்பட்டுக் கிடக்கும் மனிதன் , ஆகமம் கற்றுக் கொண்டு அவனும் அர்ச்சகர் ஆகலாம் என சொல்வதற்கு அவரது ஆன்மீக அரசியலில் இடம் இருக்காது என நம்பலாம்.
இந்த நிலையில்தான் தர்பார் திரைப்படத்தில் அரசியல் இல்லை என்பதாக இயக்குநர் ஏ. ஆர் முருகதாஸ் சொல்லியிருக்கிறார். எத்தகைய ‘ஜானர்களை’ ரஜினி கடந்து வந்திருக்கிறாரோ அந்த பழைய பாணிக்கே திரும்புகிறார் என்பது இன்றைய கால கட்டத்துக்கு அவசியம் இல்லாதது.
அரசியல் என்பது பாவச் செயல் இல்லையே.!
அறம் படம் பேசாத அரசியலா? அதாவது நாட்டு நடப்பை ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் துணை கொண்டு சொல்லவில்லையா?
ரஜினியின் படம் அரசியல் பேச வேண்டும் . அவர் பேச வில்லை என்றால் அரசியலை விட்டு விலகுவதற்கு அடி எடுத்துக் கொடுக்கிறாரோ என்கிற எண்ணம் விதைக்கப்பட்டுவிடும்.
படம் முடிந்து விட்ட நிலையில் இதைச்சொல்வதில் பயனில்லை என்பதும் தெரியும்.!