மழை அடித்துப் பேய் மழையாகப் ( யாராவது பேயைப் பார்த்திருக்கிறீர்களா) பெய்ய வில்லை என்றாலும் நச நச வென நச்சு மழை.!
சென்னை சாலைகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. சேறும் குண்டும் குழியுமாக , ஆமைகளை அடுக்கி வைத்தது போல.!
ஆனாலும் சத்யம் தியேட்டரில் கூட்டத்துக்கு குறைவில்லை.
சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரமின் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் ஆடியோ விழாவுக்கு ரசிகர்கள் குவிந்து விட்டார்கள்.
ஆதித்யவர்மா மிக மிக எதிர்பார்க்கப்படுகிற படம். இயக்குநர் பாலாவின் கையை விட்டுச்சென்ற படம்.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசியவர்கள் எவர் மனதும் புண்படாமல் பேசியது ஆறுதலாக இருந்தது.
துருவ் பேசியபோது “எங்கப்பா சிறந்த நடிகர் என்பது தெரியும் ஆனால் அவர் நடிகர் என்பதை விட மிகச்சிறந்த அப்பாவாகவே இருந்திருக்கிறார். இந்த படத்தின் வளர்ச்சியில் நூறு சதவீதத்துக்கும் அதிகமாகவே பெரு முயற்சியுடன் பங்காற்றியிருக்கிறார். இந்த படமே எங்கப்பாவின் யங்கர் வெர்ஷன்தான்!”என்றார்.
மகன் இந்த அளவுக்குப் பேசினால் சீயான் விக்ரம் எந்த அளவுக்கு பேசியிருப்பார் என்பதை யோசித்துப் பாருங்கள். உருக்கி விட்டார்.உருகி விட்டார் .
“என்னுடைய படத்துக்காகக்கூட நான் இந்த அளவுக்கு டென்சனாக இருந்ததில்லை. என் மகளின் கல்யாணத்துக்காக எவ்வளவு அக்கறையுடன் பாடுபட்டேனோ அந்த அளவுக்கு என் மகனின் இந்த படத்துக்காகவும் செயல்பட்டிருக்கிறேன். துருவ் ஆக்கபூர்வமாக முடிவு எடுக்கக்கூடியவர். அதனால் அவருடைய முடிவுகளில் நாங்கள் தலையிடுவதில்லை .
இந்த படத்துக்கு நண்பர் சிவகார்த்திகேயன் ஒரு பாட்டு எழுதினால் சிறப்பாக இருக்குமே என்று காலையில் அவருடன் போனில் பேசினேன்.அன்று மாலையே பாடல் ரெடி. அவர்க்கு எங்களின் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சீயான் மனதினை திறந்து கொட்டி விட்டார்.