அதர்வா முரளி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்க, எம்.கே.ஆர்.பி.புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் மூன்றாவது படத்தின் படப்பிடிப்பு முடியும் தறுவாயில் இருக்கிறது. பதினைந்து நாள் படப்பிடிப்புக்காக படக்குழு ரஷ்யாவில் உள்ள அஜய்பெர்ஜான் பறக்க இருக்கிறது.
இது குறித்து இயக்குநர் கண்ணன் தெரிவித்ததாவது…
“பழைய மகாபலிபுரம் சாலையில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட வீடு ஒன்றில் படப்பிடிப்பை நடத்தினோம். இதைத் தொடர்ந்து, பதினைந்து நாள் படப்பிடிப்புக்காக ஒட்டு மொத்த படக்குழுவும் அஜய்பெர்ஜான் புறப்பட இருக்கிறது. இத்துடன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விடும்.
கதையை மீண்டும் படமாக்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் நான் விரும்பினேன்.
குடும்ப ரசிகர்கள் அனைவருக்கும் இது மகிழ்ச்சியூட்டும் படமாக அமையும் என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். வெகு விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட இருக்கிறோம்” என்றார்.
அதர்வா முரளி அனுபமா பரமேஸ்வரன் பிரதான வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில், வி.ஐ.பி.புகழ் அமிதஷ் பிரதான், ஆடுகளம் நரேன், காளி வெங்கட், ஜெகன், வித்யுலேகா ராமன், ஆர்.எஸ்.சிவாஜி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இயக்குநர் கண்ணனே திரைக்கதை எழுதியிருக்கும் இப்படத்தின் வசனம் மற்றும் பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார். ஷம்மி என்கிற சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.கே.செல்வா படத்தொகுப்பை கவனிக்கிறார்.