“நேற்று அதிசயம் அற்புதம் நடந்தது. இன்று அதிசயம் நடக்கிறது. நாளை அற்புதம் அதிசயம் நடக்கலாம்” என்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அழுத்தம், திருத்தமுள்ள பதிவு.
உலகநாயகன் கமல்ஹாசனின் ‘உங்கள் நான் ‘என்கிற திரை உலக வரலாற்று நிகழ்வில் ரஜினி சொன்ன அர்த்தமுள்ள வாசகம்.
இது கலையுலக வாழ்வுக்கும் பொருந்தும். அவர்கள் சார்ந்துள்ள அரசியலுக்கும் பொருந்தும்.
ரஜினிகாந்த் நிகழ்கால அரசியலையும் ,எதிர்வரக்கூடிய அரசியல் மாற்றத்தையும் குறித்து சொல்லியிருப்பாரா?
‘இதை நினைத்துத்தான் சொன்னேன்’ என அன்றே அவர் சொல்லியிருந்தால் அவர் வெறும் நடிகனே .! சொல்லாததால் அவர் ஒரு சாணக்கியனாக பார்க்கப்படுகிறார்.
மனதுக்குள் கமலும் அவரும் இணைந்தே ஒரு திட்டத்தை வகுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டுமே யூகிக்க முடிகிறது. அது என்னவாக இருக்கும்? அரசியலா ,கலை உலக தொடர்பானதா?
ஒரு முடிவுக்கு வரமுடியாததால்தான் ஆளும் கட் சியினர் ரஜினியை கடுமையுடன் சாடி வருகிறார்கள்.
குறிப்பாக மத்தியிலும் மாநிலத்திலும் ஆளக்கூடிய கட்சிகளுக்கு இவர்கள் மிகப்பெரிய மிரட்டலாக இருப்பார்கள் .அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு இவர்கள் தவிர்க்க இயலாத சக்தி. டிசைடிங் ஃ பாக்டர். அரசியலை பொருத்தவரை நம்மால் இந்த அளவுக்குதான் சுருக்கமாக சொல்லமுடியும்.
ஆனால் கோலிவுட்டில் வேறு அர்த்தம் சொல்லப்படுகிறது.
உலகநாயகன்-சூப்பர் ஸ்டார் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கிற அதிசயத்தைத் தான் அன்றைய விழாவில் சூசகமாக சொல்லியிருக்கிறார் என சொல்கிறார்கள்.
எதை அடிப்படையாக வைத்து அவர்களால் இப்படி கணிக்க முடிகிறது?
‘கைதி ‘படம் தந்த மகத்தான வெற்றி தளபதி விஜய்யை தனது அடுத்த படத்துக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜை ஒப்பந்தம் செய்ய வைத்தது .கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனலுக்கு கதை கேட்க வைத்தது. லோகேஷ் கனகராஜை தனது இல்லத்துக்கு வரவழைத்து ரஜினியை கதை கேட்க வைத்தது. அந்த அளவுக்கு லோகேஷ் கனகராஜிடம் சரக்கு இருக்கிறது.
கமல் ரஜினி இருவர்க்கும் சொன்ன கதைதான் அவர்களை இணைக்கும் சங்கிலியாக மாறியதாக சொல்கிறார்கள்.
எப்படி?
கதையை கேட்ட கமல்ஹாசன் “அது தனக்கும் ரஜினிக்கும் சேர்ந்து நடிக்கிற வாய்ப்பை கொண்டிருந்தததால் ” அந்த கதையை ரஜினிக்கும் சொல்லும்படி லோகேஷிடம் சொல்லியிருக்கிறார். இதன் பின்னரே கதையை கேட்டிருக்கிறார் ரஜினி.
இருவருக்குமே கதை பிடித்துப் போனது.
கமல்-ரஜினி இருவரும் இணைந்து 8 தமிழ்ப்படங்கள்,இரண்டு தெலுங்குப் படம் , ஒரு இந்திப் படம் என 11 படங்களில் நடித்திருக்கிறார்கள்.
இருவருமே அரசியலில் ஈடுபட இருப்பதால் அதற்கு முன்னதாக அதிரடியாக ஒரு படத்தில் இணைந்து நடிப்பதற்கு தீர்மானித்திருக்கலாம் என சொல்கிறார்கள்.லோகேஷ் கனகராஜின் கதை அவர்கள் இருவரின் இமேஜ்க்கு இம்மியளவும் பாதிப்பு வராத அளவுக்கு அமைந்திருக்கிறது. இந்த படத்தின் வழியாக இருவரது ரசிகர்களும் மாச்சரியங்களை மறந்து ஒன்றுபட உதவலாம் என நினைக்கிறார்கள் என்கிறார்கள்.
இந்த படத்துக்கு முன்னதாக இருவருக்குமே இரண்டு படங்கள் முடிவடைய வேண்டியது இருக்கிறது. ஆகவே போதிய அவகாசம் இருப்பதால் அந்த படத்தை தேர்தலுக்கு முன்னதாக வெளியிடலாம் என கோலிவுட்டில் கருதுகிறார்கள்.
தேர்தலுக்கு முன்னதாக எதுவும் நடக்கலாம்.அது அரசியல் கூட்டணியாகவும் இருக்கலாம். இருவரும் இணையும் திரைப்படமாகவும் இருக்கலாம்.