வைகைப் புயல் வடிவேலுவின் அரசியல் என்ட்ரி அவரை ஓரமாக ஒதுக்கி வைத்தது.
அதையும் தாண்டி சில படங்கள் கதை வலுவின்றி நொண்டி அடித்தது. முடிவாக இம்சை அரசன் புதிய படத்தில் ஒப்பந்தமாகி தொடக்கத்திலேயே இயக்குநர் சிம்பு தேவனுடன் முட்டல் ,மோதல் என தொடங்கி அந்த படம் டிராப் ஆனது. கோலிவுட்டில் இருந்து வடிவேலுவும் டிராப் ஆனார். பல வருடங்கள் கேமராவை பார்க்கவே இல்லை.பெரும்பாலும் சொந்த ஊரான மதுரையில் தான் இருந்தார்.
உலகநாயகன் கமல்ஹாசன் முயற்சியினால் மீண்டும் கோடம்பாக்கத்தில் வாய்ப்பு என்கிற கேட் திறந்தது. ராஜ்கமலின் தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலுவுக்கும் முக்கிய பார்ட் கொடுக்கப்பட்டது.
ஆனால் கமலின் காலில் நடந்த ஆபரேஷன்,அவரது அரசியல் அஜெண்டா இவைகளினால் தலைவன் இருக்கின்றான் படம் தள்ளிப் போகலாம் என்கிற சூழல் இருக்கிறது.
ஆனால் வெப் சீரியலில் நடிப்பதற்கு எந்தவித தடையுமில்லை என்பதால் வடிவேலுவை அங்கு வரவேற்க தயாராகி விட்டார்கள். ரெட் கார்பெட்..சிவப்பு கம்பள வரவேற்பு..இரட்டைமடங்கு சம்பளம் ..!வடிவேலுவின் வெப் உலக பயணம் தொடங்கப் போகிறது.
பெரிய திரையில் நடிப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போனால் சின்னத்திரை என்று சிலருக்கு வாழ்வு கொடுத்திருக்கிறது. எதிர்கால சினிமா வெப் என்றாகிவிட்டதால் அதில் நடிப்பதற்கு பெரிய திரை நட்சத்திரங்கள் தயாராகி விட்டார்கள். மாதவன், ரம்யா கிருஷ்ணன்,சமந்தா உள்ளிட்ட பலர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது வடிவேலுவின் என்ட்ரி மேலும் பலருக்கு கதவை திறந்து விடும் என நம்பலாம்.