
“கருணாநிதியை கைது செய்கிறபோது அவர் கதறுகிற சத்தம் எனக்கு கேட்கணும்” என்று போலீஸ் அதிகாரிகளிடம் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா சொன்னதாக ஒரு தகவல் அப்போது பரபரப்பாக பேசப் பட்டது.
இந்த தகவலை உத்திரபிரதேச முதல் மந்திரி ஆதித்யநாத் கேட்டிருந்திருப்பாரோ என்னவோ, அதே உத்தியை பிரியங்கா காந்தியின் மீது உ.பி.போலீஸ் கையாண்டிருக்கிறது.
மத்திய அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் சொல்வதற்காக காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி சென்றிருந்தார். அவரை சந்தித்து ஆறுதல் செல்லவிடாமல் போலீஸ் அதிகாரிகள் அவரை மடக்கி விட்டார்கள்.
அட..ஆறுதல் சொல்லத்தானேய்யா அந்தம்மா போறாங்க. விடக்கூடாதா?
“கூடவே கூடாது .இதற்கு மேல வேன் போகக்கூடாது” போலீஸ் மடக்கி விட்டது.
பிரியங்கா காந்தி இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டார்.
இதன் பின்னர் என்ன நடந்தது.
பிரியங்கா காந்தியே சொல்கிறார்.
“நான் வேனில் இருந்து இறங்கி நடக்கத் தொடங்கியதும் ஒரு பெண் போலீஸ் அதிகாரி என்னுடைய தொண்டையை அழுத்தி நிறுத்தினார்.
இன்னொரு போலீஸ் அதிகாரி பின்னால் இருந்து கொண்டு என்னை கீழே தள்ளிவிட்டார்.
இன்னொரு பெண் போலீஸ் அதிகாரி கழுத்தைப் பிடித்து தூக்கினார். நான் வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தப்பட்டேன் .இருந்தாலும் போலீஸ் அடக்குமுறையை எதிர்த்து ஒவ்வொரு குடிமகனுடனும் நான் நிற்கிறேன்” என்கிறார் ராஜீவ் காந்தியின் பொண்ணு.!












