-
அம்மாவின் பாசம் சினிமாவில் காசு ஆகிறது.
-
ஒரு படத்தின் தலைவிதி 7 நாளே.!
-
கைதட்டல் வாங்க பொய் பேச வேண்டியதாக இருக்கிறது.!
-
காசு சம்பாதிக்கும் கூட்டமே ஆட்சியில்.!
கவிஞர் இந்துமதி பக்கிரிசாமி எழுதிய ‘மழையில் சிவந்த மருதாணி’ என்கிற ஒலிப்புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் இப்படிக்கு செம்பருத்தி ஸ்ரீனிவாசன், என் விரல்கள் விளையாடிய பொழுதுகள், தெக்கத்தி காத்து, என்கிற கவிதைத் தொகுப்புகளும் வெளியிடப்பட்டன. இந்த விழாவில் இயக்குநர் சேரன், தவம் பட இயக்குநர் விஜய் ஆர்.ஆனந்த், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாடகி தஞ்சை சின்னப்பொண்ணு, முனைவர் கவிஞர் இலக்குவனார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் இயக்குநர் சேரன் பேசும்போது, “கவிஞர் இந்துமதி எழுதிய இந்தப் பாடலை கேட்கும்போது ரொம்பவே மனதை உலுக்கி விட்டது.. மேடை நாகரீகம் கருதி அழாமல் உட்கார்ந்து விட்டேன்.. எனக்கு அப்படி ஒரு வாழ்க்கை அமையவில்லை என்றாலும் நிறைய தகப்பன்களுடைய வாழ்க்கைக்களை பார்த்துவிட்டேன்..
அதனால்தான் தவமாய் தவமிருந்து படம் எடுத்தேன்.. இந்த சினிமாவில் தந்தைகளின் பக்கத்தை யாருமே சொல்லவில்லையே என்கிற எண்ணம் எனக்கு நீண்ட நாட்களாகவே இருந்தது..
அம்மா சென்டிமென்ட்டை வைத்து காசு சம்பாதிக்கும் கூட்டமாகவே இந்த சினிமா இருக்கும்போது முதன்முறையாக அப்பாவின் வாழ்க்கையை அப்பட்டமாக சொல்லி இதுதாண்டா உன் வாழ்க்கை, போய் உன் வேலையை பாரு என்று சொல்லி சமூகத்தை மாற்றி விடலாம் என்கிற நோக்கில்தான் அந்த படத்தை எடுத்தேன்..
சினிமாவில் கூட்டத்தோடு கூட்டமாக ஓட வேண்டியிருக்கிறது அப்படி ஓடிக் கொண்டிருக்கும்போதே இதுபோன்ற படங்களை எடுத்து நல்ல விஷயங்களை சொல்ல வேண்டிய கட்டாய சூழலில் தான் நாங்கள் இருக்கிறோம்.. அதனால் யாரும் நம்பிக்கையற்று போய்விட வேண்டாம் உங்களுடைய நம்பிக்கையான வார்த்தைகள் தான் எங்களுக்கு வேண்டும்
இன்றைய சூழலில் தொலைக்காட்சி, செல்போன்கள் எல்லாம் வீட்டிற்குள் நுழைந்து கொண்டு உறவுகளுக்குள் தூரத்தை ஏற்படுத்திவிட்டன..
நம் வாழ்க்கையை இங்கே நாம் யாருமே வாழவில்லை.. அடுத்தவனுக்கு சம்பாதித்து கொடுப்பதற்காக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. பொதுவாக நம்மை நாமே புகழ்ந்து கொள்வதற்காக மேடைகள் விழாக்கள் அமைப்பதுண்டு..
திரைப்பட பாடலாசிரியராக வேண்டும் என்பது ஒவ்வொரு கவிஞருக்குமே ஒரு கனவாக இருக்கும். ஆனால் திரைப்படங்களுக்கு பாடல் எழுதினால் தான் கவிஞர்கள் என்று ஒருபோதும் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்..
முன்பெல்லாம் ஒரு திரைப்படம் குறைந்தபட்சம் 50 நாட்கள், 100 நாட்கள் என்று ஓடின.. அப்படி அந்தப்படம் ஓடும்போது ஒவ்வொரு நாளும் யாராவது ஒருத்தர் அந்த படத்தை பற்றி, அதில் உள்ள ஒரு புதுப்புது விஷயங்கள் பற்றி நம்மிடம் பாராட்டியோ விமர்சனம் செய்தோ பேசுவார்கள்.. அதை கேட்பதற்கு நமக்கு இன்னும் ஊக்கமாக இருக்கும் ..அடுத்தடுத்து இன்னும் நல்ல படங்கள் செய்ய வேண்டிய எண்ணம் தோன்றும்..
ஆனால் இப்போது ஒரு படத்தின் தலைவிதி வெறும் ஏழு நாட்கள் தான்.. இந்த ஏழு நாட்களுக்கா இவ்வளவு மெனக்கெட்டு படம் எடுக்கிறோம் என்கிற அலுப்பு தோன்றிவிடுகிறது..
50 வருடங்களுக்கு முன் பெரியார் பேசினார், காமராஜர் பேசினார்.. ஆனால் அப்படி பேசியும் எந்த மாற்றமும் இந்த சமூகத்தில் ஏற்படவில்லை.. இன்றைக்கு அரசியலில் சமூகத்தில் மாற்றம் தேவை என்று சொல்கிறோம். ஆனால் இதே மாற்றத்தை முன்னெடுத்து ஐம்பது வருடத்திற்கு முன்பு வந்தவர்கள் தானே இந்த தலைவர்கள்..? ஆனால் இன்னும் சமூகம் மாறவில்லையே..?
காரணம், சமூகம் இப்போது எங்கேயோ போய்க்கொண்டு இருக்கிறது.. நம் கைகளில் கிடையாது.. இப்போதெல்லாம் மேடைகளில் பேசும்போது பொய்யாக பேசுகிறோமோ என்று எனக்கு தோன்றுகிறது.. நான் உண்மையாக இல்லை என்று எனக்கு தோன்றுகிறது.. கைதட்டல் வாங்குவதற்காக பொய்யாய் பேச வேண்டுமா என்கிற எண்ணம் தோன்றுகிறது.. காரணம் சமூகத்தை மாற்ற முடியவில்லையே என்கிற எண்ணம் அழுத்தமாக மனதில் பதிந்து விட்டது.. நமக்குள் இருக்கும் பேராசை நம்மை மாற்றவிடலையே..
ஊடகங்கள் நினைத்தால் எதையும் மாற்றி விடலாம் என்று கூட சிலர் இங்கே சொன்னார்கள்.. ஊடகங்களிலேயே எவ்வளவு தப்பும் தவறுமாக தமிழை கையாளுகிறார்கள் தெரியுமா..? எழுத்துப் பயிற்சியே இல்லாமல் போனதால் வந்த பிழை இது.. இதுபோல ஒவ்வொரு தவறுகளையும் நாம் அனுபவித்துக்கொண்டு ஏதோ ஒரு கட்டாயத்திற்காக வாழ்கிறோம்..
அதனால்தான் இந்த பாடலை கேட்டதும் நமக்கு அழுகை வந்துவிட்டது.. அப்பாவை உட்கார வைத்து அழகு பார்க்கும் அந்த வாழ்க்கையை தொலைத்து விட்டோம்.. இதை மாற்ற முடியுமா என்றால் நிச்சயம் மாற்றமுடியும்.. ஆனால் மாற்ற மாட்டார்கள்..
காரணம் இதையெல்லாம் வைத்து சம்பாதிக்கும் கூட்டம் தான் நம்மை ஆண்டுகொண்டு இருக்கிறது.. அரசியல் நடத்துகிறது.. அப்படி என்றால் எங்கிருந்து மாற்றம் வரும்..? மண்ணாங்கட்டி தான் வரும்” என்று பேசினார்.