
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது பேரணியாக சென்ற மக்கள் மீது குறி பார்த்து போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. அதில் 2 பெண்கள் உள்படஅப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலி ஆனார்கள்.
இந்த துப்பாக்கிச்சூடு நடத்த உத்திரவு அளித்தவர் யார் என்கிற கேள்வி வந்த போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்தன.
அரசியலுக்கு வருவதாக சொல்லியிருக்கிற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக அப்போது தூத்துக்குடிக்கு சென்றார்.
அங்கேதான் எதிர்பாராத டுவிஸ்ட் நடந்து விட்டது.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சந்தோஷ் என்பவர் தன்னை பார்க்க வந்த ரஜினியைப் பார்த்து ” நீங்கள் யார்?” கேட்டு விட்டார். “சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்” என்று தனக்காக பாட்டு எழுதி இருக்கிறபோது இந்த வாலிபர் இப்படி கேட்டு விட்டாரே என்கிற கோபத்தில் உடனே சென்னைக்குப் புறப்பட்டு விட்டார்.
சென்னை விமான நிலையம் சேர்ந்ததும் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் சொன்ன ரஜினி “இந்த போராட்டத்தில் விஷமிகள் ஊடுருவினர்.பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கடைசி நாளில் ஊடுருவியதைப்போல தூத்துக்குடியிலும் கடைசிநாளில் சமூக விரோதிகள் ஊடுருவி கலவரத்தை ஏற்படுத்தினர்.சில போராட்டங்கள் தூண்டப்படுகின்றன. பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்று சொன்னார் .
நிருபர்கள் “உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டதற்கு “எனக்கு தெரியும். எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் நாடு சுடுகாடுதான்”என்று கூறினார்.
இது தொடர்பாக தமிழக அரசு ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை நியமித்தது.
இந்த கமிஷனுக்கு தனது முழு ஒத்துழைப்பைத் தருவதாக ரஜினிகாந்த் உறுதி அளித்திருந்தார். 25 ஆம் தேதி விசாரணை கமிஷன் முன் ஆஜராகும்படி உத்திரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தனக்கு நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருக்கிறார்.
சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிற நடிகராக இருப்பதால் ஆஜராகிறபோது ரசிகர்கள் அதிக அளவில் கூடி விடலாம் .அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வரலாம் .ஆகவே விலக்கு அளியுங்கள்.எழுத்து மூலம் பதில் தரத்தயார் “என்பதாக ரஜினி தரப்பில் சொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.












