அறிவாளி மதிவந்தி.! ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் .மண விலக்கு பெற்று பள்ளி நிர்வாகத்தை கவனித்துக் கொண்டிருப்பவர். தீவிரமான பிஜேபி.ஆதரவாளர்.அவ்வப்போது திரைப்படங்களில் நடிப்பவர்.அப்பாவின் நாடகங்களிலும் நடித்து வருகிறார்.
பிரதமர் மோடிக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்றால் மூளையை கழட்டி வைத்துவிடுவார் போல என்று நினைக்கும் அளவுக்கு தகவல்களை அள்ளிவிடுவார்.
கடந்த 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகளை 9 நிமிடங்கள் ஒளிர விட வேண்டும் என்பதாக பிரதமர் கோரிக்கை விட்டது,அது எந்த அளவுக்கு தமிழகத்தில் நடந்தது என்பது பற்றியெல்லாம் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கலாம்.
ஆனால் விளக்கு ஏற்றுவதற்கு மதுவந்தி ஒரு காரணம் சொன்னார் பாருங்கள்.
நல்லவேளை ஐயா அப்துல்கலாம் முன்னதாகவே மறைந்து விட்டார். நமது வானியல் விஞ்ஞானிகள் இவரிடம் பாடம் கற்கவேண்டும் என்கிற அளவுக்கு அந்த காரணம் இருந்தது.
“9 மணிக்கு ஒன்பது கிரகங்களும் ஒரே நேர் கோட்டில் வருகிறது.அதனால் கொரானாவின் கொடுமை அடக்கப்படும்”என்பதாக சொன்னதை கேட்டு நெட்டிசன்கள் ஒரு வழி பண்ணி விட்டார்கள்.
அடங்க வேண்டாமா?
இந்தியாவின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு என்பதை கூகிளில் தேடி இருக்கலாம்.அதற்கு கஷ்டமா இருக்கா? அவரது கண்காணிப்பில் நடக்கும் பள்ளிக்கூட ஆசிரியை யாரிடமாவது கேட்டிருக்கலாம்.
எனக்கு எல்லாம் தெரியும் என்கிற அகந்தையோ மமதையோ அல்லது அசட்டுத்தனமோ எதோ ஒன்று.! அவரை ஏழரையில் இழுத்துக்கொண்டுபோய் தள்ளி இருக்கிறது.
“இந்தியாவின் 8000 கோடி மக்களுக்கு 5000 கோடி ரூபாயை வங்கித்திட்டத்தில் மக்களுக்காக மோடி செலுத்தியிருக்கிறார் “என்று வீடியோவில் அடித்து விட்டார் பாருங்கள் .அண்டசராசரங்களும் ஆடிப்போய்விட்டன.
138 கோடி என்பது உத்தேச மதிப்பு. எப்படி மதுவந்திக்கு மட்டும் 8000 கோடியாக உயர்ந்தது? வங்கி திட்டத்தில் பிரதமர் போட்டதாக சொல்லப்படுகிற 5000 கோடியை 8 ஆயிரம் பேருக்கு பிரித்துக்கொடுத்தால் ஆளுக்கு 62 பைசாதான் வரும் என்று ஒரு நெட்டிசன் கிண்டல் பண்ணியிருக்கிறார்.