தமிழ்ச்சினிமாவில் சில வெற்றிக் கூட்டணிகள் அமைந்திருக்கின்றன.
அந்த கூட்டணியின் படங்கள் கமர்சியல் ரீதியாக கல்லா கட்டிவிடும் .சில மிஸ் ஆனாலும் அடுத்த படத்தில் ஈடு கட்டிவிடுவார்கள்.
அது நடிகர்களின் திறமையினாலா,அல்லது கதை அமைப்பினாலா ,யார் அந்த வெற்றிக்கு காரணம் என்றெல்லாம் சொல்ல முடியாது.
திறமையான திரைக்கதை மன்னன் என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட இன்று நடிப்பதில்தான் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கிறது.படங்கள் இயக்குவதற்கு வாய்ப்புகள் வருவதில்லை. கேட்டால் அவர்களெல்லாம் இந்தக்காலத்துக்கு சூட் ஆக மாட்டார்கள் என்று சொல்லிவிடுவார்கள். வாய்ப்பே தராமல் பல வல்லவர்கள் இன்று ஒதுக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை கை தூக்கிவிடுகிற நல்லவர்கள் இன்று மிகவும் குறைவு.
இது ஒரு பக்கம் இருக்கட்டும் கமர்ஷியல் ரீதியாக கல்லாவை நிரப்புகிற கூட்டணிகளில் ஒன்று இயக்குநர் ஹரி -சூர்யா அணியாகும்.
ஐந்து படங்கள் .இவர்கள் ஆறாவது முறையாக இணைந்திருப்பது ‘அருவா ‘வுக்காக .
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜாவுக்காக இந்த அணி இணைந்திருக்கிறது. வழக்கம்போல டி.இமான்தான் இசை.!
கொரானா ஊரடங்கினால் விழி பிதுங்கிக் கிடக்கிற திரை உலகம் பல பாடங்களை கற்றுக்கொண்டிருக்கிறது.
அதில் ஒன்றுதான் ஊதியக் குறைப்பு .
திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் தங்களின் ஊதியங்களைக் குறைத்துக்கொள்ள முன் வந்திருக்கிறார்கள்.
இசை அமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்த பிறகு தற்போது பிரபல இயக்குனர் ஹரி தனது சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்துக் கொள்வதாக அறிவித்திருக்கிறார்.