வரலாற்றுப் படங்களில் நாயகனாக நடிப்பதற்கு ஆதரவும் வரும். எதிர்ப்பும் வரும்.!
கமல்ஹாசனின் மருதநாயகம் படத்துக்கு வரவில்லையா?
கான்சாயபு பின்னர் மருதநாயகமானார். மதுரையில் கான்சாயபு பெயரில் ஒரு இடம் இருக்கிறது.மதுரையின் வரலாற்றில் அவருக்கும் ஒரு இடம் உண்டு. ஆங்கிலேயனை எதிர்த்துப் போரிட்டவர். எதிர்ப்புகள் என்பது பெரும்பாலும் அர்த்தமற்ற வெற்றுக்கூச்சலாக இருக்கும்.
தற்போது கேரளத்தில் பிருத்விராஜ்க்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது
இவர் தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.தற்போது மலையாளத்தில் பிளஸ்சி இயக்கி வரும் ‘ஆடுஜீவிதம்’ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து ஆஷிக் அபு இயக்கும் வாரியம்குன்னன் என்ற வரலாற்றுப் படத்தில் பிருத்விராஜ் நடிக்கிறார்..இது குறித்த அறிவிப்பை இயக்குனர் ஆஷிக் அபு மற்றும் பிருத்விராஜூம் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
1921 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடந்த மலபார் புரட்சியின் பின்னணியில் இந்தப்படம் உருவாகிறது.
ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட வாரியம்குன்னத் குஞ்சாமுகமது ஹாஜி என்கிற வீரரின் கேரக்டரில், பிருத்விராஜ் நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பை குன்னத் குஞ்சாமுகமது ஹாஜியின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக, வரும் 2021 -ல் தொடங்க உள்ளனர்.
பிரிதிவிராஜ் தனது பதிவில் , ‘உலகின் கால்பகுதியை ஆட்சிபுரிந்த ஒரு ராஜ்ஜியத்துக்கு எதிராக போராடிய மாவீரனின் கதை. அவர் வரலாறு எரிக்கப்பட்டிருந்தாலும் புதைக்கப்பட்டாலும் அந்த மாவீரர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
அவர் ஒரு தலைவர், போர்வீரர், தேசபக்தர். இந்தப் படம் 1921 ஆம் வருடம் நடந்த மலபார் புரட்சியின் முகமாக மாறிய ஒரு மனிதனைப் பற்றியது’ என குறிப்பிட்டிருந்தார்.
இப்பதிவை பார்த்த பலர் வாழ்த்து தெரிவித்தாலும், சிலர் கடுமையாக எதிர்த்துள்ளனர். இன்னும் சிலரோ, இந்த படத்தில் பிருதிவிராஜ் நடிக்காமல் உடனடியாக வெளியேற வேண்டும் என்று மிரட்டலாகக் கூறியுள்ளனர்.
இந்த திடீர் மிரட்டல்களை எதிர்பார்க்காத பிருத்விராஜ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.