அதிரடி முடிவுதான்!
ஆனாலும் வேறு வழியில்லை. கொரானா கொள்ளை நோய்த் தொற்று எப்போது தொலையும் என்பது அரசுக்கே தெரியாது .ஆண்டவனுக்குத்தான் தெரியும் என்பதை நமது மாண்புமிகு முதல்வர் எடப்பாடியாரே அறிவித்துவிட்ட பிறகு என்ன செய்ய முடியும்?
ரஜினியின் ‘அண்ணாத்த ‘அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் படத்தின் பாதி அளவு கூட முடிவடையாத நிலையில் கொரானா கட்டையைப் போட்டு விட்டது.
அரசாங்கமும் படப்பிடிப்புகள் நடத்துவதற்கு தடை போட்டிருக்கிறது. திறந்திருந்த சரக்கு கடைகளையும் மூடச் சொல்லிவிட்டது.
முன்னர் திட்டமிட்டபடி 2021 பொங்கலில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டுமென்றால் வருகிற 3 மாதங்களில் படத்தை முடித்தாக வேண்டும். அடுத்த 3 மாதகாலத்தில் போஸ்ட் புரொடக்சன் வேலைகளை முடிக்க வேண்டும் .அதற்கு சாத்தியமில்லை என்றே தெரிகிறது.
தற்போதைய லாக் டவுன் காலத்தை ஜூலை 31 தேதி வரை நீட்டித்து விட்டனர். கொரானாவுக்கு உச்சம் அக்டோபர் வரை இருக்கும் என சொல்கிறார்கள். இத்தகைய நிலையில் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த வேண்டாம் என்று ரஜினி கேட்டுக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.
“தொழிலாளர்கள் நலமே முக்கியம் .எந்த நிலையிலும் அவர்களுக்கு பாதிப்பு வந்து விடக்கூடாது எனவே கொரானா கொள்ளை நோய்த் தொற்று ஒழியும் வரை படப்பிடிப்பை நடத்த வேண்டாம் என்று ரஜினி கேட்டுக்கொண்டதாக பேசுகிறார்கள்.
அஜித்குமாரும் வலிமை படத்தை தற்போது தொடரவேண்டாம் .நோய்த்தொற்று அதிகமாக பரவி வருகிறது என்று முன்னதாகவே தயாரிப்பாளர் போனிகபூரிடம் சொல்லிவிட்டார் என்கிறார்கள் .
தல ரசிகர்களும் சூப்பர்ஸ்டார் ரசிகர்களும் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். நோயின் அச்சத்துடன் படப்பிடிப்பை அவசரகதியில் நடத்துவதை யார்தான் விரும்புவார்கள் என்கிறார்கள் கோலிவுட்டில்!
ஆக தற்சமயம் அண்ணாத்த ஆடல .ஒத்திக்கோ.!