மனதில் உறுதி இருந்தால் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் துணிச்சலுடன் போரிடலாம் .
சுற்றிலும் கொரானா கொள்ளை நோய்த் தொற்றுகள்.
எங்கே மறைந்திருக்கிறது என்பது தெரியாது. வீசும் காற்றிலும் இருக்கலாம். தாக்கும் வெப்பத்திலும் இருக்கலாம் .குளிரிலும் இருக்கலாம். எங்கும் இருக்கலாம் என்கிற பேரச்சம் .வெளியே போகாதே பூச்சாண்டி பிடித்துக் கொள்வான் என பாலகர்களை பெற்றோர் பயமுறுத்துவது போல”வெளியே நடமாடாதே !” என்று அரசே எச்சரிக்கிறது என்றால் அந்த கொள்ளை நோயின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும்?
இந்த பேரச்சங்களுக்கு மத்தியில் சென்னையில் இருந்து காரில் கிளம்பி சாத்தான் குளம் சென்று திரும்பியிருக்கிறார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.
“பார்த்து போங்க. கவனமுடன் டிரைவ் பண்ணுங்க. “இப்படி பல அறிவுரைகள் மனைவி ராதிகாவிடம் இருந்து.
“ரொம்ப எச்சரிக்கையா டிரைவ் பண்ணுவேன்மா !”
சரத்குமாரின் டிரைவிங் வேகம் அவருடன் பயணித்தவர்களுக்குத்தான் தெரியும்.!காற்றுடன் போட்டியிடும் அவரது கார்.சரத்தின் கணக்குப்படி சரியான நேரத்துக்குப் போய் சேர்ந்தது
காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு இரையான செல்போன் வியாபாரிகள் ஜெயராஜ் -பெனிக்ஸ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் .அவர்களின் கையில் ரொக்கமாக 5 லட்சம் கொடுத்து ஆறுதல் சொன்னார் .“மகனை இழந்து விட்டோமே என்று கவலைப்படாதீர்கள். நான் மூத்த அண்ணனாக இருப்பேன் துணையாக இருப்பேன் ” என சொன்னார். அவர்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது அவரது அணுகுமுறை.
“கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். எங்கெங்கு தவறுகள் நடந்தன என்பதை கண்டு பிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டியது சட்டத்தை காப்பவர்களது கடமை.” என்கிறார் சரத்குமார் .
தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு அதிகாலை சென்னை வந்தவர் படுத்தபோது அதிகாலை 3 மணி.