“ஆர் ஐ பி என்று பதிவு செய்வதற்கே வருத்தமாக இருக்கிறது” என்று பிரபல பாடகியும் ,ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா சொன்னதை பார்க்கிறபோது எதோ நடக்கக்கூடாதது நடந்து விட்டதாக நினைக்கத் தோன்றுகிறது.மருத்துவமனையிலும் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளன .ஆண்டவனே! உனது சித்தம் என்னவோ! இன்று 1.04 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
பிரபல பின்னணிப்பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிக மிக கவலைக்கிடம் என்று அறிவிக்கப்பட்ட பிறகு பாடும் நிலா பாலசுப்பிரமணியத்தின் நினைவுகள் வந்து வந்து மோதுகின்றன.இரவு நேரத்தில் தூங்குவதற்கு இளையராஜாவின் இசை உதவுகிறது என்றால் அதன் உயிரோட்டம் பாலுதானே! 40 ஆயிரம் பாடல்கள் ,16 மொழிகள் ,6 தேசியவிருதுகள் ,25 ஆந்திர பிரதேச விருதுகள் ,பத்மஸ்ரீ ,பத்ம விபூஷண் ஆகிய விருதுகள் ,கின்னஸ் சாதனை இவைகளையும் தாண்டி கடல் கடந்து வாழும் இந்தியர்களின் இசை நாயகன் ….வாழ்க்கை இன்னும் சில நேரத்தில் ?
இன்று காலை 11.30 மணியளவில் பாலு சிகிச்சை பெற்று வருகிற எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மனைவி சாவித்திரி ,மகன் சரண் ,மகள் பல்லவி ,சகோதரி சைலஜா வந்து சேர்ந்தார்கள். அனைவரின் முகத்திலும் சோகம் கப்பிக்கிடந்தது. மனைவி சாவித்திரி விம்முவதை காண நேர்ந்தது.பாரதிராஜா வந்தார். “துக்கம் கப்பிய நேரத்தில் பேச்சு வராது.உலகம் முழுவதும் பல கோடி பேர் பிரார்த்தனை செய்தும் எந்தப் பலனில்லை ” என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். நம்மால் நிலைமையை உணர முடிந்தது.
நமக்கும் கண்கள் கலங்கின. ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி கோடிக்கான ரசிகர்களின் மனதில் தங்கிவிட்ட அந்த பாடும் நிலாவை பிரிந்து விடுவோமோ என்கிற பயம் கப்பியது .ஆம் உண்மை ! பாலசுப்பிரமணியம் நம்மைவிட்டு பிரிந்து விட்டார்.ஆன்மா அமைதி அடைக.