
பாவேந்தர் பாரதிதாசனை நினைவு கூர்ந்து விட்டு மடல் எழுதத் தொடர்கிறேன்.
- விண்ணிடை இரதம் ஊர்ந்து
- மேதினி கலக்குதற்கும் பண்ணிடைத் தமிழைச் சேர்த்துப்
- பாரினை மயக்குதற்கும்
- மண்ணிடை வாளை யேந்திப்
- பகைப்புலம் மாய்ப்பதற்கும்
- எண்ணிலாத் தமிழர் உள்ளார்
- எனும் நிலை காண்பதென்றோ?
- சிங்களஞ் சேர் தென்னாட்டு மக்கள்
- தீராது தீரரென்று ஊது சங்கே!
- பொங்குதமிழர்க் கின்னல் விளைத்தால்
- சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!
பாவேந்தனின் இந்த வீர வரிகளை கா.காளிமுத்தண்ணன் சொல்கிறபோது ஈர விறகும் வெந்தணல் கொள்ளும். நான் மதுரை தமிழ்நாடு நாளேட்டில் செய்தியாளனாக பணியாற்றியபோது பழக்கம். ஆதிக்க இந்தி எதிர்ப்பு மாணவர் எழுச்சியின் போது செய்தி சேகரிக்க சென்றபோது ஏற்பட்ட நட்பு அவர் சட்டப்பேரவைத் தலைவராக பணியாற்றியபோதும் தொடர்ந்தது.
ஈழத்தமிழர் விடுதலைப் போரின் போது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் இணைந்து பணியாற்றியது எனக்குத் தெரியும்.
அந்த எழுச்சிமிகு இன விடுதலைப் போராட்டத்தின் போது தமிழர்களே ஐந்தாம் படையாக வேலை பார்த்தார்கள். அவர்களில் சிங்களர்க்கு ஆதரவாக விடுதலைப்புலிகளுக்கு எதிராக அமிலத்தை கக்கியவர்களில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனும் ஒருவர்.
சிங்களர்க்கு விசுவாசியாக இருப்பது அவரது பேரின்பம்.
அவரது கேரக்டரை ஏற்று மக்கள் செல்வன் விஜயசேதுபதி நடிப்பது தமிழர்க்கு பெரும் துன்பம்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘என்கிற தமிழர் சார்ந்த படத்தில் நடித்து விட்டு கொத்துக்கொத்தாய் தமிழரை கொன்றொழித்த கூட்டத்துக்கு லாலி பாடிய ஒருவராக நடிப்பது ஏற்புடையதுதானா? விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டபோது ஆனந்தமாக இருக்கிறது என்று சொன்னவர்தான் இந்த மு .முரளிதரன்.
மக்கள் செல்வன் சிந்திப்பாரா?
பிரபல இயக்குநர் சீனுராமசாமி மக்கள் செல்வனின் நண்பர்.அவர் இன்று காலையில் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறேன்.
“விஜய சேதுபதியின் இதயம் உலகத் தமிழர்கள்.
அவர் நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் அதற்கு சான்று.
ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம்.
மக்கள் செல்வா.. நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா
நமக்கெதற்கு மாத்தையா?
மாற்றய்யா?”
சிந்தியுங்கள். தமிழர்க்கு ஆதரவான முடிவினை அறிவியுங்கள்.
இவண் ,
தேவிமணி ( மூத்த பத்திரிகையாளர்.)












