

உங்கள் புத்தகங்களிடையே எப்படி ஏ.பி.என்.பற்றிய புத்தகம் என்ற ஆவலால் முதலில் அதைப் படிக்க எடுத்தேன்,
உங்களின் ஆரம்பகாலத் திரைவாழ்வில் அவருடைய பங்கையும் இந்தப் புத்தகத்திற்கு உங்கள் பங்கையும் உணர முடிந்தது.
எந்தப் பின்புலமுமின்றி வாழ்வை ஆரம்பித்து மனிதர் ஏ.பி.என்.தனது 55 வயதிற்குள், அந்தக் கால கட்டத்திலும் , எவ்வளவு செய்துள்ளார் என்பது மலைப்பாக உள்ளது.
அடுத்த புத்தகங்களைக் கையிலெடுக்கும் முன், திரும்ப ஒருமுறை கம்பன் என்ற கரும்பினைச் சாறாய்ப் பிழிந்து 100 பாடல்களில் இராமகாதையை “கம்பன் என் காதலன்”, ஒளி ஒலி வழி பார்த்துக் கேட்டு மகிழ்ந்த பின், “மகாபாரதம்” பார்த்தும் கேட்டும் மலைத்துப் போனேன்,
எல்லாரும் பார்த்தும் கேட்டும் பரவசப்படும் , ஒரு தேர்ந்த ஆய்வாளரின் ஆழமும், அகலமுமான அர்த்தமுள்ள உரை. ஆனால் எந்த ஓர் ஆய்வாளரும் இப்படிப்பட்ட முயற்சியை எடுத்ததாக எனக்குத் தெரியவில்லை.
இப்படி மிரண்டு போய் எப்படித்தான் ,”சிவகுமார் என்ற மானுடன்” இப்படிப் பேசமுடிகிறது என்று பக்கங்களைப் புரட்டப் புரட்ட , தம்பி, மாமா, நண்பன், மாணவன், ஓவியன், எழுத்தாளர் , பேச்சாளர், நடிகர், தாத்தா, தந்தை எனப் பலப் பல உருவங்களில், பூதமாக அல்ல ஒரு அர்த்தம் பொதிந்த வாழ்வில் வலம் வரும் ஒரு முழு மனிதனைப் பார்த்து வியந்து, கடைசியில் அண்ணியின் வார்த்தைகளை இரண்டு முறை படித்தேன்.
இன்னும் இன்னும் கம்பன், பாரதம், குறள் என்று அண்ணன் , ஆம் நீங்கள் தான் , ஓயாமல் ஓடிக் கொண்டே இருப்பதன் சூட்சுமம் உணர்ந்ததாய் உணர்கிறேன்.
– விஞ்ஞானி
மயில்சாமி அண்ணாதுரை












