தன்னுடைய அரசியல் பயணத்தின் தொடக்கத்தை பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் ரஜினிகாந்த்.
ஜனவரியில் அரசியல் கட்சி தொடக்கம். அதைப்பற்றிய முழுமையான அறிவிப்பு டிசம்பர் 31. ஜனவரியில் கட்சி ஆரம்பம்.
“மாத்துவோம் ,எல்லாத்தையும் மாத்துவோம். இப்ப இல்லேன்னா எப்பவும் இல்லே ” என்பதை இன்று மறுபடியும் அழுத்திச்சொல்லியிருக்கிறார்.
இந்த அறிவிப்புக்குப்பின்னர் பிற்பகல் தனது போயஸ் கார்டன் வீட்டு வாசலில் பாஜக மாநில அறிவுசார் குழு தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தி, காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் சூழ பத்திரிகையாளர்களை சந்தித்தார். ரஜினி மக்கள் மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி இருப்பார் என்கிற அறிவிப்பையும் ரஜினி வெளியிட்டார்.
இன்று ரஜினி கூறியதாவது”
` `நான் அரசியலுக்கு வருவேன்’ என்று 2017-ம் ஆண்டு டிசம்பரிலேயே சொல்லியிருந்தேன். உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியைத் தொடங்கி தேர்தலில் போட்டியிடுவேன் என்று சொல்லியிருந்தேன்.
அதற்குப் பின்னர் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் உங்களையெல்லாம் சந்தித்து, மக்களிடம் எழுச்சி வர வேண்டும் என்று கூறினேன்.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தேன். கொரோனா காலத்தில் அது முடியாமல் போனது. தமிழக மக்களுக்காக எனது உயிரே போனாலும் சந்தோஷப்படுவேன்.
ஓர் அரசியல் மாற்றம் ரொம்ப கட்டாயம். அது காலத்தின் தேவை. அது இப்போ இல்லைன்னா… எப்பவும் கிடையாது. எல்லாத்தையும் மாத்தணும். நான் சொன்ன சொல் எப்போதும் தவறியதில்லை.
நான் ஒரு கருவிதான். நான் அரசியலுக்கு வருகிறேன். நான் வெற்றி பெற்றாலும், அது மக்களின் வெற்றிதான். தோல்வியடைந்தாலும் அதுவும் மக்களின் தோல்விதான்.
இந்த மாற்றத்துக்கு நீங்க எல்லாரும் துணையா நிக்கணும். `அண்ணாத்த’ ஷூட்டிங் இன்னும் 40 சதவிகிதம் இருக்கிறது. அதை முடித்துக்கொடுப்பது கடமை.
கட்சி தொடங்குவது ராட்சத வேலை. கட்சி தொடங்குவதற்கு அவ்வளவு வேலைகள் இருக்கின்றன. இந்தப் பாதையில் வெற்றியடைவேன் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு. அரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம் வேண்டும். இப்ப இல்லைன்னா.. எப்பவும் இல்லை’’ என்றார்.