“தமிழகம் மீட்போம்” என்கிறது திமுகழகம் .
“சீரமைப்போம் தமிழகத்தை” என்கிறது மக்கள் நீதி மய்யம்.
“மாத்துவோம் ,எல்லாத்தையும் மாத்துவோம்” என்கிறார் அரசியலுக்கு இன்னும் வராத ரஜினிகாந்த்.
இன்னும் மற்ற கட்சிகளின் நோக்கம் என்னவென தெரியவில்லை. கூட்டணியில் கிடைக்கும் இடங்களை பொறுத்து அமையுமோ என்னவோ.!
பா.ம.க. வின் நிலை 20 சதவீத போராட்டத்துடன் இடைவேளை விட்டு ஓய்வில் இருக்கிறது. டாக்டர் ராமதாஸின் முடிவு என்னவோ அதுதான் அந்த கட்சியின் சாசனம் .அதிமுகவா ,திமுகவா,பாஜகவா இதில் எதோ ஒன்று ஆனால் சத்தியமாக திமுக பக்கம் போகமாட்டார் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். முக்கியமான வழக்கு பெண்டிங் என்கிறார்கள்.
இருக்கட்டும்.இப்போது மக்கள் நீதி மய்யத்தின் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட பிரசாரம் மதுரையில் தொடங்கி அப்படியே தென்மாவட்டங்களில் ரவுண்ட் அடிக்கிறது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பாணி இது. மதுரையில் பிள்ளையார் சுழியைப் போட்டுவிட்டுதான் விடிய விடிய பிரசாரம் செய்தார்.சின்ன கிராமத்தைக்கூட விட்டு வைக்கவில்லை. அப்படியே விட்டுப்போய்விட்டது என்பதை செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினால் அடுத்த நாள் பயணத்தில் அந்த கிராமம் இணைத்துக் கொள்ளப்படும்.அவரது உழைப்பு அசாதாரண உழைப்பு.
அதே பாணியிலான பிரசாரத்தை கமல் மேற்கொள்ளுவாரா ,அதனை அரசு அனுமதிக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.!
ரஜினிகாந்த்தின் பிரசாரம் எவ்வித பாணியில் அமையும் என்பது தெளிவாக தெரியவில்லை. முக்கிய பெருநகரங்களில் மட்டும் பிரசாரம் செய்து விட்டு காணொளி வழியாக மற்ற இடங்களில் பேசுவாரா அல்லது பிரதமர் மோடியைப் போல முக்கோண பரிணாம உத்தியை கையாளுவாரா என்பது தெரியவில்லை.
மோடியை முக்கோண பரிணாம உத்தியில் படமாக்கியவர் தமிழ்த் திரைப்பட பிரபல ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில் என்பது குறிப்பிடத்தகுந்தது.
அவரிடம் கேட்டபோது “இதுவரை அப்படி எதுவும் இல்லை” என்றார் .
சரி,இன்னும் 4 மாதம் இருக்கே.!