மாஸ்டர்’ படத்தின் சர்ச்சைகளே இன்னமும் முடியாத சூழலில் நடிகர் விஜய் மேலும் ஒரு பிரச்சினையைக் கிளப்பியிருக்கிறார்.
அவருக்குச் சொந்தமான சாலிகிராமம் குடியிருப்பில் வசிக்கும் தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகள் இருவர் மீது காவல் துறையில் புகார் கொடுத்திருக்கிறார் தளபதி விஜய்.
இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கடுமையாக உழைத்தவர்கள் மீதே இத்தகைய நடவடிக்கை எடுக்கிறவர் நாளை நம்மீது நடவடிக்கையை தட்டி விட மாட்டாரா என்கிற அச்சத்தில் இருக்கிறார்கள்.
நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தில் முக்கியப் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் ரவி ராஜா மற்றும் குமார்
நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தினரை ஒருங்கிணைக்கும் வேலைகளையும், விஜய்க்கும், அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் இடையிலான தூதுவர்களாகவும் இ வர்கள் இருவரும் இருந்ததால் அவர்களை மிகவும் நம்பியிருந்தார் விஜய்.
விஜய் கடந்த காலங்களில் எந்த விழாக்களுக்கு வந்தாலும் அவரை வரவேற்று அழைத்துச் சென்று, பின்னர் அனுப்பி வைப்பதுவரையிலும் அனைத்தையும் இவர்கள்தான் மேற்கொள்வார்கள்.
ஒரு நிகழ்ச்சிக்கு விஜய் வருகிறார் என்றால் அவர் வருகிறாரா.. இல்லையா… எத்தனை மணிக்கு வருவார்.. வீட்டில் இருந்து புறப்பட்டுவிட்டாரா.. எந்தக் காரில் வருகிறார் என்கிற தகவல்களை பத்திரிகையாளர்களுக்குத் தெரிவிப்பதும், பாதுகாப்புக்கு நிற்கும் காவல்துறையினரிடம் தெரிவிப்பதும் இவர்கள்தான்.
ஆனால்,இருவரும் எஸ்.ஏ.சந்திரசேகரன் சமீபத்தில் துவக்கிய கட்சியின் பின்னணியில் இருப்பதாக நினைத்த விஜய், அவர்கள் இருவரையும் ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கிவிட்டாராம் .
ஆனாலும், அவர்களுக்கு எஸ்.ஏ.சந்திரசேகரின் ஆதரவு இருந்ததால் “எப்படியும், அப்பா, மகன் ஒன்று சேர்வார்கள். அப்போது நமக்கு முழு ஆதரவு கிடைக்கும்…” என்று நம்பியிருந்தார்கள்.
இந்த நேரத்தில் மூன்று நாட்களுக்கு முன்பாக விஜய்யின் அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகர் துவக்கிய புதிய அரசியல் கட்சியின் அறிமுகத்திற்காக தமிழகம் முழுவதும் இருந்தும் விஜய்யின் ரசிகர் மன்றத்தின் முன்னாள் தலைவர்களையும், பொறுப்பாளர்களையும், அதிருப்தி தலைவர்களையும் ஒன்றிணைத்து சென்னைக்கு அழைத்து வந்தது இந்த ரவி ராஜா-குமார் கூட்டணிதான் என்பதாக விஜய்யிடம் சொல்லியிருக்கிறார்கள்.
இதையறிந்த விஜய் இன்னமும் கோபமாகிவிட்டார். அதனால் தன்னுடைய வீட்டில் இருந்து வெளியேறும்படி அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதை அவர்கள் எஸ்.ஏ.சி.யின் பார்வைக்குக் கொண்டு போக.. அவரோ.. “அவர் அப்படித்தான் சொல்வாரு. நீங்க காலி பண்ணாதீங்க…” என்று தைரியம் சொல்லியிருக்கிறார்.
தான் சொல்லியும் அவர்கள் கேட்காததால் வேறு வழியில்லாமல் விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் அவர்களை காலி செய்ய வைக்கும்படி புகார் கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய். காலி செய்ய 6 மாத கால அவகாசம் கொடுக்கும்படி ரவிராஜா கேட்டிருக்கிறார்.