நடிகர் ஆர்யா -இயக்குநர் சக்தி சவுந்தரராஜன் கூட்டணியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற டெடி படத்தை தொடர்ந்து,தற்போது இக்கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.இப்படத்துக்கு கேப்டன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர் ஆர்யாவின் 33வது படமாக அமைந்துள்ள இந்தப் படத்தை திங்க் ஸ்டூடியோசுடன் இணைந்து ஆர்யா தயாரிக்கவுள்ளார்.டி இமான் இசையமைக்கிறார். இதுகுறித்து இயக்குனர் சக்தி சவுந்தரராஜன் கூறுகையில்,“கேப்டன்” எனும் தலைப்பு நேர்த்தியானது, நிஜத்தில் பல விசயங்களில் மிகப்பெரும் மதிப்பை கொண்டிருக்கும் தலைப்பு இது. ஒரு விளையாட்டு குழுவில் ஆரம்பித்து, சமூகத்தின் எந்த ஒரு குழுவிலும், கேப்டன் எனும் பொறுப்பு மிக முக்கியமானது. அது வெறும் தலைமை என்கிற இடம் கிடையாது. மொத்த குழுவையும் வழிநடத்தி செல்லும் கடமை கொண்ட, மிகமுக்கியமான பொறுப்பு. இது அப்படியே படத்தில் ஆர்யா ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கும் கச்சிதமாக பொருந்தும். தொடர்ந்து தரமான வெற்றிப்படைப்புகளை தந்து வரும் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் மேலும் கூறுகையில், தலைப்பு ஒரு படத்திற்கு மிகவும் முக்கியம், அதுதான் ரசிகர்களை படம் நோக்கி ஈர்க்கும் மிக முக்கியமான கருவி, அதிலும் OTT தளங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலத்தில் திரைப்படங்கள் மொழி, நாடு, இன எல்லைகளை கடந்து உலகின் பல முனைகளுக்கும் எளிதாக சென்று சேர்கிறது. ஆனால் அங்குள்ள ரசிகர்களை படத்தை நோக்கி இழுக்கும் முதல் அம்சமாக இருப்பது, படத்தின் தலைப்பு தான். எல்லாவற்றையும் தாண்டி இந்த கதையும், களமும் இந்த தலைப்பு 100 சதம் பொருத்தமானது என்பதை நிரூபிக்கும் என்றார்.
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிபிற்காக, வட இந்திய பகுதிகளுக்கு டிசம்பர் மாத மத்தியில் செல்லவுள்ளது. அங்கு படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. இப்படத்தில் நடிகை சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.












