தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66வது பொதுக்குழு கூட்டம் சாந்தோம் பள்ளியில் நடைபெற்றது. நாசர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் விஷால், கார்த்தி, கருணாஸ், பூச்சி முருகன் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.பொதுக்குழுவில் கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருக்கும் நடிகர் சங்க கட்டட பணிகளைத் தொடங்க பொதுக்குழுவில் நடிகர் சங்க கட்டிடத்தை மீண்டும் கட்டி முடிப்பதற்கான திட்டங்களை தலைவர்,பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்வைத்தனர். மேலும் நடிகர் சங்க கட்டடம் ஆரம்பத்தில் 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு வேலைகள் நடைபெற்றன. அதில் தற்போது 70 சதவீத பணிகள் முடிவடைந்து பாதியில் நிற்கின்றது. அதற்கு 19 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவாகி உள்ளதாக நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி பொதுக்குழுவில் கூறினார்.
பொதுக்குழு கூட்டத்தில், பத்மஸ்ரீ விருது பெற்ற சவுகார் ஜானகிக்கு சிறப்பு விருது கொடுத்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதேபோல்’தாதா சாகேப் பால்கே விருது’ பெற்ற நடிகர் ரஜினிகாந்த்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.
பொதுக்குழு முடிவடைந்து நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது,”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66வது பொதுக்குழு மிகவும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இரண்டு வருடம் காத்திருந்தாலும், அதைவிட உத்வேகமாக செயல்படுகிற உத்வேகத்தை இந்த பொதுக்குழு கொடுத்திருக்கு. பேச்சைக் குறைத்துக் கொண்டு நாளை முதல் செயல்பாட்டில் இறங்குவோம். நடிகர் சங்கத்தின் எஞ்சியுள்ள கட்டிடத்தின் பணிகளுக்காக நிதி திரட்டும் விழா, ஸ்டார் நைட் ஷோ, வங்கி லோன் வாங்குவது என்பதைப் பற்றியெல்லாம் நடிகர் சங்க பொதுக்குழுவில் பேசி முறைப்படி ஒப்புதல் வாங்கி உள்ளோம்.
அதற்கேற்றபடி நடிகர் சங்க கட்டிடத்தை எவ்வளவு சீக்கிரம் கட்டி முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் முடிப்போம். 70 சதவீத பணிகள் ஏற்கனவே முடிந்துள்ள நிலையில், இன்டீரியர் வேலையோடு சேர்த்து இன்னும் 40 சதவீத பணிகள் மீதம் உள்ளன.இந்த பணிகளை முடிப்பதற்கு இன்னும் ரூ 30 கோடி தேவை. அந்த 30 கோடியை எப்படி நாங்கள் திரட்டப்போகிறோம் என்பதை நாங்கள் பொதுக்குழுவில் பேசி முடிவு செய்துள்ளோம். .கட்டிட பணிகளுக்காக நடிகர்களிடம் தனிப்பட்ட முறையில் வசூல் செய்வது குறித்தும் முடிவு செய்திருக்கிறோம். அதை நடிகர்களிடம் எவ்வித வெட்கமும் இல்லாமல் நாங்கள் கேட்போம். ஏன்னா, இது நடிகர் சங்கம் கட்டிடம் என்பதால். அதேபோல் வங்கி கடன் பெறுவதற்காக ஒப்புதலையும் பொதுக்குழுவில் பெற்று விட்டோம். எல்லா வகையிலும் நடிகர் சங்க கட்டிடத்தை பூர்த்தி செய்யவும் முயற்சிகளில் இறங்கி உள்ளோம். நடிகர் சங்க கட்டிடம் முழுமை அடைந்து விட்டால், நடிகர் சங்க கட்டிடத்துக்காக வாங்கிய வங்கிக் கடனை இ எம் ஐ கட்டியது போக, ஒவ்வொரு மாதமும் ரூ 1 கோடி முதல் ஒன்றரை கோடி வரை கட்டிடத்தின் மூலம் வருமானம் வரும் என நிச்சயமாக எதிர்பார்க்கிறோம். அதை வைத்து நடிகர் சங்க உறுப்பினர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். வரும் மூன்று வருட காலத்தில் இந்த அணியின் செயல்பாடு திறம்பட நடக்கும். இனி எந்த எந்த தடங்கலோ , சர்ச்சையோ வராது என நினைக்கிறோம். நடிகர் சங்க கட்டிடம் சென்னையின் ஒரு ‘ஐகான்’ பில்டிங் ஆக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.