இயக்குநர் ஹரியின் படம் என்றாலே குடும்பங்கள் கூடுகிற படமாகவே இருக்கும். அதில் பகை ,துரோகம் ,வெறி ,பழி எல்லாமே கலந்து கட்டி சுபமாக முடியும்.இது ஹரி பார்முலா!
இந்த பார்முலாவுக்குள் அருண் விஜய்யைக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் .
எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்புடன் மோதியிருக்கிறார் ,நடித்திருக்கிறார் அருண் விஜய்.
ஹரியின் முந்தைய படங்களின் நினைப்பு வந்து விடக்கூடாது என்கிற தவிப்பு ஒவ்வொரு விமர்சகருக்கும் வரத்தான் செய்யும். ஆனால் கதையின் தளம் நெல்லை மாவட்டம் ,உப்பளம் என அமைந்திருப்பதால் அந்த நாள் நினைவுகள் வந்தே தொலைகின்றன. மீன் வியாபாரம் ஹரியின் கதையில் புதுசு என்றாலும் அதனால் வருகிற சண்டைகள் முந்தைய படங்களின் பாதிப்பாகவே இருக்கிறது. காட்சிகளும் அப்படியே.! ஆக கதையில் புதுமை இல்லை. திரைக்கதையிலும் அவ்விதமே.!
இவைகளை தவிர்த்து நடிக ,நடிகையரால் படத்தைக் கொண்டு போக முடிந்திருக்கிறதா ?
அருண் விஜய் , ராதிகா சரத்குமார் ,பிரியா பவானி சங்கர் ,சமுத்திரக்கனி ,போஸ் வெங்கட், யோகி பாபு ,அண்ணாச்சி என நடிகர்களை இறக்கியிருந்தாலும் ,இவர்களில் ராதிகா ,சமுத்திரக்கனி ,அண்ணாச்சி ,யோகிபாபு ஆகியோர் சில காட்சிகளில் கலக்கியிருந்தாலும் உப்பளத்தில் கொட்டிய பேய் மழை மாதிரிதான்.! !
அருண் விஜய் சிறப்புடன் நடித்திருக்கிறார். இரண்டாம் தாரத்தின் மகன் என இழிவு படுத்துகிற அண்ணன்கள் முன்னிலையில் அவர் படுகிற அவஸ்தை ,அவமானம் இயல்புடன் இருக்கிறது .சிறந்த நடிகர் என முன்னிலைப்படுத்தலாம். சண்டைக்காட்சிகளில் இருக்கிற முரட்டுத்தனம் தமிழ்ச்சினிமாவுக்கு தேவைப்படுகிற வித்தியாசம்.பிரியா பவானி சங்கருடன் காதல் வயப்படுவது ,முரண்படுவது என இரு பாவமும் அருமை.
சமுத்திரக்கனியை பெரும்பாலும் கட்டிப்போட்டே வைத்திருக்கிறார்கள்.அவரும் எதையோ தேடிவிட்டு போவதுபோல காட்சிகளில் வருகிறார்.
இசை ஜி.வி.பிரகாஷ்குமார்.ஒளிப்பதிவு கோபிநாத் இருவரும் யானை பலத்துடன் இருக்கிறார்கள்.
அருண் விஜய் மட்டுமே யானையாகத் தெரிகிறார்.!