லைகா ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் இணைந்து தயாரித்து, இயக்குனர் மணிரத்னம் இயக்கி, பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அப்படத்தின் குழுவினர் பேசியதாவது:
நடிகர் கார்த்தி பேசும்போது,
“நம் பள்ளிப்பருவத்தில் வரலாறு படம் என்றாலே தூங்கிவிடுவோம். வரலாற்றின் மீது ஆர்வம் இருக்காது. அப்படி விழித்திருக்கும் எஞ்சிய நேரத்தில் நாம் கேட்டதெல்லாம் அந்நியர் நம்மை அடிமைபடுத்திய தான்.
இப்போது இருக்கும் காலகட்டத்தில் புத்தகம் படிப்பதற்கு யாருக்கும் நேரமில்லை. 10 வினாடி வீடியோவைப் பார்த்துவிட்டு நகர்ந்து விடுகிறார்கள். ஆனால், 5 பகுதிகளைக் கொண்ட ஒரு புத்தகத்தை மணி சார் படமாக்கியிருக்கிறார். வரலாறு படிக்காமல்.. படைக்க முடியாது. இந்த இளைய தலைமுறையினருக்கு வரலாறு படியுங்கள் என்று சொல்கிறேன்.
இப்படத்தைப் பார்க்கும்போது பெருமிதம் வரும். அப்படி பெருமிதம் வரும்போது இதைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும். பொன்னியின் செல்வன், மணி சார் நமக்கு அளித்த பரிசு என்று தான் கூற வேண்டும்.
நான் எனது அம்மாவிடம், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளேன் என்று கூறிய போது. எனது கல்லூரியில் உள்ள பெண்கள் எல்லாம் வந்திய தேவனை போன்ற ஒருவனைத் தான் திருமணம் செய்ய ஆசைப்படுவார்கள் என்று கூறினார். அம்மாடியோவ்… அவர் என்ன அவ்வளவு பெரிய லவ்வர் பாயா பொன்னியின் செல்வன்? என்று கேட்டேன். அதன் பிறகு வரலாறு படிக்கும் நண்பனிடம் கேட்டேன், வந்திய தேவனை எப்படி புரிந்து கொள்வது என்று கேட்ட போது
ஐஏஎஸ் அதிகாரி தான் என்று கூறினார். ஐஏஎஸ் அதிகாரிக்கு எல்லாம் தெரியும். அது போல குதிரையேற்றம், போர் போன்ற எல்லாக் கலைகளையும் அறிந்திருக்க வேண்டும் என்று கூறினார்.
அவருக்கென தனி பிரிவு கிடையாது என்று கூறினார். வந்திய தேவன் ஒரு இளவரசன் ஆனால் அவனுக்கு நாடு கிடையாது. ஆனால் அவன் பேராசை கொண்டவன். அவனுக்கு எல்லா ஆசைகளும் உண்டு. பெண் ஆசையிலிருந்து பண ஆசை வரை எல்லா ஆசைகளும் உண்டு. ஆனால், மிகவும் நேர்மையானவன். இது தான் எனக்கு வந்திய தேவனை புரிந்துகொள்ள உதவியாக இருந்தது.
மேலும், ஒரு நாவலை படமாக்குவதில் சிக்கல் உள்ளது. ஏனென்றால், இந்த நாவலை படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதலிருக்கும். குறைந்தது 50 லட்சத்திற்கும் மேலான மக்கள் இந்த புத்தகத்தை படித்திருப்பார்கள். அனைவருக்கும் ஏற்றவாறு மணி சார் இந்த படத்தை மிக அழகாக உருவாக்கி இருக்கிறார் “என்றார்.
சரத்குமார் பேசும் போது,
“இந்த மேடையில் நிற்பது திரிஷா கூறியது போல புல்லரிக்கும் கணம் தான். கார்த்தி கூறியது போல சோழர்களைப் பற்றி இன்னும் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். கடல் பயணம் மேற்கொண்டு சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தியது சோழர்கள். எத்தனை படங்கள் நடித்திருந்தாலும், மணிரத்னம் படத்தில் நடிப்பது பெருமை. அதிலும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் நடித்திருந்தாலே பெருமை தான். அதன்படி பழுவேட்டையராக நடித்திருப்பதில் பெருமையடைகிறேன். வசனங்களை எப்படி பேசவேண்டும் என்று மணி சாரிடம் கேட்டால், நீங்கள் படித்து மட்டும் வாருங்கள். எப்படி நடிக்க வேண்டும் என்று நான் சொல்லித் தருகிறேன்.என்றார் .
இப்படத்தின் அறிவிப்பு வந்தபோதே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ரசிகர்களும் எந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்ற ஆர்வத்துடனும் படத்தின் ரிலீஸ் எப்போது என்ற ஏக்கத்துடனும் இருந்தார்கள். இப்போது அவர்களுக்கான பதில் கிடைத்துவிட்டது என நினைக்கிறேன்.
சோழர் சாம்ராஜ்யம் மிக பெரியது. கலிங்கம், கங்கை கொண்ட சோழபுரம் என பறந்து விரிந்த ஓர் சாம்ராஜ்யம். கடல் கடந்து ஆட்சி செய்யும் அளவிற்கு மாபெரும் ஒன்று. அப்போது, ஆமைகளை பின் தொடர்ந்து அதன்பின் வரும் மின்சாரத்தை வைத்து தான் சோழர்கள் ஒவ்வொரு தேசத்திற்கும் சென்று சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார்.
இப்படத்தில் நடிக்கும் ஒவ்வொருவரும் ஒருவருக்கு ரசிகர்களாக இருப்பார்கள். அப்படி நினைத்துக் கொண்டு தான் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். ஆனால், ஒவ்வொருவரும் என்ன கதாபாத்திரமாக இருக்க வேண்டுமோ அந்த பாத்திரமாகவே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். காந்தம் போல சொல்வார்கள் அப்படி தான் மணி சார் என்னை அழைத்தார். இப்படத்தை பான் இந்தியா படம் என்று கூறுங்கள். பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்த படம் என்று கூறுங்கள். ஆனால், இத்தனை கலைஞர்கள் ஒரே படத்தில் இணைந்து நடித்திருப்பது மணி சாரின் பொன்னியின் செல்வன் படத்தில் தான். நான் மணிரத்னம் சாரை பார்த்து பயந்து கொண்டிருந்தேன். ஆனால், சிங்கம் என்றால் அது மணி சார் தான். அவர் இப்படி செய்யுங்கள் என்று சாதாரணமாக கூறுவார். அதை உள்வாங்கி நடித்தாலே போதும்.” என்றார்.
விக்ரம் பிரபு பேசும்பொது,
“சிறு வயதில் தாத்தா பொன்னியின் செல்வன் புத்தகத்தை எடுத்து வா என்று கூறினார். அப்போது நான் கொண்டு வந்து கொடுத்தேன். இன்னும் நான்கு பாகம் இருக்கிறது அதையும் எடுத்து வாடா என்று கூறினார். அப்படிதான் எனக்கு பொன்னியின் செல்வனை தெரியும். இப்போது மணி சார் அழைத்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.
ஜெயம் ரவி பேசும்போது,
“எங்கள் ஒவ்வொருக்கும் பெருமைதான். இதை உங்களுக்கு வழங்குவதைவிட மகிழ்ச்சியான விஷயம் எதுவுமில்லை. ஒருமுறை மணி சாரின் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தவறிவிட்டது. அதற்காக என்னை திட்டுவதற்காக தான் அழைத்தார் என்று சென்றேன்.
ஆனால், நீ தான் பொன்னியின் செல்வனாக நடிக்க போகிறாய் என்று கூறினார். இந்த மேடையைவிட அவர் கூறிய அந்த தருணம் தான் புல்லரிக்கும் தருணமாக இருந்தது. பல பேரின் கனவு நனவாகி இருக்கிறது. எங்களுடைய கனவும் நனவாகியிருக்கிறது. பல லட்சம் பேர் இந்த புத்தகத்தை படித்திருக்கிறார்கள். பல ஆயிரம் பேர் இதைப் பற்றி பேசியிருக்கிறார்கள். ஆனால், இதை ஒரே ஆளாக திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் மணி சார். அவருக்கு தலை வணங்குகிறேன். அந்த ஒரு மனிதன் மணி சாரை நினைத்து பல காரணங்களால் மற்றவர்களால் செய்ய முடியாமல் போனதை தனி ஒருவனாக நடத்தி காண்பித்திருக்கிறார் “என்றார்.
இயக்குனர் மணிரத்னம் பேசும்போது,
“நான் கல்லூரி படிக்க ஆரம்பிக்கும்போது இந்த புத்தகம் படித்தேன். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் நெஞ்சை விட்ட நீங்கவில்லை. கல்கிக்கு முதல் நன்றி. இப்படம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிக்க வேண்டிய படம். நாடோடி மன்னன் படத்திற்கு பிறகு அவர் நடிக்க வேண்டியது. ஆனால், முடியாமல் போனதற்கான காரணம் இன்று புரிந்தது. எங்களுக்காக விட்டு சென்றிருக்கிறார். எவ்வளவு பேர் முயற்சித்திருக்கிறார்கள். நானும் 3 முறை 1980 களில் இருந்து முயற்சி செய்து இன்று தான் முடித்திருக்கிறேன். இங்கு உள்ளவர்கள் அனைவராலும் தான் இது சாத்தியமானது. இவர்கள் இல்லையென்றால், இது சாத்தியமில்லை. முக்கியமாக ஏ.ஆர்.ரகுமானுக்கு நன்றி” என்றார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசும்போது,
“30 வருடங்களாக எனக்கு பாஸ் மணிரத்னம் சார் தான். ஒருவருக்குள் இருக்கும் திறமையை எப்படி வெளியே எடுப்பது என்பதை நான் மணி சாரிடம் தான் கற்றுக் கொண்டேன். இப்படத்திற்கு இசையமைக்க பல இடங்களுக்கு சென்று ஆராய்ச்சி செய்தோம். அந்த சமயத்தில் கொரோனா ஊரடங்கு வந்துவிட்டது. அந்த காலத்திலும் அனைவரும் தங்களின் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றியிருக்கிறார்கள். ஆகவே, இது நம் எல்லோருடைய படம் என்று கூறவேண்டும்” என்றார்.
மற்றும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ,லைகா தமிழ்க்குமரன், திரிஷா ,ஐஸ்வர்ய லட்சுமி, ஆகியோரும் பேசினார்கள்.