‘நாட் ரீச்சபிள் —அடிக்கடி செல்போன் வழியாக கேட்கும் வார்த்தை. ஆங்கில சொல் .படத்தின் டைட்டில்.
தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ‘கிராக் ப்ரெய்ன் ‘ இதற்கு என்ன அர்த்தம் என்பதை கேட்டுத் தெரிந்து கொள்க.!!!
பாடல் முன்னோட்ட விழாவுக்கு வந்தவர் கே.ராஜன். சிறிய படங்களின் ஆதரவாளர். தமிழில் பெயர் வைக்கச்சொல்லி ஒரு காலத்தில் பேசி வந்தவர்.
தற்போது யூ டியூபர்களுக்கு கன்டென்ட் கொடுப்பவர்.
இந்த படத்தை இயக்கியிருப்பவர் சந்துரு முருகானந்தம். ஒளிப்பதிவு சுகுமாரன் சுந்தர் .சிறப்பான ஒளிப்பதிவு. இசை சரண்குமார்.காலத்திற்கேற்ப இசை .கேட்கும்படியாக இருந்தது.
விஸ்வா ,சுபா தேவராஜ் ,தான்யா .இன்னும் சிலர் நடிகர்கள் பட்டியலில்.!
திரில்லர் வகை .இதே பெயரில் ஒரு குறும் படம் வெளியாகியிருக்கிறது.
இந்த விழாவில் பேசியவர்களில் சிலர் தங்களுக்கு தெரிந்த தொழில் வித்தைகளை சொன்னார்கள். குறிப்பாக தியேட்டர்களை குறி வைக்காமல் ஓடிடி போன்ற தளங்களில் கண் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.
கே.ராஜன் பேசியதுதான் வழக்கம் போல கைதட்டல் ரகம்.
பெரிய நடிகர்களை வாரி விட்டு விழச்செய்து அடித்தார்.சரமாரி கல்வீச்சு என்றே சொல்லலாம்.
வரிசைப் படுத்திப் பார்க்கலாம்.
“மும்பையிலிருந்து வருகிற ஒரு பிரபல நடிகை தன்னுடைய வீட்டிலிருந்து ஏர்போர்ட் (மும்பை.) செல்கிறவரை ஏழெட்டு பவுன்சர்களை கூட்டிக்கொள்கிறார். அப்படி பயப்படுகிற அளவுக்கு என்னம்மா தப்பு செய்தே ? சென்னைக்கு வந்த பிறகு ஏர்போர்ட்டிலிருந்து ஹோட்டலுக்கு வருகிற வரை இங்கேயும் பவுன்சர்கள் .ஏழு அசிஸ்டண்டுகள். எல்லாமே தயாரிப்பாளரின் காசில்.!”
“கோடிகளில் சம்பளம் வாங்குகிற பெரிய ஹீரோக்கள் .தனி கேரவன். மற்றும் பவுன்சர்கள் .கேரவனில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட்டுகள் போவதற்கு கூடவே எட்டு பவுன்சர்கள். 150 அடி தூரம் போவதற்கு இவ்வளவு பாதுகாப்பா?அப்படி என்ன தப்பு செய்தே ?கேரவானுக்குள் குஷால் வேலையெல்லாம் நடக்குதாமே!”
“ஒரு டைரக்டரும் இப்போது பவுன்சர்கள் வைத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். அப்படி என்ன தப்பு பண்ணினாரோ தெரியவில்லை.”என பேசி அலற விட்டிருக்கிறார்.
அடுத்த விழாவுக்கும் இவரை கூப்பிடுவார்கள். பரபரப்பாக பேசி கன்டென்ட் கொடுக்கிறார்.!
இன்னொரு நல்ல காரியம் விழாவுக்காக இவர்க்கு கொடுக்கப்படுகின்ற பணத்தை மேடையிலேயே ஏழைகளின் கல்விக்கு கொடுத்து விடுகிறார். பெருந்தலைவர் காமராஜின் பெயரில் கான்வென்ட் நடத்தி வருகிறார். ஏழைகளுக்கு அதிக சலுகைகள் இவரது பள்ளியில்.!