லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக ‘நா ரெடி’ பாடல் இன்று வெளியாகியிருக்கிறது. லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் விஷ்ணு எடவன் என்பவர் எழுதியுள்ள இப் பாடலை விஜய், அனிருத், அசல் கோளாறு ஆகியோர்இணைந்து பாடியுள்ளனர்
. அதேசமயம் இப் பாடலில் இடம்பெற்றுள்ள ‘பத்தாது பாட்டில் நான் குடிக்க அண்டாவை கொண்டா சியர்ஸ் அடிக்க’, ‘அடிதடி வெட்டுக்குத்து எங்கள் வீட்டு சமையல் அறை வர கலந்திருக்கு’, ‘மில்லி உள்ளப்போனா போதும் கில்லி வெளில வருவான் டா’ போன்ற பாடல் வரிகளை வைத்து விஜய்யை நெட்டிசன்கள் பலரும் விளாசித்தள்ளி வருகின்றனர்.
இதற்கு காரணமே விஜய் சமீபத்தில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை சந்தித்ததும், அவர்களுக்கு செய்த அட்வைஸும்தான்.
விழா மேடையில் விஜய் பேசிய போது, பெரியார், அம்பேத்கர், காமராஜர் போன்ற தலைவர்களை படியுங்கள் என கூறினார். அவர்களை படிக்க சொல்பவர் திரையில் நடிக்கும்போது எப்படி இருக்க வேண்டும். இப்படியா வாயில் சிகரெட்டை வைத்துக்கொண்டு பாட்டில் பத்தாது அண்டாவில் குடிக்க வேண்டும்,
மில்லி உள்ளப்போனா என்று பாடுவது? என அறிவுரை வழங்கி முதல் தலைமுறை வாக்காளர்களை தன் பக்கம் திருப்ப நினைக்கும் விஜய் அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர அவர்கள் வழி தவறி செல்வதற்கு காரணமாக இருந்துவிடக்கூடாது என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கில் விஜய் புகைபிடிப்பது போன்று இடம் பெற்று இருந்ததை பாமக தலைவர் அன்புமணி கடுமையாக விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.