பத்திரிகையாளர் கவிதாவின் தயாரிப்பில், உருவாகியிருக்கும் படம், ராபர். பெண்கள் பிரச்னைகளை மைய்யமாக கொண்டு உருவாகியிருக்கும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், தயாரிப்பாளர் தாணு, தியாகராஜன், பாக்யராஜ், அம்பிகா,ரம்பா உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
ராபர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கவிதா பேசும்போது…,
எனக்கு இந்த மேடை புதியதல்ல. எடுத்தவுடனேயே தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்ற எண்ணமில்லை. இதற்கு முன்பு 3 குறும்படம் எடுத்திருக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு கட்டத்திலும் இந்த மேடையில் இருப்பவர்கள், முன்னாடி இருப்பவர்கள், மேடைக்கு பின்னால் இருப்பவர்கள் அனைவரும் இருந்திருக்கிறீர்கள்.
விமர்சனங்களும், வரவேற்பும் ஒருவரை அடுத்த தளத்திற்கு கொண்டு போகும். அதுபோல் என்னை ஊக்குவித்து இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கும் உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி. எப்போதும் கனவு இருக்க வேண்டும். அந்த கனவு மெய்ப்பட கடுமையாக உழைக்க வேண்டும், நிறைய போராட வேண்டும். ஊடகத் துறை எனக்கு 22 வருடத்திற்கான உழைப்பை கொடுத்திருக்கிறது.
தியாகராஜன் சாரிடம் ஆரம்பித்து நான் பலரின் வழிகாட்டுதலில் வளர்ந்திருக்கிறேன். பாக்யராஜ் சார், அம்பிகா மேடம், ரம்பா மேடம் மேடைக்கு மேடை என்னைப் புகழ்ந்து பேசியிருக்கிறார்கள். என் வீட்டில் உள்ளவர்கள் எனக்கு எப்படி உறுதுணையாக இருந்து இந்தளவிற்கு கொண்டு வந்தார்களோ, அதேபோல் இந்த மேடையில் இருப்பவர்களும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஒரு ஊழியர் என்ன முயற்சி எடுத்தாலும் எந்த நிறுவனம் இவ்வளவு சுதந்திரம் கொடுக்கும்? நான் முதன் முதலில் குறும்படம் எடுக்க நினைத்த போது, பத்திரிகையாளராக வந்தோம், சென்றோம், வேலையைப் பார்த்தோம் என்றில்லாமல் நான் குறும்படம் எடுக்க போகிறேன் என்று என் பாஸிடம் கூறினேன். உடனே ரூ.20 ஆயிரம் கொடுத்து ஊக்குவித்தது தினமலர் தான். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூறியாக வேண்டும்.
அதன் பிறகு, சென்சார் போர்டு உறுப்பினராக வாய்ப்பு கிடைத்தது அதையும் என் பாஸிடம் கூறினேன். அவர் அதற்கும் எனக்கு உறுதுணையாக இருந்தார். பிறகு சென்சார் போர்டு உறுப்பினர் ஆனேன். என்னுடைய ஒவ்வொரு முயற்சியிலும் தினமலர் நிறுவனமும் இங்கிருக்கும் அத்தனை பேரும் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். அதற்கு, எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
நான் ஒரு படம் தயாரித்து இருக்கிறேன். அந்த விழாவிற்கு தினமலர் சார்பாக நீங்கள் வரவேண்டும் என்று பாஸிடம் கேட்டபோது 38 ஆண்டுகளாக ஊழியராகஇருந்து இப்போது முதன்மை மக்கள் தொடர்பாளராக இருக்கும் கல்பலதா வை அழைத்து செல். என்று கூறினார்கள். இவர் என்னுடைய குறும்படத்திற்கும் சிறப்பு விருந்தினராக வந்தார் அவருக்கும் மிக்க நன்றி.
ராபர் படத்தை எடுத்துக் கொண்டால், ஆனந்த் மற்றும் இப்படக் குழுவினரை விதார்த் மூலமாக தான் தெரியும். ஒரு சிறிய படம் தான் மக்கள் இடையே பெரிய விமர்சனத்தையும் வியாபார ரீதியான வளர்ச்சியையும் கொடுக்கிறது. இங்கு இருக்கும் தயாரிப்பாளர்கள் இப்படத்தை நான் எப்படி கொண்டு சேர்க்கப் போகிறேன்? எப்படி வெற்றியடைய வைக்கப் போகிறேன் என்று மிகவும் கண்கலங்குவார்கள். ஒரு படம் தயாரித்து வெளியிடுவதில், கலைஞர்களை அழைப்பதில் இருந்து, நிகழ்ச்சி வடிவமைப்பு சமூக வலைத்தளங்களில் கொண்டு சேர்ப்பது என்று அந்த படம் வெளியாகும் வரை எவ்வளவு வேலைகள் பின்னால் இருக்கிறது?. பெரிய படம், பெரிய நடிகர்கள் என்றால் நாம் செய்திகளை சேகரிப்போம் ஆனால் ஒரு சிறிய படத்திற்கு யார் இதை செய்வார்கள்? அந்த வகையில்,
ராபர் படம் பெரிய அனுபவத்தை எனக்கு கொடுத்தது. ஆகையால், இனி சிறிய படத்திற்கு நான் இறங்கி வேலை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். வந்திருந்த அனைவருக்கும் நன்றி. ராபர் படம் வெற்றியடைய வேண்டிக் கொள்கிறேன் என்றார்.
நடிகர் சத்யா பேசும்போது,
நான் பாலு மகேந்திராவின் மாணவன். அவர் தான் என்னை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இன்று என்னுடன் அவர் இல்லை. ஆனால், தியாகராஜன் சார், பாக்யராஜ் சார், அம்பிகா மேடம், ரம்பா மேடம் இந்த மேடையில் இருக்கிறார்கள். இவர்கள் மூலமாக பாலுமகேந்திரா சாரை பார்க்கிறேன். அவரிடம் நடிப்பு கற்றுக் கொண்டு பல கம்பெனிகளில் ஏறி இறங்கியிருக்கிறேன். ஆனால், பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. கவிதா அக்கா சிறுவயதில் டியுஷன், பள்ளி, கல்லூரி அனைத் திலும் சேர்த்து விட்டார். பாலுமகேந்திரா சாரிடமும் மாணவராக அவர் தான் அறிமுகப்படுத்தினார். அதேபோல், அக்கா தான் ஆனந்த் அண்ணாவிடமும் இவன் என்னுடைய தம்பி, உபயோகப்படுத்த முடிந்தால் உபயோகப்படுத்தி கொள் என்றார். அதன்பிறகு, மெட்ரோ படத்தில் எதிர்மறையான பாத்திரம் கொடுத்தார். கோடியில் ஒருவன் படத்தின் போது, ராபர் படத்தைப் பற்றி ஒரு வரி கூறினார். எனக்காகவும், அவருடைய இணை இயக்குனர் பாண்டிக்காகவும் எழுதப்பட்ட கதை தான் ராபர்.
மார்ச் 14 அன்று உலகமெங்கும் வெளியாகிறது. சக்தி அண்ணா கிடைத்தது எங்களுக்கு மிகப்பெரிய வரபிரசாதம். சிறிய படம், பெரிய படம் என்று பார்க்காமல் நல்ல படத்திற்கு ஆதரவு அளித்து வருகிறார். இப்பவும் என் வீட்டில் சினிமாவில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், என் அண்ணன் மட்டும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்.என்றார்
நடிகர், இயக்குனர் தியாகராஜன் பேசியபோது,
கவிதா என்னிடம் வந்தபோது சின்ன பெண். அவரிடம் இருந்த வேகமும், துடிப்பும். இவர் வேறு ஒரு தளத்திற்கு செல்லும் ஆள் என நான் நினைத்ததுண்டு. அதன் பின் அவர் ஒவ்வொரு துறையாக மாறி, பத்திரிகையாளர், சென்சார் போர்ட் மெம்பர் என இப்போது தயாரிப்பாளராக இருப்பது ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது அனைத்து பெண்களையும் ஊக்குவிக்கும் ஒரு விஷயமாக பார்க்கிறேன். இப்படத்தின் ட்ரைலரை பார்த்தேன் மிக சிறப்பாக இருந்தது. இம்ப்ரெஸ் பிலிம் மேக்கர்ஸ் ஒரு இம்ப்ரெஸ்ஸிவான ட்ரைலரை செய்திருக்கின்றனர். இப்படத்தில் நடித்த சத்யா மற்றும் அத்தனை கலைஞர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். அழகான ஒளிப்பதிவு, இசை என படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக தங்கள் வேலையை செய்துள்ளனர்.
கவிதா மேலும் பல சின்ன பட்ஜெட் படங்கள் எடுக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் அனைவரும் இந்த படத்தை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி, என்றார்.
நடிகை அம்பிகா பேசியபோது,
இந்த விழாவுக்கு அழைத்த கவிதாவுக்கு நன்றி. எனக்கு நிறைய பத்திரிகை நண்பர்கள் உள்ளனர். அவர்களை இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி. எனக்கு பிடித்த பலரில் ஒருவர் தான் கவிதா. ஒரு பெண்ணாக இருந்து படத்தை தயாரித்திருக்கிறேன் என்று அவர் சொன்னது எனக்கு பெருமையாக இருந்தது. தியாகு சொன்னது போல், சிறிய படங்கள் பெரிய அளவில் வெற்றியடைய வேண்டும். ஆனால் இந்த படம் எனக்கு சிறிய படமாக தெரியவில்லை. ஒரு பெரிய பட்ஜெட் படத்திற்கு செய்ய வேண்டிய செலவை குறைத்து இந்த படத்தை ஒரு பெரிய படமாக தான் தயாரித்திருக்கிறார்.
இந்த படத்தின் ட்ரைலரில் வரும் ஒரு வசனம் “இங்க இருக்க எல்லாரும் கெட்டவங்க தான். அதுல ரெண்டு ரகம். ஒன்னு மாட்டிக்கிறவுங்க, இன்னொன்னு மாட்டிக்கா தவங்க” என்ற வசனம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்று நான் கவிதாவிடம் சொன்னேன். அதுமட்டுமல்லாமல், இந்த கதைக்காக அவர்கள் தேர்வு செய்துள்ள கதாபாத்திரங்களும், நடிகர்களும் மிகவும் பொருத்தமாக இருந்தார்கள். இதில் நடித்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். இப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்க வேண்டும் என்பது நண்பர்களாகிய உங்கள் அனைவரின் கைகளில் உள்ளது. இதை ஒரு கடமையாக எடுத்து இப்படத்தை வெற்றிப்படமாக்குவோம், நன்றி என்றார்.
தயாரிப்பாளர் எஸ். தாணு பேசும்போது,
கவிதா என் மகள் மாதிரி. அவருடைய தமிழ் ஆர்வம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அவர் நேரில் பேசினால், சொல் புதிதாக இருக்கும். சொல்லின் பொருள் புதிதாக இருக்கும். சொல்லின் சுவை பெரிதாக இருக்கும். அப்படிப்பட்டவர் ஒரு படத்தை தயாரித்திருக்கிறேன் என்று நேற்று முன்தினம் தான் கூறினார். முன்பே கூறியிருந்தால் பொருளாதாரத்தில் நிறைய மிச்சம் பண்ணி கொடுத்திருப்பேன் என்றேன்.
என் சகோதரன் தான் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். ஆகையால், அவரை வந்து நீங்கள் வாழ்த்த வேண்டும் என்றார். நீ எங்க சொன்னாலும் நான் வருவேன் என்றேன். ஒரு பெண்ணாக, பத்திரிக்கையாளராக இருந்து கொண்டு, பத்திரிக்கை உரிமையாளர்களுக்கு மிகவும் பாத்திரமான பெண்மணியாக தான் இந்த பெண்ணை நான் பார்க்கிறேன். தினமலர் ரமேஷ் சாரும், ஆதிமூலம் சாரும் இந்த பெண்மணி மூலமாகத்தான் அவர்களின் எண்ணங்களையும், எழுத்துக்களையும் கூறுவார்கள். அவர்களுடைய கோவில் திருப்பணிக்கு உற்றத் துணையாக இந்த பெண்மணி வாய்த்திருக்கிறார். அப்படிப்பட்டவர் இப்படத்தை தயாரித்திருப்பது சிறப்பான ஒன்று. பாக்யராஜ் சாரை நான் என்றென்றும் போற்றி புகழக்கூடியவன். அவர் பக்கத்தில் அமர்ந்திருக்கும் ரம்பாவின் கணவர் 2000 கோடிக்கு சொந்தக்காரர். அவர் இந்த மேடையில் அமர்ந்திருக்கும் போது என் கண்கள் பனிக்கிறது.
ரம்பாவின் கணவர் இந்திரன் கடந்த வாரம் எனக்கு போன் செய்து, அப்பா உங்கள் ஆசீர்வாதத்தில் என் மனைவியுடன் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என் மனைவிக்கு வீட்டிலேயே இருப்பது உறுத்தலாக இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால், அவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை என்றார். நல்ல கம்பெனிகளை நான் சொல்கிறேன். அதற்குள் நீ அவசரப்பட்டு படம் எடுத்து விடாதே என்று கூறினேன். ரம்பா, சினிமாவில் உன் வரவு நல்வரவாக இருக்கும் என்று அப்பாவாக வாழ்த்துகிறேன். அம்பிகா மேடமை என் படங்களில் நடிக்க வைக்க பலமுறை முயன்று நடக்காமல் போய்விட்டது. ஏதாவது காரணத்தினால் ஒரு படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. தியாகராஜன் சார் தானாக முன் வந்து அவர் மகனை வண்ண வண்ண பூக்கள் படத்திற்காக கொடுத்தார். அந்த படம் தேசிய விருது வென்றது. பிரஷாந்த் என் குடும்பத்தில் ஒருவர். சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேல் இவ்வளவு அருமையாக பேசுவார் என்று நினைக்கவில்லை. படத்தின் ஒவ்வொரு ஃபிரேமாக எடுத்து பேசும் அளவிற்கு ஒன்றிவிட்டார். அவர் இந்த படத்தை விநியோகிப்பது சால சிறந்தது. படத்தின் நாயகன் வருங்காலத்தில் உயர் சிற்பியாக வருவார் என்று வாழ்த்தி, வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன் என்றார்.
நடிகை ரம்பா பேசும்போது,
நான் ரகசியமாக வைத்திருந்ததை தாணு சார் எல்லோர் முன்னாடியும் போட்டு உடைத்து விட்டார். நீண்ட நாட்களுக்கு பிறகு எனக்கு தெரிந்தவர்கள் அனைவரையும் ஒன்றாக இங்கு பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தயாரிப்பாளர், இயக்குனர் என்று யாராக இருந்தாலும் எங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது பத்திரிகையாளர் தான். அவர்கள் பின்னாடி இருந்து கொண்டு எங்களை முன்னாடி கொண்டு வந்து ஆதரவு தருவார்கள். அப்படி பெண் பத்திரிகையாளராக இருந்து, ஒவ்வொரு படியாக சொந்த உழைப்பில் ஒரு படத்தை தயாரித்திருப்பது பெருமையாக இருக்கிறது. கவிதா எப்போது அழைத்தாலும் நான் வருவேன். இந்த படம் சிறிய படம், பெரிய படம் என்று இல்லை, எனக்கு நல்ல படமாகத் தான் தோன்றுகிறது. டிரைலர் பார்க்கும் போதே கதை, திரைக்கதை அனைத்தும் நன்றாக இருக்கிறது. எல்லா படத்திற்கும் ஆதரவு தருவது போல் இந்த நல்ல படத்திற்கும் ஆதரவு கொடுத்து மக்களிடம் சேர்த்து வெற்றி படமாக கொண்டு வருவீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. படகுழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
இயக்குனர் பாண்டி பேசியபோது,
வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். நிறைய பேச நினைத்தேன் ஆனால் ஆனந்த் சார் பேசியபின் அதிகம் உணர்ச்சி வசபட்டுவிட்டேன். ஒருவருக்கு படம் கிடைப்பது மிக கடினமான ஒரு விஷயம். ஆனால் அது ஆனந்த் சாரால் மிக எளிமையாக கிடைத்தது. நான் அவரிடம் என் வேலையை மட்டுமே பார்த்தேன். அப்போது ஒருநாள் படம் பண்றியா? என கேட்டார். நான் கதை எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றேன். அவர் அப்போது என்னுடைய கதையை இயக்கு என்று தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என அனைவரையும் தேர்வு செய்து கொடுத்துவிட்டார். இப்போது, படத்தை பற்றி ஆனந்த் சார் பேசிவிட்டார். நான் பலருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
பாலாஜி கனகராஜ், அழகு சுந்தரம், மும்பை பவுல், பாலாஜி விஜய், தல, சுமன், ஹரிஷ், உமேஷ், சரவணன், சீனி, சிவ பாலன் மற்றும் என் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் எதையும் எதிர்பார்க்காமல் இப்படத்தில் நடித்தனர். அதனால் தான் படத்தின் பட்ஜெட்டை குறைத்து ஒரு பெரிய படம் அளவிற்கு இப்படத்தை மாற்ற முடிந்தது.
மேலும் இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் சத்யா, டேனி, ஜெ.பி., தீபா, பாண்டியன், சென்றாயன், நிஷாந்த், மாதவ், சாய் தினேஷ், யுவராஜ், ராதா கிருஷ்ணன், தீரன், யாஷிதா, சோபியா மற்றும் இந்த விழா நாயகனாகிய இசையமைப்பாளர் ஜோகன் சிவனேஷ். நான் சென்னை வந்த புதிதில் அவரின் அறையில் தான் தங்கி வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தேன். அவர் தான் எனக்கு ஆனந்த் சாரையும் அறிமுகம் செய்து வைத்தார். ஒளிப்பதிவாளர் உதயகுமார் சார், அவருக்கு நான் துணை ஒளிப்பதிவளராக வேலை செய்தேன். அவர் என் படத்திற்கு ஒளிப்பதிவளராக வந்ததும் சிறிய தயக்கம் இருந்தது. ஆனால் நான் அவரிடம் வேலை செய்ததை விட அதிகமான வேலையை அவர் எனக்காக செய்துள்ளார். ஒரு படத்தை சொன்ன தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒளிப்பதிவாளர் ஈடு கொடுக்க வேண்டும். அந்த வகையில் அவர் எனக்கு கிடைத்த வரமாக தான் பார்க்கிறேன். எடிட்டர் ஸ்ரீ காந்த் சாருக்கு நன்றி, அவர் எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும் நான் ஃபோன் செய்தவுடன் எனக்கான வேலையை செய்து கொடுப்பார்.
நாங்கள் இப்படத்தை அதிகம் லைவ் லொகேஷனில் தான் படமாக்கினோம். அப்போது, அங்கு தேவைப்பட்ட பொருட்களை செய்து கொடுத்து படத்தின் பட்ஜெட்டை குறைத்துக் கொடுத்த கலை இயக்குனர் சரவணன் சார் அவர்களுக்கு நன்றி.
இப்படத்தில் அதிக சண்டைக்காட்சிகள் உள்ளது. அதை லைவாக எடுத்துக் கொடுத்த ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் பாடல் பாடி நடன இயக்கம் செய்த ஹரிஹரன் சாருக்கும் நன்றி. பாடலாசிரியர் அருண் பாரதி சார் அவர்களின் வரிகள் மிக கட்சிதமாக பொருந்தியிருந்தது. மற்ற பாடலாசிரியர்களான லோகன், வீரன், சாரதி, தாரணி மற்றும் இப்பாடலை பாடிய அந்தோனி தாசன் அவர்களுக்கும் நன்றி. ப. இப்படத்தின் மக்கள் தொடர்பாளர் திரை நீதி செல்வம் சாருக்கு நன்றி
மேலும் என்னுடன் பணியாற்றிய என் டீம், ஷாம், அருண், பிரேம், கௌதம், மஞ்சுநாத், அனூப், விஷால், பாலா, முகிலன், தினகரன், பார்தா, செல்வா, பாபு மற்றும் ப்ரீத்தி அனைவருக்கும் நன்றி. நான் இந்த மேடையில் இருக்க காரணமான என் குரு ஆனந்த் சார் அவர்களுக்கு நன்றி. அவர் எனக்கு கிடைத்த வரமாக பார்க்கிறேன். மேலும் இப்படத்தில் எங்கும் பெயர் வராமல் இப்படத்தை கொண்டு சேர்க்கும் ஜெய் கார்திக் அவர்களுக்கு நன்றி. என்று பேசினார்
விழாவில், ராபர் இசைத்தகட்டை தாணு, தியாகராஜன், பாக்யராஜ் இருவரும் வெளியிட அம்பிகா, ரம்பா இருவரும் பெற்றுக் கொண்டார்கள்..
விழாவில், பெண் பத்திரிகையாளர்களுக்கு மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்த நினைவு பரிசை அம்பிகா ராதா இருவரும் சேர்ந்து வழங்கினர்.. மொத்ததில் ராபர் இசை விழா மகிழ்ச்சி யும் நெகிழ்ச்சியாக நிறைவடைந்தது.. படம் வரும் வெள்ளி கிழமை 14ம் தேதி வெளியாகிறது..