லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்திய இசைஞானி இளையராஜா இன்று காலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில்
உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் தங்கம் தென்னரசு அவரை சால்வை அணிவித்து வரவேற்றார்., மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பா.ஜ.க. கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் திரைத்துறையினர் இளையராஜாவை வரவேற்றனர் .இதை தொடர்ந்து இளையராஜா சென்னை விமான நிலைய செய்தியாளர்களிடம் கூறியதாவது,” மிகவும் மகிழ்வாகவும் கனிந்த இதயத்தோடும் மலர்ந்த முகத்தோடும் நீங்கள் எல்லோரும் என்னை வழியனுப்பி வைத்தீர்கள். இறைவன் அருளால் இசை நிகழ்ச்சியின் அரங்கேற்றம் வெற்றிகரமாக நடந்துள்ளது. நான் அங்கே சென்றதும் நேரடியாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தான் நேரம் இருந்தது. விதிகளை மீறாமல், அனைவரும் ஒன்றிணைந்து எல்லோருடைய கவனமும், ஒரு சுவரத்தை வாசிக்கும் போது, கவனம் சிதறாமல், அந்த சரணத்தில் தான் இருந்தது. இது பார்வையாளர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சிம்போனி நான்கு பகுதிகளை கொண்டது. அந்த முதல் மூவ்மெண்டில் இருந்து நாலாவது மூவ்மெண்ட் முடியும் வரை யாரும் கைதட்ட கூடாது. அதுதான் விதிமுறை. இசை ரசிகர்களும் பார்வையாளர்களும், முதல் மூவ்மெண்ட் முடிந்ததும் உற்சாகமாக கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
இது தமிழக மக்கள் எனக்கு அளித்த ஆதரவால் தான் இதை போல் சிறப்பாக நடத்தி முடிக்க முடிந்தது. அதற்காக தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி. நான் லண்டன் செல்வதற்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரடியாக என்னை வந்து சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு நன்றி. இப்போது என்னை அரசு மரியாதையுடன் முதல்வர் என்னை வரவேற்றது, மனம் நெகிழச் செய்தது.சிம்பொனி இசையை அனைவரும் கேட்க வேண்டும். சிம்போனி இசையை யாரும் டவுன்லோட் செய்து கேட்காதீர்கள். அதனை நேரில் உணர வேண்டும். அந்த நிகழ்ச்சி நம் மண்ணிலும் நடக்கும். அதுவரை காத்திருக்கவும். இசை ரசிகர்கள் என்னை இசை தெய்வம் என்று அழைக்கின்றனர். நான் சாதாரண மனிதர் தான். நான் பண்ணை புறத்திலிருந்து புறப்படும் போது வெறும் காலில் தான் புறப்பட்டு வந்தேன். நமது இளைஞர்கள் இதை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு, அவரவர்கள் துறையில் மென்மேலும் வளர வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.இவருக்கு 82 வயது ஆகிவிட்டது இனிமேல் என்ன பண்ணப் போகிறார் என்று நினைத்து விடாதீர்கள். இது ஆரம்பம் தான். இன்னும் இருக்கிறது. லண்டனைத் தொடர்ந்து
ஜெர்மனி பிரான்ஸ் துபாய் உள்ளிட்ட 13 நாடுகளில் சிம்போனியை அரங்கேற்ற உள்ளேன். அதற்கான ஏற்பாடுகள் தயாராகி கொண்டு இருக்கிறது. இந்த இசை உலகெங்கும் எடுத்துச் சொல்லப்படும்.இவ்வாறு அவர் கூறினார் அதைத்தொடர்ந்து அவரிடம் பிரதமரை சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு, கண்டிப்பாக நான் பிரதமரை விரைவில் சந்திப்பேன்” .இவ்வாறு இளையராஜா தெரிவித்தார்.
முன்னதாக இளையராஜாவை அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்தி வரவேற்று, அவர் இந்தியாவுக்கே பெருமை என பாராட்டினார். அது போல் பாஜக சார்பில் கரு நாகராஜன், விசிக சார்பில் வன்னியரசு உள்ளிட்டோர் இளையராஜாவை வரவேற்று வாழ்த்தி பேசினர். இசை உலகிற்கு ஏராளமான சாதனைகளை செய்துள்ள இளையராஜா மற்றொரு சாதனையான சிம்பொனியை தனது கனவாகவே கருதி வந்தார். அந்த வகையில் அவர் 35 நாட்களில் சிம்பொனியை எழுதி முடித்து அதற்கு வேலியண்ட் என பெயரிட்டிருந்தார்.இந்த சிம்பொனியை உலகின் சிறந்த இசைக் குழுவினரான ராயல் பிலார்மோனிக் இசைக் குழுவினருடன் இந்திய நேரப்படி நேற்று முன் தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு அரங்கேற்றினார். ஈவென்டிம் அப்பல்லோ எனும் அரங்கில் அவர் சிம்பொனியை அரங்கேற்றியதை ரசிகர்கள் உற்சாகமாக கண்டு களித்தனர். சிம்பொனி என்பது ஒரே நேரத்தில் பலவிதமான இசைக் கருவிகளை இசைப்பதுதான். இதனால் ஒவ்வொரு இசைக் கலைஞர்களுக்கும் இளையராஜா தனித்தனி குறிப்புகளை கொடுக்க வேண்டும். இதுதான் இந்த சிம்பொனியில் உள்ள சிரமமே! நேற்று முன் தினம் சுமார் ஒன்றரை மணி நேரம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அதில் 45 நிமிடங்கள் சிம்பொனி இசைக்கப்பட்டது. சிம்பொனி இசையை மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகியோர் அரங்கேற்றியிருந்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது