தென்னிந்திய திரையுலகில் 2000களில் தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பிஜேபியின் அபிமானியான நடிகை சௌந்தர்யா, அந்த கட்சிக்கு வாக்கு சேகரிக்க பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ள கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி தனியார் விமானத்தில் சென்ற போது, விமான விபத்தில் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். சௌந்தர்யா உயிரிழந்த போது அவர் கர்ப்பமாக இருந்தார் என்றும் கூறப்பட்டது.. இந்த விபத்தில் அவரும் அவரது சகோதரரும் உயிரிழந்தார். சௌந்தர்யாவின் மரணம் தென்னிந்திய திரையுலகில் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சௌந்தர்யாவின் மரணத்தில் ஆந்திர நடிகர் மோகன் பாபுவுக்கு தொடர்பு இருப்பதாக, ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்ட காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.தெலுங்கானா கம்மம் மாவட்டம் சத்யநாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிட்டிமல்லு, சௌந்தர்யா மரணத்தின் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதாக சந்தேகத்தை கிளப்பியுள்ளார்
மேலும் சவுந்தர்யாவுக்கு ஜல்பள்ளி கிராமத்தில் 6 ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தை வாங்க மோகன் பாபு முயற்சித்திருக்கிறார்.ஆனால் அந்த நிலத்தை விற்பனை செய்ய சவுந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் மறுத்திருக்கிறார். இந்த நிலையில் சவுந்தர்யாவின் மரணத்திற்கு பிறகும் அந்த நிலத்தை விற்பனை செய்யுமாறு அமர்நாத்திற்கு அழுத்தம் கொடுத்த மோகன் பாபு, அந்த நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கிறார். எனவே இந்த நிலத்தை மீட்டு ஆதரவற்றோர், ராணுவத்தினர், போலீஸார் ஆகியோரின் நலனுக்கு வழங்க வேண்டும் என தனது புகாரில் சிட்டிமல்லு குறிப்பிட்டிருக்கிறார்.இதன் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதா என்பதை காவல்துறை முழுமையாக விசாரிக்க வேண்டுமே என கம்மம் ஏசிபி மற்றும் கம்மம் கலெக்டரிடம் புகார் கடிதம் அளித்துள்ளார்.
மோகன் பாபு மீது நேரடியாக புகார் அளிக்கப்பட்டுள்ளதால் இது திடுக்கிடும் செய்தியாக மாறியுள்ளது. மேலும் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளதால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ‘நடிகை சௌந்தர்யா மரணம் குறித்து தவறான தகவல்கள் பரவி வருகிறது’ என சௌந்தர்யாவின் கணவர் ரகு விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “கடந்த சில நாட்களாக மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஹைதராபாத்தில் உள்ள சொத்து குறித்து ஒரு தவறான செய்தி பரவி வருகிறது. சொத்து தொடர்பாக பரவி வரும் ஆதாரமற்ற செய்தியை நான் மறுக்க விரும்புகிறேன்.மோகன் பாபு, மறைந்த எனது மனைவி சௌந்தர்யாவிடமிருந்து சட்டவிரோதமாக எந்த சொத்தும் வாங்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறேன். எனக்குத் தெரிந்தவரை, நாங்கள் அவருடன் எந்த நில பரிவர்த்தனையும் செய்யவில்லை.கடந்த 25 ஆண்டுகளாக மோகன் பாபுவை நான் அறிவேன். மேலும் அவருடன் வலுவான மற்றும் நல்ல நட்பைப் பகிர்ந்து வருகிறேன்.
எங்கள் குடும்பங்கள், என் மனைவி, என் மாமியார் மற்றும் மைத்துனர் எப்போதும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் ஆழமான பிணைப்பை அவருடன் பராமரித்து வருகின்றனர்.இந்த விஷயத்தில் மோகன் பாபுவை நான் மதிக்கிறேன். உங்கள் அனைவருடனும் உண்மையைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். மோகன் பாபுவுடன் எங்களுக்கு எந்த சொத்து பரிவர்த்தனையும் இல்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.இது ஒரு தவறான செய்தி என்பதால், தவறான செய்திகளைப் பரப்புவதை நிறுத்துமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.