ஏறத்தாழ 40 மில்லியனை கடந்து விட்ட ‘ஜிங்குச்சா ‘பாட்டுக்குப் பிறகு இன்று 21 -ம் தேதி இறக்குமதி செய்யப்பட்டுள்ள ‘சுகர் பேபி ‘ பாடல் இசைப்புயலின் ‘ஸ்லோ பாய்சன் ‘ வகையாக இருக்கிறது. ரசிகர்கள் மொழியில் சொல்வது என்றால் போதை ஏற்றம் !
திரிஷாவை மையப்புள்ளியாக வைத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ள பாடல் கதையுடன் ஒன்றியதாக இருக்குமா ,அல்லது கவர்ச்சிக்காக கடத்தப்படுவதாக இருக்குமா ? அல்லது “இதுதான் திரிஷாவின் கேரக்டர் ” என்பதை நமக்கு அறிமுகம் செய்வதாக இருக்குமா ?
சுகர் பேபி என்கிற சொல்லுக்கு அர்த்தமே வேறு. ஒரு இளம் பெண் பணத்துக்காக முதியவரது அன்புக்குரியவளாக இருப்பதைதான் சுகர் பேபி என்பார்கள். எனக்குத் தெரிந்தவரை சுகர் பேபி என்கிற கேரக்டர் இந்திய சினிமாவில் நடமாடியதாக தெரியவில்லை. ஆங்கிலப்படங்களில் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறார்கள் .
தக் லைஃப் என்கிற குண்டர்களைப் பற்றிய முரட்டுக் கதையில் வித்தியாசமான முகமூடியை திரிஷாவுக்குப் போட்டுப் பார்த்தால் என்ன என்று இயக்குநர் மணி ரத்னம் ,உலகநாயகன் கமல் ஆகியோரது கற்பனையில் ஜனித்த கருதான் சுகர் பேபியா ? இரு க்கலாம், ஏன் இருக்கக்கூடாது. ஜூன் 5 ம் தேதி தெரிந்து விடக்கூடிய குறுகிய கால சஸ்பென்ஸ்தானே இது.!
“நான்தான் உன்னுடய ஆடம் ” என்று திரிஷாவின் காதோரம் உலகநாயகன் கிசுகிசுத்தது அவரது ‘சுகர் டாடி ‘ என்கிற உரிமையில்தான் என்பது நமது யூகம் .!இனி பாடலுக்குள் செல்லலாம்.
“என்ன வேணும் உனக்கு,கொட்டி ,கொட்டிக் கிடக்கு ! இன்னும் என்ன வேணும், சொர்க்கம் இங்கு இருக்கு!” என தொடங்கும் வரிகளில் ஏஆர் ரகுமானின் போதை இருக்கிறது. ‘பெக்கார்டி ‘யின் முதல் ரவுண்டு மயக்கம்.!
அரை பாவாடை தெரிய மெல்லிய வெள்ளைப்புடவை, கை இல்லாத வெள்ளை ரவிக் ,கண்களில் காந்தம் என ஆடுகிற திரிஷாவை பார்த்தபோது நமது மனது ஜர்க் ஆகியது. குண்டர்களது அராஜக ஆடுகளத்தில் கருப்பு ஆடைகளுடன் ஆண் பெண் கலந்து ஆடுகிறபோது குறுக்கே ஒருவன் கேமராவையை இயக்கியபடி ஓடியதினால் .. அந்த காட்சியின் தன்மை என்னவாக இருக்கும் என்கிற ஐயம் வராமல் இல்லை. ஆனால் இயக்குநர் பார்வையில் அது வேறாக இருக்கலாம் அல்லவா?
திரிஷா சுகர் பேபிதான். அவரது ஆடல் பாடல் நிகழ்வுக்கு எதிரிகளை வரவழைத்து பொறி வைத்து போட்டுத் தள்ளுகிற ரங்கராய சக்திவேலரின் திட்டமாகவும் இருக்கலாம். இதைதானே திரிஷா தனது பாடலில் “இப் லவ் இஸ் எ கிரைம் . மை டாடி இஸ் கிரிமினல் . கிரிமினல்,கிரிமினல் “என அழுத்தம் கொடுத்திருக்கிறார் . அவளது சுகர் டாடி ஆச்சே,!
“கள்ளம் உள்ள நெஞ்சு ,காதலென்ற நஞ்சு ,கண்ணை மூடிக் கொண்டு ,என்ன மட்டும் கொஞ்சு “என்று உச்சம் தொடும் குரலில் அணைக்கவா அணைக்கவா என அழைக்கிறபோது என்ட்ரி எஸ். டி. ஆர். ! புடை சூழ.! திரிஷாவின் முகம் மாறுகிறது. !எதன் குறியீடு?
இதே நேரத்தில் நாசர் ,இன்னும் சிலர் அங்கு வந்தது நமது எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.
கலியுகம் இது,கடல் எரியிது ,பகை நெருங்குது, படை கொண்டு வா,வா, என்கிற போது பெரிய சக்திவேல் முகத்தில் வெறி இருக்கிறது. இவரது தாடியை மெதுவாக திரிஷா நீவி விடுவதன் வழியாக எல்லாமே நம் திட்டப்படிதான் நடக்கிறது என்கிற உணர்வும் வெளிப்படுகிறது அல்லவா ?
“வருகுது புலி, விலகுது நதி,அடி ,அதிரடி ,எதிரிகள் பலி, வால் நீளம், வேதம் ஓதுது ,வீசும் காத்தில வேஷம் மாறுது “என்று பாடி முடிக்கிறபோது கமல் யார் யாரை வெட்டி வீழ்த்தினார் என்பது தெரியவில்லை ஆனால் பயங்கரமான சண்டை நடந்திருக்கிறது என்பதை முகம் காட்டி விட்டது.
இதை தொடர்ந்து சுகர் பேபி பாடியதுதான் அந்த காட்சியின் அசுரத்தன்மையை வெளிப்படுத்தியது.
“ஐ பே த பைன் டூ த டைம் விதவுட் மைனிங் ஹிம் ,சைனிக்கல் . சைனிக்கல் ,இப் பீயிங்க் ரிச் இஸ் எ சின் ” என இழிவானவராக அடையாளப் படுத்துகிறார் . அது யார் என்பது இயக்குநர் மணியின் ராஜதந்திரமாக இருக்கலாம்.
பொதுவாக சுகர் பேபி பாடலுக்கு வெண் திரை கிழியும் என எதிர்பார்க்கலாம் . ஆண் பெண் இரு பிரிவினரும் ஆடுவார்கள் என்பது எனது கணிப்பு.
–தேவிமணி












