
‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் நடிப்பில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி அவர்களின் இசையில் உருவாகியுள்ள படம் ’ஹரி ஹர வீரமல்லு’. ஜூன் 12ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் நான்காவது பாடலான “டாரா டாரா” வெளியீட்டு விழா சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடந்தது. இப்படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
இயக்குநர் ஜோதி கிருஷ்ணா பேசுகையில்,
“நான் இந்த படத்தில் பணியாற்ற தொடங்கிய பிறகு நான்கு வருடங்களாக தமிழ்நாட்டிற்கு வரவே இல்லை. தமிழ் சினிமாவில் நான் மீண்டும் படம் இயக்குவேனா என்று சந்தேகமாக இருந்தது மேலும் இங்கு இருக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருமே எனக்கு நெருங்கிய நண்பர்கள், அவர்களையும் நான்காண்டுகளுக்கு பிறகு இன்று சந்திப்பதில் மகிழ்ச்சி.
‘ஹர ஹர வீர மல்லு’ படத்தை இயக்கும் போது இவ்வளவு பெரிய ஃபேன் இந்தியா படமாக வரும் என்று நான் சிறிதும் நினைக்கவில்லை. எனக்கு முன்பு என்னுடைய அப்பா பேசினார். நான் சுமார் 8 வருட காலம் படத்தை இயக்காமல் இருந்தேன். அதற்கு காரணம் அஜித் சார் என்னிடம் “அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை. அவரை கவனித்துக் கொள்ளுங்கள். தயாரிப்பு வேலைகளை பாருங்கள். அது உங்களுக்கு நன்றாக வரும்” என்று சொன்னார்.
எவ்வளவு பெரிய ஸ்டார் நம்மைப் பற்றியும் நமது அப்பாவை பற்றியும் சிந்திக்கிறார் என்று அன்றோடு இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தேன். ஆனால் நான் தயாரிக்க வேண்டும் என்றால் அடுத்தடுத்து படங்கள் வேண்டும் என்றேன். நான் நடிக்கிறேன் என்று தொடர்ந்து மூன்று படங்கள் கொடுத்தார். ‘ஆரம்பம்’, ‘என்னை அறிந்தால்’ மற்றும் ‘வேதாளம்’.
ஆனால், இதன் பிறகு அவர் சூர்யா மூவிஸ்க்கு நடிப்பாரா என்று தெரியவில்லை. ஆனாலும், அவர் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் அதை காப்பாற்றுவார்.
எட்டு வருடங்கள் கழித்து பவன் சாரை சந்தித்தேன், அவர் என்னிடம் “எனக்கு ரத்தினம் சாரை ரொம்ப ரொம்ப பிடிக்கும். நீ என்ன செய்வாய் என்று எனக்கு தெரியாது. எப்படியாவது இந்த படத்தை வெற்றி படமாக ஆக்க வேண்டும்” என்று கூறினார்.
பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாரும் என் மீதும் அப்பா மீதும் வைத்திருக்கும் அன்பை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே சமயம் என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதற்காக நாம் நிச்சயம் வெற்றி அடைய வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
பவன் கல்யாண் சார் மிகவும் புத்திசாலி, தனிப்பட்ட இயக்குநரும்கூட. அவர் அரசியல் பொது சேவையில் ஈடுபட்டதால் அவருக்கு இயக்குவதற்கான போதுமான நேரம் இல்லை. ஆனால், இந்தப் படத்தை இந்தியா முழுக்க கொண்டு சேர்க்க வேண்டும் என்று கடினமாக உழைத்து இருக்கிறார். நீங்கள் பார்த்த அசுரனா பாடலை அவரே நடனம் மற்றும் சண்டை காட்சிகளை இயக்கினார். சண்டை காட்சிகள் மட்டுமே 60 நாட்கள் எடுத்திருக்கிறோம்.
பாவன் சாருக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரியும். அதை வைத்து இந்த படத்தில் மிகப் பெரிய சாதனை நிகழ்த்தி இருக்கிறார். இந்த படம் 16-ம் நூற்றாண்டு முகலாயப் பேரரசு ஔரங்கசீப்பின் காலகட்டத்தில் நடக்கும் கதை. பாபி டியோல் ஔரங்கசீப்பாக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் கதையை எழுதும்போது ஔரங்கசீப் என்ன சொல்ல வருகிறார் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அஜந்தா எல்லோரா போன்ற சுற்றுலா இடங்களை பார்வையிட்ட ஒரு குழுவினரை எதிர்ச்சையாக சந்திக்க நேர்ந்தது. அவர்கள் திடீரென்று அவுரங்கசீப்பை திட்டிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அது மிகவும் ஆச்சரியமாக இருந்ததால் அவர்களிடம் பேசினேன்.
அப்போது அவர்கள் “அஜந்தா, எல்லோரா போன்ற இடங்களில் எவ்வளவு சிற்பக் கலைகளை வடித்து வைத்திருக்கிறார்கள். அதை இப்போது அழித்து வருகிறார்கள். வருங்கால சந்ததியர்களுக்கு இதுபோன்ற சிற்பக் கலை இருந்தது தெரியவே கூடாத வகையில் அழித்து வருகிறார்கள்” என்று கூறினார்கள். அந்த ஒரு சின்ன பொறிதான் இப்படத்தை உருவாக்கியது.
பவன் கல்யாண் சார் நம்முடைய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அழிக்கக் கூடாது என்பதற்காக எவ்வாறு போராடுகிறார் என்பது படத்தின் கதை.
இந்தக் கதை எழுதி இரண்டு வருடங்களுக்குப் பிறகு பவன் கல்யாண் சார் துணை முதலமைச்சர் ஆகிறார். அப்போது திருப்பதி சம்பவத்தில் சனாதன தர்மத்தை நிலை நாட்ட குரல் கொடுக்கிறார். இந்த படமும் சனாதன தர்மத்தை நிலை நாட்ட கூடிய ஒரு படம்தான்.
பவன் சார் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம், யாராவது ஒருவர் பிரச்சனையோடு வந்தால் மற்றவர் பிரச்சனையை தன் பிரச்சினையாக பார்த்து அதை தீர்ப்பார். படப்பிடிப்பு இருக்கும் போது அரசியல் சேவைகளையும் பார்த்துக் கொண்டு இடைவிடாமல் நடித்து விட்டு செல்வார்.
அடுத்து, நான் எப்படி உயர்ந்த தரத்தில் ஒரு படத்தை நினைப்பேனோ அதேபோலத்தான் வரணும். ஒவ்வொரு காட்சிகளையும் 5 கேமராவை வைத்து படம் பிடித்தோம். இந்தியாவில் உலகத்தில் உள்ள அனைத்து கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தையும் இதில் பயன்படுத்தி இருக்கிறார், கிட்டத்தட்ட 1000 பேர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படம் வரும்போது இந்த தொழில்நுட்ப வேலைகளுக்காகத்தான் இவ்வளவு வருடங்கள் ஆனது என்று எல்லோருக்கும் தெரியும். அதிலும் கடைசி 15 நிமிடங்கள் யாரும் இதுவரை எதிர்பார்க்காத காட்சிகளாக இருக்கும்.
நிதி அகர்வால் இப்படத்தில் ஆரம்பத்தில் நடிக்கும்போது சிறிது பதட்டமாக இருந்தார். ஆனால் ஒரு காட்சியில் இவர் எதிர்பாராதவிதமாக நிஜ கத்தியை வைக்கும்போது பயந்துவிட்டார். அந்தக் காட்சி படத்தில் யதார்த்தமாக, அற்புதமாக வந்திருக்கிறது.
நாசர் சாருக்கு நன்றி. சத்தியராஜ் சாருக்கும் நன்றி. நான் சத்யராஜ் சாருடைய மிகப் பெரிய ரசிகன். அவர் எம்ஜிஆர் மாதிரி நடிக்கும் பாணி எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை நான் எப்போதும் கதாநாயகனாகத்தான் பார்ப்பேன். ஷோபி அருமையாக நடனக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
கீரவாணி சாரிடம் ஒரு பாடலை எழுதி அதற்கு அவர் இசையமைப்பாரா என்று தயங்கினேன். அவர் பார்த்ததுமே மிகவும் அருமையாக இருக்கிறது என்று இசையமைத்தார். மேலும் அந்த பாடலை பவன் சார் பாடினால் நன்றாக இருக்கும் என்று விருப்பப்பட்டார். இதைக் கேட்டதும் பவன் சாரும் ஆர்வம் ஆகிவிட்டார். ஆனால், இவர் விஜயவாடாவிலும் அவர் ஹைதராபாதிலும் இருந்தார்கள். உடனே தன்னுடைய குழுக்களை அழைத்து விஜயவாடாவிற்கு சென்று பவன் கல்யாண் சாரை நேரலையில் பாட வைத்து பதிவு செய்தார்.
தோட்டதரணி சார் இந்த வயதிலும் ஆர்வமாக உழைப்பதே பார்க்கும்போது சினிமாவை எவ்வளவு நேசிக்கிறார் என்பது புரிந்தது. ஆனால், இப்போது இருக்கும் தலைமுறையினர் 25% கூட வேலை செய்வதில்லை.
வரும் ஜூன் 12-ம் தேதி படம் வெளியாகிறது. அதற்கு பிறகு இந்தியாவில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை இப்படம் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த படம் வெளியானதும் விரைவில் இதனுடைய 2-ம் பாகமும் வெளியாகும்.” என்றார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில்,
“இப்படம் 5 வருடங்கள் காத்திருந்து பவன் கல்யாண் அவர்கள் துணை முதலமைச்சரான பின்பு வெளியாகிறது. இப்படம் நிச்சயம் வெற்றி பெறும். ரத்னம் சார் விஜய், அஜித்துடன் மூன்று படங்கள் செய்திருக்கிறார். ஆனால், அவருக்கு ஒரே ஆண்டில் நான் 3 படங்கள் இயக்கியுள்ளேன். ‘நட்புக்காக’ படத்தில் மட்டுமல்லாமல், ‘படையப்பா’ படத்திலும் ஜோதி கிருஷ்ணா அவர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது.
அந்த காலம் வேறு. இப்போது நிறைய மாறியுள்ளது. இக்கட்டத்தில், VFX கூடிய பிரம்மாண்டமான படத்தை இயக்கிய ஜோதி கிருஷ்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள். இதற்கு பின், நிறைய வெற்றிப் படங்கள்தான் நீங்கள் இயக்க வேண்டும். “ஜோதி இனி பிரகாசமாக இருக்கும். நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் ரத்னம் சார்.” என்றார்.
கதை ஆசிரியர் பூபதி ராஜா பேசுகையில்,
“இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதைக்காக நான் ஜோதி கிருஷ்ணா அவர்களுடன் 5 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். “ஹரி ஹர வீர மல்லு” என்ற தலைப்பே இப்படத்தின் கதையை சொல்லும். அதாவது, படைத்தல், காத்தல், அழித்தல். என்பதுதான் இப்படத்தின் கரு. நம் கலாச்சாரத்தை காப்பாற்றுவதற்காக ஒரு மனிதனின் போராட்டம்தான் இப்படத்தின் கதை.
இப்படத்தின் கருத்தை சொல்ல சரியான ஆள் யார் என்றால் அது பவன் கல்யாண் அவர்கள்தான். நான் கதாசிரியர் பாலமுருகனின் மகன். இப்போது தெலுங்கு சினிமாவில் இருக்கிறேன். சிரஞ்சீவி சார் அவர்கள் என்னை அறிமுகப்படுத்திய காரணத்தால் எனக்கு 30 ஆண்டுகளாக பவன் கல்யாண் சார் அவர்களை தெரியும்.
அப்போது எப்படி இருந்தாரோ இப்போதும் அப்படியே இருக்கிறார் எவ்வித மாற்றமும் இல்லை. இக்கதையை சரியாக சொல்ல ஒரு ஆள் வேண்டும் அது ஜோதி கிருஷ்ணா அவர்கள்தான். அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் அதிக கவனம் செலுத்தியவர். அவ்வளவு கச்சிதமான வேலை அவருடையது. அதற்கு பிறகு தான் அவர் வெளிநாடு சென்று படித்ததெல்லாம் எனக்கு தெரியும்.
பான்-இந்தியா படங்களின் காரணகர்த்தா ஏ.எம்.ரத்னம் சார் அவர்கள். அவ்வளவு பெரிய உழைப்பு அவருடையது. ஒரு படம் வெற்றி பெறுவதற்கு அவர் போரடிக் கொண்டிருக்கிறார், அந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். கீரவாணி சார் அவர்களின் இசை இப்படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது பத்திரிக்கை நண்பர்களின் கடமை, அதை செய்வீர்கள் என்று நம்புகிறேன்.. நன்றி” என்றார்.
நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசுகையில்,
“என் இயக்குநர் நெல்சன் அவர்களுக்கு நன்றி தெரிந்துகொண்டு என் உரையை ஆரம்பிக்கிறேன். இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. பலரும் சொன்னது போல், ஏ.எம்.ரத்னம் சார் அவரின் படத்திற்காக பெரும் பங்கை செய்வார் அந்த வகையில் இப்படத்தின் “டாரா டாரா” பாடலுக்கு நடன இயக்குனராகவும் அவர் பணியாற்றியுள்ளார். பாடலின் பாதி நடனம் ஷோபி மாஸ்டர் இயக்கியிருந்தால் மீதியை ஏ.எம்.ரத்னம் சார்தான் இயக்கியுள்ளார். இந்த வாய்ப்பளித்ததற்கு ஏ.எம்.ரத்னம் சார் அவர்களுக்கு நன்றி.” என்றார்.
நடிகை நிதி அகர்வால் பேசுகையில்,
“ரத்னம் சார் சினிமாவின் மீது அதீத ஈடுபாடு கொண்டவர். படப்பிடிப்பு தளத்திற்கு முதல் ஆளாக வருவதும் அவர்தான். கடைசி ஆளாக கிளம்புவதும் அவர்.தான். அவர் இப்படத்தை 5 ஆண்டுகளாக தோளில் சுமந்து சென்றுள்ளார். அவருக்காகவே இப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும்.
ஜோதி கிருஷ்ணா சார் இப்படத்தில் நுழைந்த முதல் நாள் முதலே அவர் என்னை வழிநடத்த ஆரம்பித்து விட்டார். அவர் எனக்கு மிகப் பெரும் பலமாக துணை இருந்தார். கீரவாணி சார் அவைகளை பற்றி நான் முந்தைய மேடையில் பேசவில்லை. இப்படி ஒரு இசையை எங்களுக்காக அமைத்ததற்கு மிக்க நன்றி சார். உங்களின் இசைக்கு பலரும் விரைவில் நடமாடுவார்கள். இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.
என்னை இந்த அளவிற்கு சிறப்பாக நடனமாட வைத்த ஷோபி மாஸ்டர் அவர்களுக்கு நன்றி. நான் இதுவரை பணியாற்றியதில் மிக சிறந்த தொழில் நுட்ப கலைஞர் என்றால் அது மனோஜ் சார்தான். அவருடன் மீண்டும் பணியாற்ற ஆசைப்படுகிறேன். இப்படத்தில் நான் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்க்கு மிகவும் பெருமையாக உணருகிறேன். இப்படத்தின், கதை மீதும், திரைக்கதை மீதும் அதீத நம்பிக்கை உள்ளது. இப்படத்தை அனைவரும் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்.. நன்றி” என்றார்.
இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி பேசுகையில்,
“இந்த உலகத்தில் இருவர் கோபப்பட்டு நான் பார்க்க ஆசைப்படுகிறேன். அதில் ஒருவர் சித்ரா மேடம் அவர்கள். மற்றொருவர் ஏ.எம்.ரத்னம் அவர்கள். என்ன நடந்தாலும் கோபப்படாமல் சாந்தமூர்த்தியாக இருப்பார் அவர். இப்படத்தின் ஹீரோ அவர்தான். அவருக்கு இப்படம் மிகப் பெரிய வெற்றியை தர வேண்டுமென ஆண்டவனை வேண்டுகிறேன். இப்படம் வெற்றி பெற்றால், அதற்கு அதிக சந்தோசப்படும் நபர் நான்தான்.
அனைவரும் நான் நன்றாக இசையமைத்திருக்கேன் என்று கூறுகிறார்கள், நன்றாக செய்வது ஒரு விஷயம் என்றால். நன்றாக செய்ய விடுவது ஒரு விஷயம். என்னை இயக்குனர் ஜோதி நன்றாக இசையமைக்கவிட்டார். நான் நினைத்ததை செய்யவிட்ட ஜோதிக்கு நன்றி.” என்றார்.












