தமிழ்த் திரையுலகில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை ஹில்டன் ஹோட்டலில் இன்று மாலை நடந்தது.இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், செயலாளர் ஞானவேல் ராஜா, திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு,
1.) GST என்கிற புதிய வரிக் கொள்கையில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது எங்கள் திரைப்பட துறையே.
2.) திரைப்படம் தயாரிப்பது என்பது ஒரு கலை. ஒரு படைப்பு. அப்படி தயாராகி மக்கள் பார்வைக்கு செல்லும் போது மட்டுமே அங்கு வணிகம் என்கிற நிலை வருகிறது எனவே திரைப்படம் முழுமையாகி வெளியிட தயாராகும் வரை மிகவும் குறைந்த பட்ச வரி விதிப்பாக 4 அல்லது 5 சதவிகிதம் மட்டுமேGST யாக இருக்க வேண்டும்.
3.) திரையரங்குகளில் திரைப்படம் வெளியிடும் போது தமிழ் திரைப்படங்களுக்கு குறைவாகGST விதிக்கப்படவேண்டும்.
4.) மத்திய அரசு புதிய மற்றும் உரிமை இல்லாத திரைப்படங்களை பதிவேற்றம் செய்பவர்கள் மற்றும் பதிவிறக்கம் செய்பவர்கள் இதே தொழிலாக செய்து கொள்ளையடிக்கும் தொலைபேசி மற்றும் இணைய சேவை நிறுவனங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். மத்திய அரசாங்கம் இதற்காக தனி கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.
5.) புதிய திரையரங்குகளுக்கு 5 வருடம் GST மற்றும் பலவித வரிகளில் இருந்து முழுவிலக்கு அளிக்க வேண்டும்.
6.) திரைப்பட தொழிலையும் அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக நினைத்து மற்ற தொழில் செய்வோருக்கு இருக்கும் அனைத்து வசதிகளையும் மரியாதையையும் அளிக்க வேண்டும். இது எங்கள் 75 வருட கோரிக்கை.
மாநில அரசுக்கு எங்கள் வேண்டுகோள்
1.) திரையரங்கு கட்டணமுறையில் பெரும் மாற்றங்கள் கொண்டு வர வேண்டிய காலம் இது. திரையரங்குகளின் தன்மை , இருக்கும் இடம் , ரசிகர்களுக்கு தரும் வசதிகள் , பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் சிறப்பு கட்டணம் என பலவகை மாற்றங்கள் கொண்டு வர அரசு எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
2.) திருட்டு வி.சி.டி ஒழிப்பில் மாநில அளவில் காவல்துறையின் சிறப்பு தடுப்பு பணியில் குறைந்தபட்சம் 1௦௦௦ நபர் கொண்ட டீம் அமைக்க பட வேண்டும். இப்போது இருக்கும் 96 நபர்கள் கொண்ட டீம் போதவில்லை.
3.) திரைப்பட துறையினரே இந்த பைரசி தடுப்புக்கு என ஒரு அணி அமைத்து போராட அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.
4.) அரசு கேபிள் தலைமையில் உள்ள கேபிள் டி.வி ஆபரேட்டர்களும் மற்றும் சில தனியார் கேபிள் டிவி தலைமையில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எங்கள் திரைப்படங்களை முழுமையாகவும் சில காட்சிகளாகவும் , பாடல் காட்சிகளாகவும் 24மணி நேரமும் தொடர்ந்து ஒளிபரப்பும் கொடுமை நிகழ்ந்து வருகிறது. இதை இரும்பு கரம் கொண்டு அரசு அடக்க வேண்டும்.
5.) உரிமம் இன்றி திரைப்படங்கள் மற்றும் காட்சிகள் ஒளிபரப்பும் பேருந்துகள் அனைத்திற்கும் அவற்றின் தொழில் உரிமமே ரத்து ஆகும் வகையில் அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
6.) ஒரே இடத்தில் இரு திரையரங்குகள் இருப்பின் அவற்றை “Multiplex” என்ற பெயரிலேயே கருத வேண்டும்.
7.) ஒரு திரையரங்கு உள்ள இடத்தில் இரண்டு அல்லது மூன்று சிறிய திரையரங்குகளாக மாற்றிக்கொள்ளும் உரிமை உரிமையாளர்களுக்கு தரப்பட வேண்டும். அதற்கான அனுமதிகள் எளிமையாக்கப்பட வேண்டும்.
8.) இந்த துரையின் உடனடி வளர்ச்சிக்கு சிறிய அரங்குகள் ( மினி தியேட்டர் ) மாநிலம் முழுவதும் கட்டப்படவேண்டும். இதற்கான அனுமதி முறைகள் எளிதாக்கப்பட வேண்டும். மேலும் திரையரங்குகள் புதிதாக அமைக்கவும் புதுபித்து கொள்ளவும் அனுமதி , விண்ணப்பம் 6௦ நாட்களில் வழங்கப்பட வேண்டும். (தெலுங்கானா அரசு இதனை சிறப்பாக அமுல்படுத்தியுள்ளது.) உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டம் முடிந்து பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால் கூறியதாவது,
“மே 30-ம் தேதி முதல் நாங்கள் இந்தப் போராட்டல்ம்த்தை நடத்தவுள்ளோம். எந்ததொரு திரையரங்கிலும் படம் ஓடாது, படப்பிடிப்பும் நடக்காது என்று தயாரிப்பாளர் சங்கமும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் மற்றும் முக்கிய அமைப்புகள் இணைந்து முடிவு எடுத்துள்ளோம். திருட்டு விசிடியால் தயாரிப்பாளர்களுக்கு வரும் வருமானம் குறைந்து விட்டது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் மீண்டும் கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம். திருட்டு விசிடியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டவிரோத இணையதளம் மூலம் படம் டவுன்லோட் செய்வதையும் தடுக்க வேண்டும். சிறிய திரையரங்குகள் திறக்க அரசு கொள்கைகளை வகுக்க வேண்டும். ந தமிழ் திரையுலகிற்கு மே 30-ம் தேதிக்குள் நல்லது நடக்கும் என நம்புகிறோம். சிறு தயாரிப்பாளர்கள் மானியத்திற்காக 10 வருடங்களாக காத்திருக்கிறார்கள். 7 வருடங்களாக தமிழக அரசு சார்பில் எந்ததொரு விருதும் வழங்கப்படவில்லை. அனைவருமே ஒரு இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆகையால் மே 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யவுள்ளோம். எந்த ஒரு பணியுமே நடைபெறாது. எங்களால் படம் எடுப்பதற்கான ஒரு நிம்மதியான சூழல் வரும்வரை வேலை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது,” என்றார்.