நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு கடந்த 27 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றியவர் பி.டி.செல்வகுமார். தற்போது கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருந்து வரும் பிடி செல்வகுமார், புலி படம் வெளியானதில் இருந்து அவரை விஜய் புறக்கணித்து வந்ததாக கூறப்பட்டு வந்தது.
புஸ்ஸி ஆனந்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, விஜய் ரசிகர் மன்ற நடவடிக்கைகளிலிருந்தும் பிடி செல்வகுமாரை விஜய் புறக்கணித்து வந்ததாகவும், ஒரு கட்டத்தில் அவரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிடி செல்வகுமார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரின் ஆதரவாளராக இருந்து வந்தார். இந்நிலையில் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். பிடி செல்வகுமாருக்கு கட்சியில் எந்த பொறுப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில், பி.டி.செல்வகுமார் கடந்த சில மாதங்களாக விஜய்யை கடுமையாக விமர்சித்து வந்தார். “விஜய்யுடன் 27 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். விஜய் இப்படி மாபெரும் நட்சத்திரமாக வளர்ந்து இருப்பதில் என்னுடைய பங்கும் இருக்கிறது. என்றும், தற்போது விஜய்யைச் சுற்றி நிறைய சகுனிகள் இருக்கிறார்கள். அவர்களை அவர் அடையாளம் காண வேண்டும். நல்லவர்களை விஜய் தன்னுடன் வைத்துக்கொள்ளவேண்டும். என்றும் கூறி வந்தார். இந்நிலையில், பி.டி.செல்வக்குமார் இன்று காலை 100க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.












