ஜனவரி 2ம் தேதி, தமிழ்நாடு எங்கும் திரையரங்குகளில் வெளியான அனலி திரைப்படம், பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒரே இரவில் நடக்கும் கதை, தாதா கும்பலிடம் சிக்கும் தாயும் மகளும் எப்படி தப்பிக்கிறார்கள் என்கிற விறுவிறுப்பான திரைக்கதை, அனலடிக்கும் சண்டைக் காட்சிகள்… என ரசிகர்களை கவர்ந்திருக்கிறது அனலி.முதல் படத்திலேயே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி முத்திரை பதித்து இருக்கிறார் அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா.
” என் சொந்த ஊர் சென்னைதான். என் மாமா திரைப்பட ஒளிப்பதிவாளராக இருந்தார். அதனால் என் பத்து வயதிலேயே ஷூட்டிங் ஸ்டாட் செல்ல வாய்ப்பு கிடைத்தது. அப்போதிலிருந்தே சினிமா மீது பெரிய ஆர்வம் வந்துவிட்டது.ஆனாலும் வாழ்க்கையில் பொருளாதார தேவையை சமாளிக்க வேண்டும் என்பதால் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்றேன்.. பிறகு சொந்தமாக தொழில் துவங்கினேன். ஆனாலும் சினிமா ஆர்வத்தை விடவில்லை.
தற்போது த.வெ.க.வில் பிரபலமாக இருக்கும் நடிகர் சவுந்தர்ராஜா வைத்து, ‘கண்ணீரில் நனைந்த பூக்கள்’ என்ற குறும்படத்தை இயக்கினேன். 54 நாடுகளைச் சேர்ந்த 360 குறும்படங்கள் கலந்துகொண்ட போட்டியில், சிறந்த படமாக இது தேர்வானது.இந்த நிலையில்தான், அனலி படத்தை தயாரித்த நிறுவனத்தின் முந்தைய படத்தில் போஸ்ட் புரடக்சன் பணி செய்யும் சூழல் ஏற்பட்டது. என் திறமையை பார்த்த தயாரிப்பாளர் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தார்.
பலரும், “முதல் படமே ஹீரோயின் ஓரியண்ட் சப்ஜெக்டாக எடுத்து இருக்கிறீர்களே.. இந்த துணிச்சல் எப்படி வந்தது” என்கிறார்கள்.கவனித்துப் பார்த்தால், ஆண்களைவிட பெண்கள் துணிச்சலும் தியாக உள்ளமும் உள்ளவர்கள் என்பது புரியும். அவர்களது இந்த உயரிய குணத்தை வெளிப்படுத்த வேண்டும் என நினைத்தேன். அதே நேரம், த்ரில்லர் பாணி கதை எனக்குப் பிடிக்கும். ஆகவே அதை அடிப்படையாக வைத்து அனலி படத்தை எடுத்தேன். படம் எல்லோரையும் கவர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அனலி படத்துக்காக, பத்தாயிரம் கண்டெய்னர்கள் உள்ள இடத்தில் படப்பிடிப்பு நடத்த விரும்பினேன். அத்தனை கண்டெய்னர்கள் கொண்டு வர பெரும் செலவு ஆகும். ஆகவே கண்டெய்னர்கள் இருக்கும் இடத்தில் படப்பிடிப்பை நடத்தினேன். அங்கே குறைந்த பொருட்செலவில் செட் போட்டோம். ஆனால் பிரம்மாண்டமாக இருந்தது.தவிர, 60 நாட்கள் எடுக்க வேண்டிய படப்பிடிப்பை, 25 நாட்களிலேயே முடித்தேன். அதிலும் 12 நாட்கள்தான் மெயின் ஷூட்டிங். மீதம் 13 நாட்களில் பாடல், மற்றும் சண்டைக் காட்சிகள் எடுத்தோம். குறிப்பாக கலைமாமணி சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் மறக்கவே முடியாது. அந்த அளவு ஒத்துழைப்பு கொடுத்தார். அவரை என் கலைத்துறை தந்தை என்றே சொல்வேன்.
போஸ்ட் புரடக்சன் வேலைகளை எட்டே நாளில் முடித்தேன்.
தயாரிப்பாளரும் ஹீரோயினுமான சிந்தியா லூர்டே சிறப்பாக நடித்தார்.
அதே போல முக்கியமான வில்லன் வேடத்துக்கு, சக்தி வாசுதேவன் பொருத்தமாக இருப்பார் என அணுகினேன். அவரும் ஒப்புக்கொண்டு அருமையாக நடித்துக் கொடுத்தார். அவர் பேசுவது எம்.ஆர்.ராதா வாய்ஸ் என பலர் நினைக்கிறார்கள். அது இல்லை.. இந்திரன் சந்திரன் படத்தில் வில்லன் கமல் சார் வாய்ஸ் அது. ஒளிப்பதிவாளர் ராமலிங்கம், இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி, எடிட்டர்,ஜெகன் சக்கரவர்த்தி, கலை இயக்குனர் தாமு MFA இவர்களுடன் பணியாற்றது மிகவும் சிறப்பாக இருந்தது.
அடுத்து ஒரு பெரிய நிறுவனத்தின் படத்தை இயக்க கமிட் ஆகி இருக்கிறேன். பொங்கலுக்குப் பிறகு அறிவிப்பு வெளியாகும் அதே போல பிரபல ஓ.டி.டி. ஒன்றில் சீரிஸ் இயக்கவும் உள்ளேன். தவிர பெரும் பொருட் செலவில், ஆல்பம் சாங் எடுக்கும் பணியும் துவங்க இருக்கிறது.
மொத்தத்தில், 2026, மிகப் பொலிவுடன் உற்சாகமாக துவங்கி இருக்கிறது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!” என்றார்












